< எசேக்கியேல் 46 >
1 ௧ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும்.
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கிழக்கு நோக்கியிருக்கும் உள்முற்றத்து வாசல், ஆறு வேலை நாட்களும் மூடப்பட்டிருக்கவேண்டும். ஆனால், ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் அது திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
2 ௨ அப்பொழுது இளவரசன் வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, வாசற்படி அருகில் நிற்கவேண்டும்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கவேண்டும்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருப்பதாக.
அரசன் வெளியிலிருந்து இந்த நுழைவு வாசலின் மண்டபத்தின் வழியாக உள்ளே வந்து, வாசல் நிலையருகில் நிற்கவேண்டும். ஆசாரியர்கள் அவனுடைய தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். அவன் நுழைவு வாசலின் முகப்பில் நின்று வழிபாடு செய்தபின், வெளியே போகவேண்டும். ஆனால் சாயங்காலம்வரை வாசல் மூடப்படக்கூடாது.
3 ௩ தேசத்து மக்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆராதனை செய்யவேண்டும்.
ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் நாட்டு மக்கள் யெகோவாவின் முன்னிலையில் புகுமுக நுழைவாசலில் வழிபாடு செய்யவேண்டும்.
4 ௪ அதிபதி ஓய்வுநாளிலே யெகோவாவுக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
ஓய்வுநாளில் அரசனால் யெகோவாவுக்கென்று கொண்டுவரப்படும் தகன காணிக்கையானது, பழுதற்ற ஆறு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுமாக இருக்கவேண்டும்.
5 ௫ ஆட்டுக்கடாவுடன் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் உணவுபலியாகத் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும்.
செம்மறியாட்டுக் கடாவுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கையானது ஒரு எப்பா அளவுடையதாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கை அரசன் விரும்பிய அளவினைக் கொண்டதாயிருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு எப்பா அளவு தானியத்துடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயும் செலுத்தப்படுதல் வேண்டும்.
6 ௬ மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,
அவன் அமாவாசைத் தினத்திலே பழுதற்ற இளங்காளையொன்றையும், ஆறு செம்மறியாட்டுக் குட்டிகளையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் செலுத்தவேண்டும்.
7 ௭ உணவுபலியாக இளங்காளையுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாக, ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும்.
அவன் ஒரு காளையுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், செம்மறியாட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பிய அளவு தானிய காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். ஒவ்வொரு எப்பா தானிய காணிக்கைளுடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
8 ௮ இளவரசன் வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அது வழியாகத் திரும்பப் புறப்படவேண்டும்.
அரசன் உட்செல்லும்போது அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவு வாசலின் வழியாகப்போய் அதே வழியாகவே திரும்பி வரவேண்டும்.
9 ௯ தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக.
“‘நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களில் வழிபாட்டுக்காக யெகோவாவுக்கு முன்வரும்போது வடக்கு வாசல் வழியாக உட்செல்வோர் தெற்கு வாசல்வழியாகவும், தெற்கு வாசல் வழியாக உட்செல்வோர் வடக்கு வாசல்வழியாகவும் வெளியேறவேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாசல் வழியாகத் திரும்பி வெளியேறக்கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாசலுக்கு எதிரே இருக்கும் வாசல்வழியாகவே வெளியேறவேண்டும்.
10 ௧0 அவர்கள் உள்ளே நுழையும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களுடன் உள்ளே நுழைந்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படவேண்டும்.
அரசனும் அவர்கள் மத்தியிலேயே இருந்து அவர்கள் உட்செல்லும்போது உட்சென்று அவர்கள் வெளியேறும்போது வெளியேறவேண்டும்.
11 ௧௧ பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.
பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களிலும் செலுத்தப்படும் தானிய காணிக்கை, ஒரு காளையோடே ஒரு எப்பா அளவுடையதாகவும், ஒரு செம்மறியாட்டுக் கடாவோடே ஒரு எப்பா அளவுடையதாகவும் இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளோடு, அவரவர் விரும்பிய அளவு தானியமும் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு எப்பா அளவு தானியத்திற்கு ஒரு ஹின் அளவு எண்ணெயும் கொண்டதாயிருக்க வேண்டும்.
12 ௧௨ இளவரசன் உற்சாகமான தகனபலியையோ, சமாதான பலிகளையோ யெகோவாவுக்கு உற்சாகமாகச் செலுத்த வரும் போது, அவனுக்குக் கிழக்கு நோக்கி இருக்கும் வாசல் திறக்கப்படவேண்டும்; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன்னுடைய தகனபலியையும் தன்னுடைய சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படவேண்டும்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
“‘அரசன் தகன காணிக்கையையோ, சமாதான காணிக்கையையோ யெகோவாவுக்கு மனப்பூர்வமான காணிக்கையாகச் செலுத்த வரும்போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாசல் அவனுக்காகத் திறக்கப்படவேண்டும். ஓய்வுநாளில் செய்வதுபோலவே, தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் அவன் செலுத்தவேண்டும். பின்பு அவன் வெளியே போகவேண்டும். அவன் வெளியே போனபின் வாசல் மூடப்படவேண்டும்.
13 ௧௩ தினந்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைக்கவேண்டும்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்.
“‘நீங்கள் ஒவ்வொரு நாளும் பழுதற்ற ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஒன்றை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். காலைதோறும் அதைக் கொடுக்கவேண்டும்.
14 ௧௪ அதினோடு காலைதோறும் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறிலொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படி ஒருபடி எண்ணெயிலே மூன்றிலொரு பங்கையும் படைக்கவேண்டும்; இது அன்றாடம் யெகோவாவுக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான உணவுபலி.
அதனோடு தானிய காணிக்கையாக ஆறில் ஒரு எப்பா அளவு தானிய மாவையும் அதில் தெளிப்பதற்காக மூன்றில் ஒரு ஹின் எண்ணெயையும் காலைதோறும் கொடுக்கவேண்டும். யெகோவாவுக்குக் கொடுக்கப்படவேண்டிய இத்தானிய காணிக்கைகள் ஒரு நித்திய கட்டளையாயிருக்கும்.
15 ௧௫ இப்படிக் காலைதோறும் அனுதின தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் உணவுபலியையும் எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
எனவே, செம்மறியாட்டுக் குட்டியும், தானிய காணிக்கையும், எண்ணெயும் தகன காணிக்கையாக காலைதோறும் ஒழுங்காகச் செலுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்படுதல் வேண்டும்.
16 ௧௬ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இளவரசன் தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும்.
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அரசன் தன் உரிமைச்சொத்திலிருந்து தன் மகன்களில் ஒருவனுக்கு அன்பளிப்பொன்றைக் கொடுப்பானாயின், அது அவனுடைய சந்ததிகளுக்கும் சொந்தமாகும். அது அவர்களின் உரிமைச் சொத்தாகவேண்டும்.
17 ௧௭ அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம்வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும்.
ஆயினும், அவன் தன் உரிமைச்சொத்திலிருந்து தனது வேலைக்காரரில் ஒருவனுக்கு ஒரு அன்பளிப்பைச் செய்திருப்பின் அவ்வேலைக்காரன் விடுதலை வருடம்வரை அதை அனுபவிக்கலாம். பின்பு அது அரசனையே சாரும். அவனுடைய உரிமைச்சொத்தோ அவனுடைய மகன்களுக்கு மட்டுமே சொந்தமாயிருக்கும். அது அவர்களுடையதே.
18 ௧௮ இளவரசனானவன் மக்களை பறிமுதல் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் வெளியாக்கி, அவர்களுடைய சொத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாது; என்னுடைய மக்களில் ஒருவரும் தங்களுடைய சொந்தமானதற்கு வெளியாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடி அவன் தன்னுடைய சொந்தத்திலே தன்னுடைய மகன்களுக்கு சொத்து கொடுக்கவேண்டும்.
அரசன் மக்களுடைய உரிமைச்சொத்துக்களில் எதையேனும் எடுத்துக்கொண்டு அவர்களை அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து துரத்திவிடக்கூடாது. அவன் தன் சொந்த நில உரிமைகளிலிருந்தே தன் மகன்களுக்கான உரிமைச்சொத்துக்களைக் கொடுக்கவேண்டும். அப்பொழுது என் மக்கள் எவருமே தங்கள் நில உரிமைகளிலிருந்து வேறுபிரிக்கப்பட மாட்டார்கள்.’”
19 ௧௯ பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாக என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அந்த இடத்தில் மேற்கே இருபக்கத்திலும் ஒரு இடம் இருந்தது.
பின்பு அந்த மனிதன், என்னை வடக்கு நோக்கியிருந்த ஆசாரியருடைய பரிசுத்த அறைகளுக்குப்போகும் வாசலின் பக்கமாயிருந்த, நுழைவு வாசல்வழியாகக் கொண்டுவந்தான். அங்கே அவன் மேற்கு இருபுறத்திலும் ஒரு இடத்தை எனக்குக் காண்பித்தான்.
20 ௨0 அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும், பாவநிவாரணபலியையும், உணவுபலியையும் ஆசாரியர்கள் வெளிமுற்றத்திலே கொண்டுபோய் மக்களைப் பரிசுத்தம்செய்யாதபடி, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான இடம் இதுவே என்றார்.
அவன் என்னிடம், “ஆசாரியர்கள் குற்றநிவாரண காணிக்கையையும், பாவநிவாரண காணிக்கையையும் சமைத்து, தானிய காணிக்கையை வேகவைக்கும் இடம் இதுவே. அவர்கள் இவற்றை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் மக்கள் அவற்றினால் தாங்கள் பரிசுத்தமாக்கப்படுவோம் என எண்ணித் தங்களுக்குத் தீங்குவருவதை தவிர்த்துக்கொள்வதற்காக இப்படிச் செய்வார்கள்.”
21 ௨௧ பின்பு அவர் என்னை வெளிமுற்றத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னை முற்றத்தின் நான்கு மூலைகளையும் கடந்துபோகச்செய்தார்; முற்றத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
பின்பு அவன் என்னை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் அழைத்துச் சென்றான். ஒவ்வொரு மூலையிலும் வேறொரு முற்றத்தைக் கண்டேன்.
22 ௨௨ முற்றத்தின் நான்கு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நான்கு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும், நாற்பது முழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான அடைக்கப்பட்ட முற்றங்கள் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவினதாய் இருந்தது.
23 ௨௩ இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
நான்கு முற்றங்களின் உட்புற சுவர்களில் சுற்றிலும் கல்லால் செய்யப்பட்ட பக்க விளிம்புகள் இருந்தன. அங்கே சுவர் விளிம்பின் கீழ் அடுப்புகளுக்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன.
24 ௨௪ அவர் என்னை நோக்கி: இவைகள் மக்கள் செலுத்தும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர்கள் சமைக்கிற வீடுகள் என்றார்.
அவன் என்னிடம், “ஆலய பணியாளர் மக்களின் பலிகளைச் சமைக்கும் சமையலிடங்கள் இவையே என்றான்.”