< சங்கீதம் 96 >

1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
2 யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள்.
3 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
4 யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
5 எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.
நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.
6 மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன.
7 மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் யெகோவாவுக்கு செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
8 யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.
யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள்.
9 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; பூமியில் உள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்.
10 ௧0 யெகோவா ராஜரிகம்செய்கிறார், ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள்.
“யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
11 ௧௧ வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்.
12 ௧௨ நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும்.
13 ௧௩ அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும் மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.

< சங்கீதம் 96 >