< எண்ணாகமம் 4 >
1 ௧ யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது:
2 ௨ “லேவியர்களுக்குள்ளே இருக்கிற கோகாத் சந்ததியார்களுடைய முன்னோர்களின் வீட்டு வம்சங்களில்,
“லேவியரில் உள்ள கோகாத்திய வம்சத்தின் கிளையை, அவர்களின் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடுங்கள்.
3 ௩ ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் கூட்டத்திற்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, கணக்கெடுக்கவேண்டும்.
சபைக் கூடாரத்திலே வேலைசெய்யவரும் முப்பது வயதுதொடங்கி ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களையும் கணக்கிடுங்கள்.
4 ௪ ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியாரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது.
“சபைக் கூடாரத்திலுள்ள மகா பரிசுத்த இடத்தின் பொருட்களைப் பராமரிப்பதே கோகாத்தியர் செய்யவேண்டிய வேலையாகும்.
5 ௫ முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
முகாம் நகர்த்தப்படும்போது, முதலில் ஆரோனும் அவன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் நின்று, மறைக்கும் திரையைக் கழற்றி, அதனால் சாட்சிப்பெட்டியை மூடவேண்டும்.
6 ௬ அதின்மேல் மெல்லிய தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
பின்பு அவர்கள் அதைக் கடல்பசுத் தோலினால் மூடி, தனி நீலநிறத் துணியொன்றை அதன்மேல் விரித்து, கம்புகளை அவற்றுக்குரிய இடங்களில் வைக்கவேண்டும்.
7 ௭ சமுகத்து அப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைக்கவேண்டும்; நிரந்தர அப்பமும் அதின்மேல் இருக்கவேண்டும்.
“அடுத்ததாக, இறைப்பிரசன்ன மேஜையின்மேல் நீலநிறத் துணியை விரித்து, அதன்மேல் தட்டங்கள், தட்டுகள், கிண்ணங்கள், பானகாணிக்கை ஜாடிகள் ஆகியவற்றை வைக்கவேண்டும். மேஜையின்மேல் தொடர்ந்து வைக்கும் அப்பம் அதிலே இருக்கவேண்டும்.
8 ௮ அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதை மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
அப்பொருட்களின் மேல் சிவப்புநிறத் துணியை விரித்து, அவை எல்லாவற்றையும் கடல்பசுத் தோலினால் மூடி, அதன் கம்புகளை அதற்குரிய இடங்களில் வைக்கவேண்டும்.
9 ௯ இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
“பின்பு ஒரு நீலநிறத் துணியை எடுத்து, வெளிச்சத்திற்குரிய குத்துவிளக்கு, அதனுடன் இருக்கும் அகல்விளக்குகள், விளக்குத்திரி கத்தரிகள், தட்டங்கள், எண்ணெய் விடுவதற்குப் பயன்படுத்தும் ஜாடிகள் ஆகியவற்றை மூடவேண்டும்.
10 ௧0 அதையும் அதற்குரிய பொருட்கள் யாவையும் மெல்லிய தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
அவற்றையும் அவற்றிற்குரிய உபகரணங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து, அந்த கடல்பசுத் தோலினால் சுற்றிக்கட்டி, சுமக்குந்தடிகளில் அதை வைக்கவேண்டும்.
11 ௧௧ பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் மெல்லிய தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
“அதன்பின் தங்கத்தூபபீடத்தின்மேல் நீலநிறத் துணியை விரித்து, அதனை கடல்பசுத் தோலினால் மூடி, அதன் கம்புகளை அதற்குரிய இடத்தில் வைக்கவேண்டும்.
12 ௧௨ பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற எல்லா பொருட்களையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, மெல்லிய தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
“அத்துடன் பரிசுத்த இடத்தில் குருத்துவப் பணிக்கு பயன்படுத்தத் தேவையான எல்லா பொருட்களையும், ஒரு நீலநிறத்துணியில் வைத்துச் சுற்றிக்கட்டி, கடல்பசுத் தோலினால் மூடி, சுமக்குந்தடிகளில் அவற்றை வைக்கவேண்டும்.
13 ௧௩ பலிபீடத்தைச் சாம்பல் போக கழுவி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
“அவர்கள் வெண்கலப் பீடத்திலிருந்து சாம்பலை அகற்றி, அதற்குமேல் ஊதாநிறத் துணியை விரிக்கவேண்டும்.
14 ௧௪ அதின்மேல் ஆராதனைக்கு ஏற்ற எல்லாப் பணிப்பொருட்களாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்குரிய எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் மெல்லிய தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சவேண்டும்.
பலிபீடத்தில் குருத்துவப் பணிக்காகப் பயன்படுத்தும் எல்லா பாத்திரங்களையும் அதன்மேல் வைக்கவேண்டும். அவையாவன: நெருப்புச் சட்டி, இறைச்சியை குத்தும் முட்கரண்டிகள், சாம்பல் அள்ளும் வாரிகள் மற்றும் தெளிக்கும் கிண்ணங்கள் ஆகும். அவற்றின்மேல் கடல்பசுத் தோலை விரித்து கம்புகளை அவற்றுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும்.
