< சங்கீதம் 19 >
1 ௧ இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன.
2 ௨ பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகள் நாள்தோறும் பேசுகின்றன; இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன.
3 ௩ அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 ௪ ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன. யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார்.
5 ௫ அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும், பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது.
6 ௬ அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
அது வானங்களின் ஒரு முனையில் உதித்து, மறுமுனைவரை சுற்றிவருகிறது. அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை.
7 ௭ யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது. யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை, அவை பேதையை ஞானியாக்குகின்றன.
8 ௮ யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன.
9 ௯ யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.
யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, அவை முற்றிலும் நீதியானவை.
10 ௧0 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
அவை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை. அவை தேனைப் பார்க்கிலும், கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை.
11 ௧௧ அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்; அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு.
12 ௧௨ தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும்.
13 ௧௩ துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.
விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக. அப்பொழுது நான் குற்றமற்றவனாயும், பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன்.
14 ௧௪ என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக.