< மல்கியா 4 >

1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
“நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது; அது சூளையைப்போல் எரியும். அப்பொழுது ஆணவம் கொண்ட எல்லோரும் தீமைசெய்கிற ஒவ்வொருவரும், பயிரின் அடித்தாழைப்போல் ஆவார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; வேரோ கிளையோ அவர்களுக்காக மிஞ்சுவதில்லை என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
2 ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் இறக்கையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
ஆனால் என் பெயரில் பயபக்தியுடன் வாழ்கிற உங்களுக்கு, நீதியின் சூரியன் உதிப்பார். அவரின் ஒளிக்கதிரில் சுகம் கொடுக்கும் தன்மை இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு வெளியே போகும் கன்றுகளைப்போல, துள்ளிக் குதிப்பீர்கள்.
3 துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
நீங்கள் கொடியவர்களை மிதிப்பீர்கள்; நான் இவற்றைச் செய்யும் அந்த நாளில், அவர்கள் உங்கள் காலடிகளின் கீழே சாம்பலாவார்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
4 ஓரேபிலே இஸ்ரவேலர்கள் அனைவருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
“என் அடியவன் மோசே, கொடுத்த சட்டத்தை நினைவுகூருங்கள். இஸ்ரயேலர் எல்லாருக்காகவும் நான் என் அடியவன் மோசேக்கு ஓரேப் மலையில் கொடுத்த விதிமுறைகளையும், சட்டங்களையும் நினைவிற்கொள்ளுங்கள்.
5 இதோ, யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
“இதோ பாருங்கள், யெகோவாவின் பெரிதும் திகிலூட்டுகிறதுமான நாள் வருகிறது. அது வருவதற்கு முன்பாக நான் இறைவாக்கினன் எலியாவை அனுப்புவேன்.
6 நான் வந்து பூமியை அழிக்காமலிருக்க, அவன் தகப்பன்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய தகப்பன்களிடத்திற்கும் திருப்புவான்.
அவன் பெற்றோரின் இருதயங்களைப் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் இருதயங்களை அவர்கள் பெற்றோரிடமும் திருப்புவான்; இல்லாவிடில் நான் வந்து நாட்டைச் சாபத்தால் தண்டிப்பேன்.”

< மல்கியா 4 >