15 ௧௫ முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய எல்லா பணிப்பொருட்களையும் மூடிவைத்தபின்பு, கோகாத் சந்ததியார்கள் அதை எடுத்துக்கொண்டுபோவதற்கு வரவேண்டும்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாமலிருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியினர் சுமக்கும் சுமை இதுவே.
“ஆரோனும் அவன் மகன்களும் பரிசுத்த பணிமுட்டுகளையும் பரிசுத்த பொருட்கள் எல்லாவற்றையும் மூடவேண்டும். முகாம் நகருவதற்கு ஆயத்தமாகும்போது, கோகாத்தியர் வந்து அதைச் சுமக்கவேண்டும். ஆனால் கோகாத்தியர் அப்பரிசுத்த பொருட்களைத் தொடக்கூடாது. தொட்டால் சாவார்கள். சபைக் கூடாரத்தில் இருக்கும் பொருட்களை கோகாத்தியரே சுமக்கவேண்டும்.
16 ௧௬ “ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், நறுமண தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேகத் தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிப்பொருட்களையும், விசாரிக்கவேண்டும் என்றார்.
“ஆரோனின் மகன் ஆசாரியன் எலெயாசார், வெளிச்சத்திற்கான எண்ணெய், நறுமண தூபம், வழக்கமான தானிய காணிக்கை, அபிஷேக எண்ணெய் ஆகியவற்றிற்குப் பொறுப்பாயிருக்க வேண்டும். அவன் முழு இறைசமுகக் கூடாரத்திற்கும் அதன் பரிசுத்த பணிமுட்டுகள், பொருட்கள் உட்பட அதிலுள்ள எல்லாவற்றிற்கும் பொறுப்பாயிருக்க வேண்டும்” என்றார்.
17 ௧௭ யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
பின்பு யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது:
18 ௧௮ “லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
“லேவியரிடமிருந்து கோகாத்திய கோத்திர வம்சங்கள் அழிந்துபோகாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
19 ௧௯ அவர்கள் மகா பரிசுத்தமானவைகளின் அருகில் வரும்போது, சாகாமல் உயிரோடு இருக்கும்படி, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியது:
மகா பரிசுத்த பொருட்களை அணுகும்போது, அவர்கள் சாகாமல் வாழும்படி, நீங்கள் செய்யவேண்டியதாவது: ஆரோனும் அவன் மகன்களும் பரிசுத்த இடத்திற்குள் போய், அவனவனுக்குரிய வேலையையும், அவனவன் சுமக்க வேண்டியது என்ன என்பதையும் நியமிக்கவேண்டும்.
20 ௨0 ஆரோனும் அவனுடைய மகன்களும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கவேண்டும்; அவர்களோ சாகாதபடிப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உள்ளே நுழையாமல் இருக்கவேண்டும் என்றார்.
ஆனால் கோகாத்தியர் பரிசுத்த இடத்துப் பொருட்களைப் பார்க்கும்படி ஒரு வினாடியேனும் உள்ளே போவார்களானால் அவர்கள் சாவார்கள்” என்றார்.
21 ௨௧ பின்னும், யெகோவா மோசேயை நோக்கி:
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
22 ௨௨ “கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
“கெர்சோனியரை, அவர்கள் குடும்பங்களின்படியும், வம்சங்களின்படியும் கணக்கிடு.
23 ௨௩ முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
சபைக் கூடாரத்தின் வேலைகளைச் செய்யவரும் முப்பது வயதுதொடங்கி ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களையும் கணக்கிடு.
24 ௨௪ பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:
“கெர்சோனிய வம்சங்கள் வேலைசெய்யும்போதும், சுமை சுமக்கும்போதும் அவர்களுக்குரிய பணி என்னவென்றால்:
25 ௨௫ அவர்கள் வாசஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் உரிய தொங்கு திரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற மெல்லிய தோல் மூடியையும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவையும்,
சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் திரைகள், கூடாரம், அதன் மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட அதன் வெளிப்புற மூடுதிரை, சபைக்கூடார நுழைவாசலுக்கான திரைகள் ஆகியவற்றை அவர்கள் சுமக்கவேண்டும்.
26 ௨௬ பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்கு திரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்குரிய கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
அத்துடன், இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியுள்ள முற்றத்தின் திரைகள், முற்றத்தின் வாசல் திரை, அதன் கயிறுகள் மற்றும் அதன் பணியில் பயன்படுத்தும் உபகரணங்கள் எல்லாவற்றையும் அவர்கள் சுமக்கவேண்டும். அவை தொடர்பாகச் செய்யப்படவேண்டிய எல்லாவற்றையும் கெர்சோனியரே செய்யவேண்டும்.
27 ௨௭ கெர்சோன் சந்ததியார்கள் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவனுடைய மகன்களும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய எல்லா சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடம் ஒப்புவியுங்கள்.
