< சங்கீதம் 73 >

1 ஆசாபின் பாடல். சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.
ஆசாபின் சங்கீதம். நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு, இறைவன் நல்லவராயிருக்கிறார்.
2 ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.
ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி, என் காலடிகள் இடறி விழப்போனேன்.
3 துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன்.
4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.
அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன.
5 மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.
அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை.
6 ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள்.
7 அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.
அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது; அவர்கள் மனதிலிருந்து எழும் தீமையான எண்ணங்களுக்கு அளவேயில்லை.
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள்.
அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்; அகங்காரத்தில் ஒடுக்கப்போவதாகப் பயமுறுத்துகிறார்கள்.
9 தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது.
10 ௧0 ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.
ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி, அவர்களின் சொற்களைத் தண்ணீரைப்போல் குடிக்கிறார்கள்.
11 ௧௧ தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்? மகா உன்னதமானவருக்கு இவற்றைப் பற்றிய அறிவு உண்டோ?” என்கிறார்கள்.
12 ௧௨ இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.
கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும், செல்வத்தினால் பெருகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
13 ௧௩ நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.
உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்; வீணாகவே குற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவிக் கொண்டேன்.
14 ௧௪ நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்; காலைதோறும் நான் கண்டிக்கப்பட்டேன்.
15 ௧௫ இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
இவ்வாறு பேசியிருந்தால், நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன்.
16 ௧௬ இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,
இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது, அது எனக்குக் கடினமாய் இருந்தது.
17 ௧௭ அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.
ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான், நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன்.
18 ௧௮ நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.
நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்; நீர் அவர்களை சேதமடைந்து போகவிடுகிறீர்.
19 ௧௯ அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.
அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்!
20 ௨0 தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.
விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், யெகோவாவே, நீர் எழும்பும்போது, அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர்.
21 ௨௧ இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.
என் இருதயம் கசந்தது, என் உள்ளம் குத்தப்பட்டது.
22 ௨௨ நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன்.
23 ௨௩ ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர்.
24 ௨௪ உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர்.
25 ௨௫ பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு? பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை.
26 ௨௬ என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் என்னுடைய பங்குமாக இருக்கிறார்.
என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் எனக்குரியவருமாய் இருக்கிறார்.
27 ௨௭ இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.
உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர்.
28 ௨௮ எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்; ஆண்டவராகிய யெகோவாவை நான் என் புகலிடமாக்கிக் கொண்டேன்; உமது செயல்களையெல்லாம் நான் விவரிப்பேன்.

< சங்கீதம் 73 >