< சங்கீதம் 58 >
1 ௧ தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல். மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ? மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ? மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ?
2 ௨ மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்; உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது.
3 ௩ துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்; அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.
4 ௪ பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது; அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.
5 ௫ பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும் அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.
6 ௬ தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.
7 ௭ கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும்.
8 ௮ கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல, சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும்.
9 ௯ முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே, பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல கொடியவர்களை வாரிக்கொள்ளும்.
10 ௧0 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்; கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும்.
11 ௧௧ அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.
அப்பொழுது மனிதர், “நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும் பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.