< வெளிப்படுத்தின விசேஷம் 12 >
1 ௧ அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
2 ௨ அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள்.
3 ௩ அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது.
4 ௪ அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது.
5 ௫ எல்லா தேசங்களையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய குழந்தை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
6 ௬ அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது.
7 ௭ வானத்திலே யுத்தம் உண்டானது; அந்த யுத்தத்தில் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் இராட்சசப் பாம்போடு யுத்தம்பண்ணினார்கள்; இராட்சசப் பாம்பும் அதைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம்பண்ணியும் வெற்றி பெறமுடியவில்லை.
8 ௮ பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.
9 ௯ உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
10 ௧0 அப்பொழுது வானத்திலே ஒரு பெரியசத்தம் உண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும்படி அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தூக்கி எறியப்பட்டான்.
11 ௧௧ மரணம் சம்பவிக்கிறதாக இருந்தாலும் அதற்குத் தப்பிப்பதற்காக தங்களுடைய உயிரையும் பார்க்காமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்களுடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
12 ௧௨ எனவே, பரலோகங்களே! அவைகளில் வசிக்கிறவர்களே! களிகூருங்கள். ஆனால், பூமியிலும் கடலிலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலம்மட்டும் இருக்கிறதைத் தெரிந்து, அதிக கோபப்பட்டு, உங்களிடம் இறங்கினதினால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்வதைக்கேட்டேன்.
13 ௧௩ இராட்சசப் பாம்பானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துன்பப்படுத்தினது.
14 ௧௪ அந்தப் பெண் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாக வனாந்திரத்தில் உள்ள தன் இடத்திற்குப் பறந்துபோவதற்காக பெரிய கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
15 ௧௫ அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது.
16 ௧௬ ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது.
17 ௧௭ அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது.