< எசேக்கியேல் 47 >
1 ௧ பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.
மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலய புகுமுக வாசலுக்குக் கொண்டுவந்தான். ஆலய வாசற்படியின் கீழிருந்து கிழக்குநோக்கி தண்ணீர் ஓடிவருவதை நான் கண்டேன். ஆலயம் கிழக்கு நோக்கியிருந்தது. தண்ணீர் ஆலயத்தின் தென்புறத்தின் கீழாக பலிபீடத்தின் தெற்கிலிருந்து வந்தது.
2 ௨ அவர் என்னை வடக்கு வாசல் வழியாகப் புறப்படச்செய்து, என்னை வெளியிலே கிழக்கு திசைக்கு எதிரான வெளிவாசல்வரை சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபக்கத்திலிருந்து பாய்கிறதாக இருந்தது.
பின்பு அவன் என்னை வடக்கு வாசல் வழியே கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலின் வெளிப்புறத்தைச் சுற்றி அழைத்துக்கொண்டு போனான். தெற்குப்புறமிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.
3 ௩ அந்த மனிதன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படும்போது ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; தண்ணீர் கணுக்கால் அளவாக இருந்தது.
அம்மனிதன் தனது அளவுநூலைப் பிடித்தபடி, கிழக்குப் புறமாய்ப்போனான். அவன் ஆயிரம் முழ தூரத்தை அளந்து, பின்னர் கணுக்கால் அளவு ஆழமுள்ள தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றான்.
4 ௪ பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாக இருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாக இருந்தது.
மேலும் அவன் ஆயிரம் முழ தூரம் அளந்து முழங்கால் அளவு ஆழமுள்ள தண்ணீர் வழியே என்னை அழைத்துச் சென்றான். பின்னும் அவன் இன்னும் ஆயிரம் முழ தூரம் அளந்து இடுப்பளவு ஆழமுள்ள தண்ணீர் வழியாக என்னை அழைத்துச் சென்றான்.
5 ௫ பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாக இருந்தது; தண்ணீர் நீச்சல் ஆழமும் கடக்கமுடியாத நதியுமாக இருந்தது.
இன்னும் ஆயிரம் முழ தூரத்தை அவன் அளந்தான். ஆனால், இப்பொழுதோ அது என்னால் கடக்கமுடியாத ஒரு ஆறாக இருந்தது. ஏனெனில் தண்ணீர் மட்டம் உயர்ந்து நீந்தக்கூடிய ஆழமாய் இருந்தது. அது ஒருவனாலும் கடக்கமுடியாத ஆறாக இருந்தது.
6 ௬ அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
அவன் என்னிடம், “மனுபுத்திரனே, இதை நீ காண்கிறாயா?” என்று கேட்டான். பின்பு அவன் என்னை ஆற்றின் கரைக்கு நடத்திவந்தான்.
7 ௭ நான் நடந்துவரும்போது, இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான மரங்கள் இருந்தது.
நான் அங்கு வந்தபோது, ஆற்றின் இரு கரைகளிலும் ஏராளமான மரங்களைக்கண்டேன்.
8 ௮ அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், வனாந்திரவழியாக ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.
அவன் என்னிடம், “இந்தத் தண்ணீர் கிழக்குப் பிரதேசத்தில் பாய்ந்து, யோர்தான் பள்ளத்தாக்கினுள் இறங்கி, சவக்கடலில் விழுகிறது. இது சவக்கடலில் விழும்போது, அங்குள்ள உப்புத் தண்ணீர் நன்னீராகிறது.
9 ௯ நடந்தது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் வாழும் உயிரினங்கள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மீன்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடம் எங்குமுள்ள யாவும் ஆரோக்கியமடைந்து பிழைக்கும்.
இந்த ஆறு ஓடும் இடமெல்லாம் உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக வாழும். இந்தத் தண்ணீர் அங்கே ஓடி, உவர்ப்புத் தண்ணீரை நன்னீராக்குவதால், அங்கு பெருந்தொகையான மீன்கள் இருக்கும். எனவே இந்த ஆறு ஓடுமிடங்களிலெல்லாம் இருக்கும் அனைத்தும் உயிர்வாழும்.
10 ௧0 அப்பொழுது என்கேதி துவங்கி எனெக்லாயிம்வரை மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற இடமாக இருக்கும்; அதின் மீன்கள் மத்திய தரைக் கடலின் மீன்களைப்போலப் பல வகையான மீன்கள் ஏராளமுமாக இருக்கும்.
கரையின் நெடுகிலும் மீனவர் நிற்பார்கள். என்கேதி தொடக்கம், என் எக்லாயீம்வரை வலை உலர்த்தும் இடங்கள் இருக்கும். மத்திய தரைக்கடலின் மீன்களைப்போல பலவித மீன்கள் அங்கிருக்கும்.
11 ௧௧ ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய சதுப்பு பகுதிகளும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.
ஆனாலும் சேற்று நிலங்களிலும், சதுப்பு நிலங்களிலும் உள்ள உவர்ப்புத் தண்ணீர் நன்னீராக மாட்டாது. அவை உப்புக்காகவே விட்டுவிடப்படும்.
12 ௧௨ நதியோரமாக அதின் இக்கரையிலும் அக்கரையிலும் சாப்பிடுவதற்கான எல்லாவித மரங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் பழங்கள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுபழங்களைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் பழங்கள் சாப்பிடுவதற்கும், அவைகளின் இலைகள் உதிர்ந்து போகாது.
