< சங்கீதம் 82 >
1 ௧ ஆசாபின் பாடல். தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
ஆசாபின் சங்கீதம். மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
2 ௨ எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)
“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
3 ௩ ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.
4 ௪ பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
5 ௫ அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
6 ௬ நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
“‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.
7 ௭ ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
8 ௮ தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.