< சங்கீதம் 144 >
1 ௧ தாவீதின் பாடல். என்னுடைய கைகளைப் போருக்கும் என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி.
தாவீதின் சங்கீதம். என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, அவர் என் கைகளை யுத்தத்திற்கும், என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.
2 ௨ அவர் என்னுடைய தயாபரரும், என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.
அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை, என் அரண், என் மீட்பர், அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம், நாடுகளை அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.
3 ௩ யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும், வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்?
4 ௪ மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்; அவனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்; அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.
5 ௫ யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும்.
யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்; மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும்.
6 ௬ மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும்.
மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்; உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.
7 ௭ உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்; பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும் என்னை விடுவித்துத் தப்புவியும்.
8 ௮ மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன; அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.
9 ௯ யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்; பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.
10 ௧0 நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.
ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.
11 ௧௧ மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; பொய்பேசும் வாய்களையும், வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.
12 ௧௨ அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும், எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.
அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்; எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.
13 ௧௩ எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும்.
எங்கள் களஞ்சியங்கள் சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்; எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும், பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.
14 ௧௪ எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்; எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது; எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை, கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை; எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.
15 ௧௫ இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.
இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.