< 1 நாளாகமம் 22 >

1 அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான்.
அப்பொழுது தாவீது, “யெகோவாவாகிய இறைவனின் ஆலயமும், இஸ்ரயேலுக்கான தகன பலிபீடமும் இருக்கவேண்டிய இடம் இதுவே” என்றான்.
2 பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான்.
பின்பு தாவீது இஸ்ரயேலில் வாழ்கிற அந்நியர்களை ஒன்றுகூட்டும்படி கட்டளையிட்டு, அவர்களிலிருந்து இறைவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குரிய பொழிந்த கற்களை ஆயத்தப்படுத்துபவர்களை நியமித்தான்.
3 தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
தாவீது வாசல் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளையும், கீல்களையும் செய்வதற்கு ஏராளமான இரும்பையும், அளவிடமுடியாத வெண்கலத்தையும் சேர்த்துவைத்தான்.
4 எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
அதோடு தாவீது எண்ணிலடங்கா கேதுரு மரங்களை சேர்த்துவைத்தான். சீதோனியரும், தீரியரும் தாவீதுக்கு இவற்றை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.
5 தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; யெகோவாவுக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான்.
அப்பொழுது தாவீது, “எனது மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமற்றவனுமாய் இருக்கிறான். யெகோவாவுக்காகக் கட்டப்படப்போகும் ஆலயமோ எல்லா நாடுகளின் பார்வையிலும் மிகப் பிரமாண்டமானதாகவும், புகழ் பெற்றதாகவும், மேன்மையுள்ளதாகவும் இருக்கவேண்டும். எனவே அதற்கான ஆயத்தங்களை நான் செய்வேன்” என்றான். அவ்வாறே தாவீது தான் இறப்பதற்கு முன்பு அதிக அளவான ஆயத்தங்களையெல்லாம் செய்துவைத்திருந்தான்.
6 அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
பின்பு அவன் தன் மகன் சாலொமோனை அழைத்து, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.
7 சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன்.
தாவீது சாலொமோனிடம், “என் மகனே, நான் என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருந்தேன்.
8 ஆனாலும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய்.
ஆனால் யெகோவாவின் இந்த வார்த்தை எனக்கு வந்தது. ‘நீ பல யுத்தங்களைச் செய்து போர்முனையில் அதிகமான இரத்தத்தைச் சிந்தினாய். எனது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல. ஏனெனில் என் பார்வையில் பூமியில் நீ அதிக இரத்தத்தைச் சிந்தியிருக்கிறாய்.
9 இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன்.
ஆனால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் சமாதானமும் அமைதியும் உள்ளவனாய் இருப்பான். நான் எல்லா பகுதிகளிலுமுள்ள பகைவர்களிடமிருந்து அவனுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவனுடைய பெயர் சாலொமோன் எனப்படும். அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரயேலுக்கு சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவேன்.
10 ௧0 அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
அவனே என் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனது மகனாயிருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். நான் அவனுடைய ஆட்சியின் சிங்காசனத்தை இஸ்ரயேலுக்கு மேலாக என்றென்றும் நிலைத்திருக்கப் பண்ணுவேன்’ என்று என்னிடம் சொன்னார் என்றான்.
11 ௧௧ இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக.
“இப்பொழுதும் என் மகனே, யெகோவா உன்னோடு இருப்பாராக. அவர் கூறியதுபோல யெகோவாவாகிய உன் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டுவதில் நீ வெற்றியடைவாயாக.
12 ௧௨ யெகோவா உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
அவர் உன்னை இஸ்ரயேலுக்கு மேலாக ஆளுநனாக நியமிப்பார். அப்போது யெகோவா உனக்கு நீ உன் யெகோவாவாகிய இறைவனின் சட்டங்களைக் கைக்கொள்ளும்படி விவேகத்தையும், அறிவையும் கொடுப்பாராக.
13 ௧௩ யெகோவா இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
யெகோவா மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கொடுத்த சட்டங்களையும், விதிமுறைகளையும் மிகக் கவனமாக கைக்கொள்வாயானால் உனக்கு வெற்றி கிடைக்கும். திடன்கொண்டு தைரியமாயிரு. பயப்படாதே, கலங்காதே.
14 ௧௪ இதோ, நான் என்னுடைய சிறுமையிலே யெகோவாவுடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய்.
“யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்கென நான் ஒரு இலட்சம் தாலந்து நிறையுள்ள தங்கத்தையும், பத்துலட்சம் தாலந்து நிறையுள்ள வெள்ளியையும், ஏராளமான வெண்கலத்தையும், அளவிடமுடியாத இரும்பையும், மரங்களையும், கற்களையும் மிகவும் சிரமத்துடன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். அத்துடன் நீயும் வேண்டியதைச் சேர்த்துக்கொள்.
15 ௧௫ வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள்.
கல் வெட்டுவதற்கும், மேசன் வேலை செய்வதற்கும், தச்சுவேலை செய்வதற்கும் உன்னிடம் தேர்ச்சிபெற்ற தொழில் வல்லுநர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள்.
16 ௧௬ பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான்.
தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றில் கைவேலை செய்யக்கூடிய கைவினைஞர்கள் எண்ணற்றவர்கள் உன்னிடம் இருக்கிறார்கள். இப்பொழுது நீ வேலையைத் தொடங்கு; யெகோவா உன்னோடு இருப்பாராக” என்றான்.
17 ௧௭ தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது:
பின்னர் தாவீது தனது மகன் சாலொமோனுக்கு உதவிசெய்யும்படி, இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
18 ௧௮ உங்கள் தேவனாகிய யெகோவா உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; யெகோவாவுக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.
அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இல்லையா? அவர் உங்களுக்கு எல்லாப் பக்கங்களிலும் அமைதியைத் தரவில்லையா? நாட்டின் குடிகளை எனது கையில் ஒப்படைத்துள்ளார். நாடு யெகோவாவுக்கும், அவருடைய மக்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறது.
19 ௧௯ இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவதற்கு நேராக்கி, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், யெகோவாவுடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான்.
உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படி உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் இப்பொழுதே அர்ப்பணியுங்கள். இறைவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டத் தொடங்குங்கள். அப்பொழுது யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், இறைவனுக்குச் சொந்தமான பரிசுத்த பொருட்களையும் யெகோவாவினுடைய பெயரில் கட்டப்படப்போகும் ஆலயத்திற்குள் கொண்டுவந்து வைக்கலாம்” என்று சொன்னான்.

< 1 நாளாகமம் 22 >