< நீதிமொழிகள் 16 >
1 ௧ மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை, ஆனால் யெகோவா அவர்களுடைய நாவுகளில் சரியான பதிலைத் தருகிறார்.
2 ௨ மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும், ஆனால் யெகோவா உள்நோக்கங்களை ஆராய்ந்து பார்க்கிறார்.
3 ௩ உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு, அப்பொழுது அவர் உனது திட்டங்களை உறுதிப்படுத்துவார்.
4 ௪ யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்; பேரழிவின் நாட்களுக்காக கொடியவர்களையும் வைத்திருக்கிறார்.
5 ௫ மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்; அவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள் என்பது நிச்சயம்.
6 ௬ கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பது தீமையைவிட்டு விலகச் செய்யும்.
7 ௭ ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால், அவனுடைய எதிரிகளும் அவனோடு சமாதானமாகும்படிச் செய்வார்.
8 ௮ அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட, நீதியாய்ப் பெறும் கொஞ்சமே சிறந்தது.
9 ௯ மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய காலடிகளை யெகோவாவே தீர்மானிக்கிறார்.
10 ௧0 ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது; அவனுடைய தீர்ப்புகள் நீதிக்குத் துரோகம் செய்யக்கூடாது.
11 ௧௧ நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது; பையில் இருக்கும் எல்லா படிக்கற்களும் அவரால் உண்டானது.
12 ௧௨ அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள், ஏனெனில் நீதியினாலேயே சிங்காசனம் நிறுவப்பட்டது.
13 ௧௩ நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி; உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்புகிறார்கள்.
14 ௧௪ ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது, ஆனால் ஞானிகள் அதை சாந்தப்படுத்துவார்கள்.
15 ௧௫ ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது; அவருடைய தயவு வசந்தகால மழை மேகம் போன்றது.
16 ௧௬ பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும் வெள்ளியைவிட மெய்யறிவைப் பெறுவதும் எவ்வளவு சிறந்தது!
17 ௧௭ தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது; தங்கள் வழியைக் காத்துக்கொள்கிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்.
18 ௧௮ அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது; வீழ்ச்சிக்கு முன்னால் மனமேட்டிமை வருகிறது.
19 ௧௯ அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, சிறுமைப்பட்டவர்களுடன் மனத்தாழ்மையுடன் இருப்பதே சிறந்தது.
20 ௨0 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள், யெகோவாவிடம் நம்பிக்கையாயிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
21 ௨௧ இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்; இனிமையான வார்த்தைகள் மக்களை கற்றுக்கொள்ளத் தூண்டும்.
22 ௨௨ புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது, ஆனால் மூடத்தனம் மூடர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறது.
23 ௨௩ ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும், அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும்.
24 ௨௪ இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல் ஆத்துமாவுக்கு இனிமையாயும், எலும்புகளுக்கு சுகமாயுமிருக்கும்.
25 ௨௫ மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு; முடிவில் அது மரணத்திற்கே வழிநடத்தும்.
26 ௨௬ உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது, அவர்களைத் தொடர்ந்து வேலைசெய்யத் தூண்டும்.
27 ௨௭ வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும்.
28 ௨௮ மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள், கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
29 ௨௯ கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி, தீயவழியில் அவர்களை நடத்துகிறார்கள்.
30 ௩0 அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்; தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள்.
31 ௩௧ நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது.
32 ௩௨ பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்; தன் கோபத்தை அடக்குகிறவன் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுகிறவனைவிடச் சிறந்தவன்.
33 ௩௩ சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.
சீட்டு மடியிலே போடப்படும், ஆனால் அதைத் தீர்மானிப்பது யெகோவா.