< சங்கீதம் 107 >

1 யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
2 யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள், எதிரிகளின் கையிலிருந்து அவரால் விடுதலையாக்கப்பட்டவர்கள்,
3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக.
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருக்கும் பல நாடுகளிலிருந்தும் சேர்க்கப்பட்டவர்கள் இதைச் சொல்லட்டும்.
4 அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
சிலர் தாங்கள் குடியிருக்கத்தக்க பட்டணத்திற்குப் போகும் வழியைக் காணாமல், பாலைவனத்தின் பாழ்நிலங்களிலே அலைந்து திரிந்தார்கள்.
5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.
அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள், அவர்களுடைய ஆத்துமா சோர்ந்துபோயிற்று.
6 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை விடுவித்தார்.
7 வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்திற்கு அவர் அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தினார்.
8 தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
9 அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்; பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.
10 ௧0 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள்.
11 ௧௧ காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து, மகா உன்னதமான இறைவனின் ஆலோசனையை அசட்டைபண்ணினார்கள்.
12 ௧௨ அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்; அவர்கள் இடறி விழுந்தார்கள்; அவர்களுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருக்கவில்லை.
13 ௧௩ தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
14 ௧௪ காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
அவர் அவர்களை, இருட்டிலிருந்தும் ஆழ்ந்த இருளிலிருந்தும் வெளியே கொண்டுவந்து, அவர்களுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்தார்.
15 ௧௫ யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
16 ௧௬ அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்; இரும்புத் தாழ்ப்பாள்களை வெட்டிப் பிளக்கிறார்.
17 ௧௭ புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள்.
18 ௧௮ அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, மரண வாசல்களை நெருங்கினார்கள்.
19 ௧௯ தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
20 ௨0 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்; அவர் அவர்களை மரணக் குழிகளிலிருந்து தப்புவித்தார்.
21 ௨௧ அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
22 ௨௨ நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும்.
23 ௨௩ கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்; அவர்கள் கடலின் திரளான தண்ணீரின்மேல் தொழில் செய்தார்கள்.
24 ௨௪ அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும், ஆழத்தில் அவர் செய்த புதுமையான செயல்களையும் கண்டார்கள்.
25 ௨௫ அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; அது அலைகளை உயர எழச்செய்தது.
26 ௨௬ அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது.
27 ௨௭ குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்; அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்று.
28 ௨௮ அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
29 ௨௯ கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; கடலின் அலைகள் அடங்கிப்போயின.
30 ௩0 அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார்.
31 ௩௧ அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
32 ௩௨ மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும்.
33 ௩௩ அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார்,
34 ௩௪ குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார்.
35 ௩௫ அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார்.
36 ௩௬ பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள்.
37 ௩௭ வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன.
38 ௩௮ அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை.
39 ௩௯ பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்;
40 ௪0 அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே, அவர்களைப் பாதையற்ற பாழ்நிலத்தில் அலையப்பண்ணினார்.
41 ௪௧ எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து, அவர்களுடைய குடும்பங்களை மந்தையைப்போல் பெருகப்பண்ணினார்.
42 ௪௨ உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.
43 ௪௩ எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும்.

< சங்கீதம் 107 >