தூக்குவதானாலும், வேறு எந்த வேலைசெய்வதானாலும் அவர்களுடைய எல்லா பணிகளும் ஆரோனுடைய அவன் மகன்களுடைய வழிகாட்டலிலேயே செய்யப்படவேண்டும். அவர்கள் சுமக்கவேண்டிய அவர்களுடைய பொறுப்பை நீ அவர்களுக்கு நியமிக்கவேண்டும்.
28 ௨௮ கெர்சோன் சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் மகன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
சபைக் கூடாரத்தில் கெர்சோனிய வம்சங்களின் பணி இதுவே. அவர்களுடைய கடமைகள் ஆசாரியனான ஆரோனின் மகன் இத்தாமாரின் வழிநடத்துதலிலேயே செய்யப்படவேண்டும்.
29 ௨௯ “மெராரி சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
“மெராரியரை அவர்களின் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடு.
30 ௩0 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணவேண்டும்.
சபைக்கூடார வேலைகளைச் செய்யவரும் முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களையும் கணக்கிடு.
31 ௩௧ ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
சபைக் கூடாரத்தில் பணிசெய்யும்போது, அவர்களுடைய கடமை என்னவென்றால், இறைசமுகக் கூடாரத்தின் சட்டப்பலகைகள், அதன் குறுக்குச் சட்டங்கள், அதன் கம்பங்கள், அடித்தளங்கள்,
32 ௩௨ சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் எல்லா கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணவேண்டும்.
சுற்றியுள்ள முற்றத்தின் கம்பங்கள், அடித்தளங்கள், கூடார முளைகள், கயிறுகள், அவற்றின் உபயோகத்திற்கான முழு உபகரணங்கள் ஆகியவற்றைச் சுமப்பதாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சுமக்கவேண்டியதை நியமிக்கவேண்டும்.
33 ௩௩ ஆசாரியனாகிய ஆரோனுடைய மகனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி சந்ததியாரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் வழிகாட்டலில், மெராரி வம்சத்தார் சபைக் கூடாரத்தின் வேலையைச் செய்கையில், அவர்களுடைய பணி இதுவே” என்றார்.
34 ௩௪ அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
மோசேயும், ஆரோனும், சமுதாயத்தின் தலைவர்களும் கோகாத்தியரை அவர்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிட்டார்கள்.
35 ௩௫ முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணினார்கள்.
சபைக் கூடாரத்தில் பணிசெய்ய வந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள ஆண்களையெல்லாம் வம்சம் வம்சமாகக் கணக்கிட்டபோது,
36 ௩௬ அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் 2,750 பேர்.
அவர்கள் 2,750 பேராய் இருந்தார்கள்.
37 ௩௭ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
சபைக் கூடாரத்தில் பணிசெய்த கோகாத்திய வம்சங்கள் எல்லோருடைய மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டிருந்தபடியே, மோசேயும் ஆரோனும் அவர்களை எண்ணினார்கள்.
38 ௩௮ கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
கெர்சோனியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள்.
39 ௩௯ முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
சபைக்கூடார வேலைகளைச் செய்யவந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களும்
40 ௪0 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர்.
அவர்கள் வம்சங்களின்படியும் குடும்பங்களின்படியும் எண்ணப்பட்டபோது, 2,630 பேராய் இருந்தார்கள்.
41 ௪௧ மோசேயினாலும் ஆரோனாலும் யெகோவா கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
சபைக் கூடாரத்தில் பணிசெய்த கெர்சோன் வம்சத்தைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. மோசேயும் ஆரோனும் யெகோவாவின் கட்டளைப்படியே, அவர்களை எண்ணினார்கள்.
42 ௪௨ மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
மெராரியர் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடப்பட்டார்கள்.
43 ௪௩ முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லோரும் எண்ணப்பட்டார்கள்.
சபைக்கூடார வேலைகளைச் செய்யவந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களும்,
44 ௪௪ அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே 3,200 பேர்.
அவர்களுடைய வம்சங்களின்படி எண்ணப்பட்டபோது, அவர்கள் 3,200 பேராய் இருந்தார்கள்.
45 ௪௫ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லோரும் இவர்களே.
மெராரிய வம்சங்களைச் சேர்ந்தவர்களின் மொத்தத்தொகை இதுவே. யெகோவா மோசே மூலம் கட்டளையிட்டபடியே மோசேயும், ஆரோனும் அவர்களைக் கணக்கிட்டார்கள்.
46 ௪௬ லேவியர்களுடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,
இப்படியாக மோசேயும் ஆரோனும், இஸ்ரயேல் தலைவர்களும் லேவியர்கள் எல்லோரையும் அவர்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிட்டார்கள்.
47 ௪௭ மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லோரும்,
பணிசெய்யும்படி சபைக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்யவந்த முப்பது வயதிலிருந்து ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களும் எண்ணப்பட்டபோது,
48 ௪௮ 8,580 பேராக இருந்தார்கள்.
அவர்கள் 8,580 பேராய் இருந்தார்கள்.
49 ௪௯ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இந்த விதமாக, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.
மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய வேலையும், அவனவன் எதைச் சுமப்பது என்பதும் நியமிக்கப்பட்டது. இப்படியாக யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் எண்ணப்பட்டார்கள்.