< சங்கீதம் 103 >

1 தாவீதின் பாடல். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.
தாவீதின் சங்கீதம். என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி.
2 என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே.
3 அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,
அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார்.
4 உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார், உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார்.
5 நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்; அதினால் உன் இளமை கழுகின் இளமையைப்போல் புதுப்பிக்கப்படுகிறது.
6 ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா நியாயத்தையும் நீதியையும் செய்கிறார்.
7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார், தமது செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படிச் செய்தார்.
8 யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர், அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.
9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.
அவர் எப்பொழுதும் நம்மேல் குற்றம் சுமத்துகிறவரல்ல; தமது கோபத்தை என்றென்றும் வைத்திருக்கவுமாட்டார்.
10 ௧0 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை, நமது அநியாயங்களுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிப்பதும் இல்லை.
11 ௧௧ பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
ஏனெனில் பூமிக்கு மேலாய் வானங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயபக்தியாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய உடன்படிக்கையின் அன்பும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
12 ௧௨ மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய மீறுதல்களை நம்மைவிட்டு விலக்கிவிட்டார்.
13 ௧௩ தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
தகப்பன் தன் பிள்ளைகளுக்குத் தயை காட்டுவதுபோல், யெகோவாவும் தம்மிடத்தில் பயபக்தியாய் இருக்கிறவர்களுக்கு தயை காட்டுகிறார்;
14 ௧௪ நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
ஏனெனில் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் அறிவார்; நாம் தூசி என்பதையும் அவர் நினைவுகூருகிறார்.
15 ௧௫ மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.
மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; அவர்கள் வயல்வெளியின் பூவைப்போல் பூக்கிறார்கள்.
16 ௧௬ காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது; அது இருந்த இடமும் அதை நினைவில் கொள்ளாது.
17 ௧௭ யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.
ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு அவர்மேல் பயபக்தியாய் இருக்கிறவர்களோடும், அவருடைய நீதி அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளோடும் என்றைக்கும் இருக்கிறது;
18 ௧௮ அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருப்பவர்கள் மேல், அவருடைய உடன்படிக்கையின் அன்பு நிலைத்திருக்கும்.
19 ௧௯ யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.
யெகோவா தமது சிங்காசனத்தை பரலோகத்தில் நிலைப்படுத்தியிருக்கிறார்; அவருடைய அரசு அனைத்தையும் ஆளுகை செய்கிறது.
20 ௨0 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள்.
யெகோவாவினுடைய தூதர்களே, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் கட்டளையிடுகிறதைச் செய்கிற பலவான்களே, அவரைத் துதியுங்கள்.
21 ௨௧ யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, அவரைப் போற்றுங்கள்.
பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே, அவருடைய திட்டத்தைச் செய்கிற அவருடைய பணியாளர்களே, அவரைத் துதியுங்கள்.
22 ௨௨ யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, அவரைப் போற்றுங்கள்; என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.
யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே, அவரைத் துதியுங்கள். என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.

< சங்கீதம் 103 >