< உன்னதப்பாட்டு 1 >
1 ௧ சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. மணவாளி
சாலொமோனின் உன்னதப்பாட்டு.
2 ௨ நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக: உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
அவர் தமது வாயின் முத்தங்களினால் என்னை முத்தமிடுவாராக; ஏனெனில் உமது அன்பு திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் அதிக இன்பமாயிருக்கிறது.
3 ௩ உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உமது வாசனைத் தைலங்களின் நறுமணம் இன்பம் தருகிறது; உமது பெயர் ஊற்றுண்ட வாசனைத் தைலம்போல் இருக்கிறது. கன்னியர் உம்மைக் காதலிப்பதில் ஆச்சரியம் இல்லையே!
4 ௪ என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
என்னை உம்முடன் கூட்டிச்செல்லும்; நாம் விரைவாய் போய்விடுவோம். அரசன் தமது அறைக்குள் என்னைக் கொண்டுவரட்டும். தோழியர் நாங்கள் உம்மில் மகிழ்ந்து களிப்படைகிறோம்; திராட்சை இரசத்தைப் பார்க்கிலும் உமது அன்பையே புகழ்வோம். காதலி அவர்கள் உம்மீது காதல்கொள்வது எவ்வளவு சரியானது!
5 ௫ எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.
எருசலேமின் மங்கையரே, நான் கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன்.
6 ௬ நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். என் சகோதரர்கள் என்மேல் கோபங்கொண்டு, திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது.
7 ௭ என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? மணவாளன்
என் காதலரே, உமது மந்தைகளை எங்கே மேய்க்கிறீர்? மத்தியான வேளையிலே உமது செம்மறியாடுகளை எங்கே இளைப்பாறப் பண்ணுகிறீர்? அதை எனக்குச் சொல்லும். முகத்திரையிட்ட பெண்போல், ஏன் நான் உமது தோழர்களின் மந்தைகளுக்கிடையில் இருக்கவேண்டும்?
8 ௮ பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
பெண்களுள் பேரழகியே, அதை நீ அறியாவிட்டால், செம்மறியாட்டின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து போய், மேய்ப்பர்களின் கூடாரங்களுக்கு அருகில் உன் வெள்ளாட்டுக் குட்டிகளை மேயவிடு.
9 ௯ என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
என் அன்பே, நான் உன்னைப் பார்வோனின் தேர்களில் பூட்டப்பட்ட பெண் குதிரைக்கு ஒப்பிடுகிறேன்.
10 ௧0 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி
காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை.
11 ௧௧ வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகளைச் செய்வோம்.
12 ௧௨ ராஜா தமது பந்தியிலிருக்கும்வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
அரசர் தமது பந்தியில் இருக்கையிலே எனது வாசனைத் தைலம் நறுமணம் வீசியது.
13 ௧௩ என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
என் காதலர் எனக்கு என் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போள முடிச்சாய் இருக்கிறார்.
14 ௧௪ என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில் முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. மணவாளன்
என் காதலர் எனக்கு என்கேதி ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள, மருதாணி பூங்கொத்து போன்றவர்.
15 ௧௫ என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி
என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள்.
16 ௧௬ நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய படுக்கை பசுமையானது.
என் காதலரே, நீர் எவ்வளவு அழகானவர்! ஆ, எவ்வளவு கவர்ச்சி! நமது படுக்கை பசுமையானது.
17 ௧௭ நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரத்தாலானவை, நம்முடைய மச்சு தேவதாரு மரத்தாலானவை.