< சங்கீதம் 37 >

1 தாவீதின் சங்கீதம். தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே; அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
தாவீதின் பாடல். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
2 ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்; பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள்.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
3 யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு.
யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4 யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு, அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5 யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார்.
உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
6 அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
7 யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து, அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு; மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும் அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே.
யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
8 கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு; பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும்.
கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9 ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்; ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள் நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
10 இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள்.
௧0இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11 ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு, சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள்.
௧௧சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12 கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து, அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள்.
௧௨துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
13 ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்; அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார்.
௧௩ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14 ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும், நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும் கொடியவர்கள் வாளை உருவி வில்லை வளைக்கிறார்கள்.
௧௪சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்; அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
௧௫ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும்.
16 கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும், நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது.
௧௬அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17 ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
௧௭துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
18 குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
௧௮உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19 அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்; பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள்.
௧௯அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20 ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும், அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள்.
௨0துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
21 கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள்.
௨௧துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22 யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
௨௨அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
23 ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார்.
௨௩நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24 அவன் இடறினாலும் விழமாட்டான்; ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார்.
௨௪அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25 நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை.
௨௫நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
26 நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
௨௬அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27 தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்.
௨௭தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28 ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம்.
௨௮யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
29 நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, அதில் என்றும் குடியிருப்பார்கள்.
௨௯நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
30 நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
௩0நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
௩௧அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32 நீதிமான்களைக் கொல்லும்படி, கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள்.
௩௨துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33 ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை.
௩௩யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34 யெகோவாவை எதிர்பார்த்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள். நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
௩௪நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
35 கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான்.
௩௫கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36 ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை.
௩௬ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை.
37 குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
௩௭நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
38 ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.
௩௮அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
39 நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.
௩௯நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.
௪0யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

< சங்கீதம் 37 >