< ரூத் 1 >
1 ௧ நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான்.
2 ௨ அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு, அவனுடைய மனைவியின் பெயர் நகோமி, அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன், மற்றொருவன் பெயர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
3 ௩ நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள்.
4 ௪ இவர்கள் மோவாபியப் பெண்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களில் ஒருத்தியின் பெயர் ஒர்பாள், மற்றவளுடைய பெயர் ரூத்; அங்கே ஏறக்குறைய 10 வருடங்கள் வாழ்ந்தார்கள்.
5 ௫ பின்பு மக்லோன் கிலியோன் என்ற அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்தப் பெண் தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னுடைய கணவனையும் இழந்து தனிமையானாள்.
6 ௬ யெகோவா தம்முடைய மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு; தன்னுடைய மருமகள்களோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
7 ௭ தன்னுடைய இரண்டு மருமகள்களோடு தான் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழியிலே நடந்துபோகும்போது,
8 ௮ நகோமி தன்னுடைய இரண்டு மருமகள்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயவுசெய்ததுபோல, யெகோவா உங்களுக்கும் தயவுசெய்வாராக.
9 ௯ யெகோவா உங்கள் இருவருக்கும் கிடைக்கும் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாக வாழச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
10 ௧0 உம்முடைய மக்களிடத்திற்கு உம்மோடு நாங்களும் வருவோம் என்றார்கள்.
11 ௧௧ அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்தில் எனக்கு மகன்கள் பிறப்பார்களோ?
12 ௧௨ என் பிள்ளைகளே, திரும்பிப்போங்கள்; நான் வயதானவள்; ஒரு கணவனோடு வாழத் தகுதியுள்ளவள் அல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாகி, நான் இன்று இரவில் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றெடுத்தாலும்,
13 ௧௩ அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, யெகோவாவுடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள்.
14 ௧௪ அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாக அழுதார்கள்; ஒர்பாள் தன்னுடைய மாமியாரை முத்தம் செய்துவிட்டுக் கடந்துபோனாள்; ரூத்தோ மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டாள்.
15 ௧௫ அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்திற்கும் தன்னுடைய தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள்.
16 ௧௬ அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
17 ௧௭ நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
18 ௧௮ அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை.
19 ௧௯ அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.
20 ௨0 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
21 ௨௧ நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.
22 ௨௨ இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.