< சங்கீதம் 33 >
1 ௧ நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது.
2 ௨ சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.
யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.
3 ௩ அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.
4 ௪ யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.
5 ௫ அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.
6 ௬ யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.
7 ௭ அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.
8 ௮ பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.
9 ௯ அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.
10 ௧0 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார்.
11 ௧௧ யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.
12 ௧௨ யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ அவர்கள் பாக்கியவான்கள்.
13 ௧௩ யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்;
14 ௧௪ தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் அனைவரையும் கவனிக்கிறார்.
15 ௧௫ அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
16 ௧௬ எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை.
17 ௧௭ காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.
18 ௧௮ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
19 ௧௯ பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.
20 ௨0 நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.
21 ௨௧ அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.
22 ௨௨ யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.