< சங்கீதம் 104 >
1 ௧ என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2 ௨ ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 ௩ தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
4 ௪ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
5 ௫ பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
6 ௬ அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7 ௭ அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
8 ௮ அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9 ௯ அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10 ௧0 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11 ௧௧ அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12 ௧௨ அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
13 ௧௩ தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
14 ௧௪ பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15 ௧௫ மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
16 ௧௬ யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
17 ௧௭ அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 ௧௮ உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
19 ௧௯ சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
20 ௨0 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
21 ௨௧ இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
22 ௨௨ சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
23 ௨௩ அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
24 ௨௪ யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
25 ௨௫ பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
26 ௨௬ அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27 ௨௭ ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28 ௨௮ நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29 ௨௯ நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
30 ௩0 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
31 ௩௧ யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
32 ௩௨ அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
33 ௩௩ நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
34 ௩௪ நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
35 ௩௫ பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, அல்லேலூயா.