< உன்னதப்பாட்டு 3 >

1 இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க் காதலரை நான் தேடினேன். நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை.
2 நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும் பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன். அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன். அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை.
3 நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் என்னைக் கண்டார்கள். “என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன்.
4 நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; நான் அவரை என் தாயின் வீட்டிலும், என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்.
அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன். நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்; என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும் கூட்டிக்கொண்டு போகும்வரை நான் அவரைப் போகவிடவேயில்லை.
5 எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளி
எருசலேமின் மங்கையரே, கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?
பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல வருகின்ற இவர் யார்? வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்?
7 இதோ, சாலொமோனுடைய படுக்கை; இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள்.
இதோ, சாலொமோனின் படுக்கை! இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில் அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.
8 இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது.
அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள், இரவின் பயங்கரத்தை எதிர்க்க தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள்.
9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.
சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால் ஒரு பல்லக்கை செய்தார்.
10 ௧0 அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தளத்தைப் பொன்னினாலும், அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது.
அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும், உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்; அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர் தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள்.
11 ௧௧ சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்கு அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.
சீயோனின் மகள்களே, வெளியே வாருங்கள். சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள், அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான அவருடைய திருமண நாளிலேயே அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள்.

< உன்னதப்பாட்டு 3 >