ஆற்றின் இரு கரைகளிலும் எல்லாவித பழமரங்களும் வளரும். அவற்றில் இலைகள் உதிர்வதுமில்லை, பழங்கள் இல்லாமல் போவதுமில்லை. பரிசுத்த ஆலயத்திலிருந்து அவற்றினுள் தண்ணீர் பாய்வதால் அவை மாதந்தோறும் பழம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அவற்றின் பழங்கள் உணவுக்காகவும் இலைகள் சுகம் கொடுப்பதற்காகவும் இருக்கும்.”
13 ௧௩ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் உரிமைச்சொத்தாக நாட்டைப் பிரிக்கவேண்டும். யோசேப்புக்கு இரண்டு பங்குகள் கொடுக்கவேண்டும். பிரித்துக் கொடுக்கவேண்டிய எல்லைகள் இவையே:
14 ௧௪ சகோதரனுடன் சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்; அதை உங்களுடைய தகப்பன்மார்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்துக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.
நீ அவர்கள் மத்தியில் அதைச் சமமாகப் பிரித்துக்கொடுக்கவேண்டும். இந்த நாடு உங்கள் சொத்துரிமையாகும். ஏனெனில் நான் அதைக் கொடுப்பேன், என்று உங்கள் முற்பிதாக்களுக்கு என் உயர்த்திய கையால் ஆணையிட்டேன்.
15 ௧௫ தேசத்தின் எல்லையாவது: வடக்கு பக்கம் மத்திய தரைக் சமுத்திரம் துவங்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாக இருக்கிற,
“நாட்டின் எல்லைகள் இவ்விதமாகவே அமையவேண்டும், “வட எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து, தொடங்கி அது எத்லோன் வீதியோடே போய், ஆமாத் நுழைவு வாசலைக் கடந்து, சேதாத் நகரத்திற்குப் போகும்.
16 ௧௬ ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையுடன் சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
தமஸ்குவுக்கும் ஆமாத்துக்கும் இடையிலுள்ள பெரோத்தா, சிப்ராயிம் ஆகிய நகரமெங்கும் சென்று, அவ்ரான் எல்லையிலுள்ள ஆசேர் அத்திக்கோன் நகரம் வரைசெல்லும்.
17 ௧௭ அப்படியே மத்திய தரைக் கடலிலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடக்கு மூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடக்கு பக்கம்.
இந்த எல்லையானது மத்திய தரைக்கடலிலிருந்து ஆசார் ஏனான்வரை செல்லும். பின்பு தமஸ்குவுக்கு வடக்கேபோய் ஆமாத்தின் தெற்கை அடையும். இதுவே வட எல்லையாயிருக்கும்.
18 ௧௮ கிழக்கு பக்கத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்திற்கும், நடுவாகவும் கிழக்கு கடல்வரை இருக்கும் எல்லையாக அளப்பீர்களாக; இது கிழக்கு பக்கம்.
கிழக்குப்பக்கத்தின் எல்லை, தமஸ்குவுக்கும் அவ்ரானுக்கும் இடையிலுள்ள ஒரு முனையிலிருந்து செல்லும். இது யோர்தான் வழியாக கீலேயாத்துக்கும் இஸ்ரயேல் நாட்டுக்கும் இடையே தொடர்ந்து செல்லும். சவக்கடலிலுள்ள தாமார்வரை யோர்தான் நதியே எல்லையாகும். இதுவே கிழக்கு எல்லையாயிருக்கும்.
19 ௧௯ தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை மத்திய தரைக் கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம்.
தெற்குப் பக்கத்திலுள்ள எல்லை, தாமாரிலிருந்து காதேஸ் மேரிபாவின் நீர்நிலைகளை அடைந்து, எகிப்தின் நீரோடை வழியாக மத்திய தரைக்கடல்வரை செல்லும். இதுவே தெற்கு எல்லையாயிருக்கும்.
20 ௨0 மேற்கு பக்கம் அந்த எல்லை துவங்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேரும்வரை இருக்கிற மத்திய தரைக் கடலே; இது மேற்கு பக்கம்.
மேற்குப் பக்கத்தில் மத்திய தரைக்கடலே அதன் எல்லையாகும். அது லேபோ ஆமாத் எதிரேயுள்ள இடம்வரை செல்லும். இதுவே மேற்கு எல்லையாயிருக்கும்.
21 ௨௧ இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக.
“இஸ்ரயேலின் கோத்திரங்களின்படியே நீங்கள் நாட்டை உங்களுக்குள் பங்கிடவேண்டும்.
22 ௨௨ உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப்பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சொந்தமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் மக்களில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களுடன் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சொத்திற்கு உடன்படுவார்களாக.
உங்களுக்கும் உங்கள் மத்தியில் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கும் அந்நியருக்கும் சொத்துரிமையாக நாடு பங்கிட்டுக் கொடுக்கப்படுதல் வேண்டும். அவர்கள் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தவர்களைப்போல கணிக்கப்படுதல் வேண்டும். உங்களோடு அவர்களும் இஸ்ரயேல் கோத்திரங்களின் மத்தியில் சொத்துரிமையைப் பெறவேண்டும்.
23 ௨௩ அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் வாழ்கிறானோ, அங்கேயே அவனுடைய சொத்துரிமையை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்றான்.”