< சங்கீதம் 66 >

1 இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு. பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
2 அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
3 தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! உமது வல்லமை பெரிதானது; அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
4 பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
5 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.
இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.
6 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.
அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; வாருங்கள், அவரில் களிகூருவோம்.
7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
8 மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.
எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.
9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.
10 ௧0 தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.
11 ௧௧ எங்களை வலையில் அகப்படுத்தி, எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.
12 ௧௨ மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
13 ௧௩ சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;
நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
14 ௧௪ என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
நான் துன்பத்திலிருந்தபோது என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.
15 ௧௫ ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
நான் கொழுத்த மிருகங்களையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
16 ௧௬ தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
17 ௧௭ அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவருடைய துதி என் நாவில் இருந்தது.
18 ௧௮ என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
19 ௧௯ மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
20 ௨0 என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.
என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.

< சங்கீதம் 66 >