< 2 நாளாகமம் 1 >
1 ௧ தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
தாவீதின் மகன் சாலொமோன் தனது அரசாட்சியின்மேல் தன்னை மிகவும் உறுதியாக நிலைப்படுத்தினான்; இறைவனாகிய யெகோவா அவனோடிருந்து அவனை மிகவும் மேன்மைப்படுத்தினார்.
2 ௨ சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி,
பின்பு சாலொமோன் எல்லா இஸ்ரயேலருடனும் பேசினான். அவன் ஆயிரம்பேரின் தளபதிகளுடனும், நூறுபேரின் தளபதிகளுடனும், நீதிபதிகளுடனும், இஸ்ரயேலின் தலைவர்களுடனும், குடும்பங்களின் தலைவர்களுடனும் பேசினான்.
3 ௩ அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
சாலொமோனும் கூடியிருந்தவர்கள் எல்லோரும் கிபியோனில் உள்ள உயரமான இடத்திற்குப் போனார்கள். ஏனெனில் அங்கேயே யெகோவாவின் ஊழியக்காரரான மோசே பாலைவனத்தில் அமைத்த இறைவனின் ஆசரிப்புக்கூடாரம் இருந்தது.
4 ௪ தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.
அப்பொழுது தாவீது இறைவனின் பெட்டியை கீரியாத்யாரீமிலிருந்து அதற்கென தான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவந்தான். ஏனெனில் அவன் எருசலேமில் அதற்காக ஒரு கூடாரம் அமைத்திருந்தான்.
5 ௫ ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
ஆனால் கூரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேல் செய்திருந்த ஒரு வெண்கல பலிபீடம் கிபியோனில் யெகோவாவின் இருப்பிடத்திற்கு முன்னால் இருந்தது. எனவே அந்த இடத்தில்தான் சாலொமோனும் கூடியிருந்த மக்களும் யெகோவாவிடத்தில் விசாரித்தார்கள்.
6 ௬ அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.
சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்குமுன் அமைந்திருந்த வெண்கல பலிபீடத்திற்கு சாலொமோன் சென்றான். அங்கே ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான்.
7 ௭ அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
அந்த இரவில் இறைவன் சாலொமோனுக்குக் காணப்பட்டு, “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார்.
8 ௮ சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர்.
சாலொமோன் இறைவனிடம், “நீர் எனது தகப்பன் தாவீதிற்கு உமது மிகுந்த தயவைக் காட்டி, அவருடைய இடத்தில் என்னை அரசனாக்கினீர்.
9 ௯ இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, எனது தகப்பன் தாவீதிற்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தம் உறுதிப்படட்டும். ஏனெனில் பூமியின் தூளைப்போல் எண்ணிக்கையுடைய மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர்.
10 ௧0 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான்.
எனவே இந்த மக்களை வழிநடத்துவதற்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும் எனக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” எனப் பதிலளித்தான்.
11 ௧௧ அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும்,
இறைவன் சாலொமோனிடம், “நீ செல்வத்தையோ, செழிப்பையோ, கனத்தையோ, உன் பகைவர்களின் மரணத்தையோ, அல்லது உனக்கு நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக என் மக்களை ஆளும்படி நான் உன்னை அரசனாக்கினேன். நீ அவர்களை ஆளுவதற்கு ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய். இதுவே உனது இருதயத்தின் ஆசையாயிருந்தபடியால்,
12 ௧௨ ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
உனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுக்கிறேன். அத்துடன் உனக்கு முன்னிருந்த எந்த அரசனுக்கும் உனக்குப் பின்வரும் எந்த அரசனுக்கும் இல்லாத செல்வத்தையும், செழிப்பையும், கனத்தையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
13 ௧௩ இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.
அதன்பின்பு சாலொமோன் கிபியோனின் சபைக் கூடாரத்திற்கு முன்பாக இருந்த, உயர்ந்த இடத்திலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே இஸ்ரயேலை அரசாண்டான்.
14 ௧௪ சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் 1,400 தேர்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
15 ௧௫ ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
அரசன் எருசலேமில் தங்கத்தையும், வெள்ளியையும் கற்களைப்போல் சாதரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரங்களில் வளரும் காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான்.
16 ௧௬ சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும் சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள்.
17 ௧௭ அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.
எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர்.