< லேவியராகமம் 14 >

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது:
2 “தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
“நோயுற்ற ஒருவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்படும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்திகரிக்கப்படும் வேளையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவையே:
3 ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால்,
ஆசாரியன் முகாமுக்கு வெளியே சென்று அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோயாளி தனது தொற்றும் தோல்வியாதியிலிருந்து குணமடைந்திருந்தால்,
4 சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக.
ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக இரண்டு சுத்தமான உயிருள்ள பறவைகளையும், சில கேதுருமரத்தின் கட்டைகளையும், சிவப்புநூல் கற்றைகளையும், ஈசோப்புக் குழையையும் கொண்டுவரும்படி உத்தரவிடவேண்டும்.
5 பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,
பின்பு ஒரு மண்பானையிலுள்ள நல்ல தண்ணீரின் மேலாக அந்த பறவைகளில் ஒன்று கொல்லப்படும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும்.
6 உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து,
அவன் கேதுருமரக்கட்டை, சிவப்புநூல் கற்றை, ஈசோப்புக்குழை ஆகியவற்றுடன் உயிரோடிருக்கும் மற்றப் பறவையையும் எடுத்து, நல்ல தண்ணீரின் மேலாகக் கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தில் அதைத் தோய்க்க வேண்டும்.
7 தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக.
ஆசாரியன், தொற்று வியாதியிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவன்மேல், ஏழுமுறை இரத்தத்தைத் தெளித்து, அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அதன்பின் அந்த உயிருள்ள பறவையைத் திறந்த வெளியிலே விட்டுவிட வேண்டும்.
8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,
“சுத்தமாக்கப்பட வேண்டியவன் தன் உடைகளைக் கழுவி, தலைமயிர் முழுவதையும் சிரைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருப்பான். இதன்பின் அவன் தனது முகாமுக்கு வரலாம். ஆனாலும் ஏழுநாட்களுக்கு அவன் தன் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருக்கவேண்டும்.
9 ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
அவன் ஏழாம்நாளில் தன் மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும். தலை, தாடி, புருவம் ஆகியவற்றிலுள்ள உரோமங்களையும், மற்ற இடங்களிலுள்ள உரோமங்களையும் சிரைக்கவேண்டும். தன் உடைகளைத் தண்ணீரில் கழுவி, முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
10 ௧0 “எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
“எட்டாம் நாளிலே அவன் குறைபாடற்ற இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளையும், ஒரு வயதுடைய குறைபாடற்ற ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையும், ஒரு எப்பா அளவையில் பத்தில் மூன்று பங்கு சிறந்த மாவை எண்ணெய் சேர்த்துப் பிசைந்து அத்துடன் தானியக் காணிக்கையாக ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும்.
11 ௧௧ சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கும் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனையும், அவனுடைய காணிக்கைகளையும் சபைக்கூடார வாசலில் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.
12 ௧௨ பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
“பின்பு ஆசாரியன் இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒன்றை ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
13 ௧௩ பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
பாவநிவாரண காணிக்கை மிருகமும், தகன காணிக்கை மிருகமும் கொல்லப்பட்ட பரிசுத்த இடத்திலேயே, ஆசாரியன் அந்தச் செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக் கொல்லவேண்டும். பாவநிவாரண காணிக்கையைப்போலவே குற்றநிவாரண காணிக்கையும் ஆசாரியனுக்கே உரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
14 ௧௪ அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக.
ஆசாரியன் குற்றநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுடைய வலது காதின் மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசவேண்டும்.
15 ௧௫ பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
பின்பு ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயில் இருந்து கொஞ்சத்தை எடுத்து தன் இடது உள்ளங்கையில் ஊற்றி,
16 ௧௬ தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் தெளித்து,
தன் வலது ஆள்காட்டி விரலை, இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் தோய்த்து, யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
17 ௧௭ தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
ஆசாரியன் தன் உள்ளங்கையில் மீதமுள்ள எண்ணெயை, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது மடலிலும், அவனுடைய வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும், ஏற்கெனவே பூசப்பட்டிருக்கும் குற்றநிவாரண காணிக்கை இரத்தத்தின் மேலாக பூசவேண்டும்.
18 ௧௮ தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி யெகோவாவுடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
ஆசாரியன் தனது உள்ளங்கையிலுள்ள மீதமுள்ள எண்ணெயை சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் தலையில் தடவி, அவனுக்காக யெகோவாவுக்குமுன், பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
19 ௧௯ ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
“பின்பு ஆசாரியன் பாவநிவாரண காணிக்கையைப் பலியிட்டு தன் அசுத்தத்திலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அதன்பின் ஆசாரியன் தகன காணிக்கை மிருகத்தை வெட்டிக் கொல்லவேண்டும்.
20 ௨0 சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான்.
ஆசாரியன் அதைத் தானியக் காணிக்கையுடன் பலிபீடத்தின்மேல் செலுத்தி, அவனுக்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
21 ௨௧ “அவன் இவ்விதம் செய்யமுடியாத ஏழையாக இருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
“ஆனாலும், அவன் ஏழையாய் இருந்து இவற்றை அவன் செலுத்த முடியாதவனானால், தனக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்கு அசைவாட்டப்படும்படி குற்றநிவாரண காணிக்கையாக ஒரு ஆண் செம்மறியாட்டுக் குட்டியையாவது எடுத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் ஒரு எப்பா அளவையில் பத்தில் ஒரு பங்கு சிறந்த மாவை எண்ணெய் கலந்து பிசைந்து அதைத் தானியக் காணிக்கையாகவும், ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும்.
22 ௨௨ தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
அத்துடன் அவன் தன்னால் செலுத்தக்கூடிய இரண்டு புறாக்களையோ, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் செலுத்துவதற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
23 ௨௩ தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
“எட்டாம் நாளிலே அவன் அவைகளை தனது சுத்திகரிப்புக்காக யெகோவா முன்னிலையில், சபைக் கூடாரவாசலுக்கு ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
24 ௨௪ அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி,
ஆசாரியன் ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண செம்மறியாட்டுக் குட்டியையும் காணிக்கையாக எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
25 ௨௫ குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
ஆசாரியன், குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் அதைப் பூசவேண்டும்.
26 ௨௬ அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
அத்துடன் ஆசாரியன், தன் இடது உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி,
27 ௨௭ தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து,
தன் வலதுகை ஆள்காட்டி விரலால் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் சிறிதளவை யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
28 ௨௮ தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
ஆசாரியன் தன் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் உடலில் குற்றநிவாரண காணிக்கை இரத்தம் பூசப்பட்ட இடங்களிலெல்லாம் அதாவது, வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசவேண்டும்.
29 ௨௯ தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
மேலும், யெகோவாவுக்கு முன்பாக சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி, ஆசாரியன் தன் உள்ளங்கையில் இருக்கும் மீதமுள்ள எண்ணெயை அவனுடைய தலையில் பூசவேண்டும்.
30 ௩0 பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
பின்பு ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனால் செலுத்தக்கூடிய புறாக்களையோ அல்லது மாடப்புறாக் குஞ்சுகளையோ பலியிடவேண்டும்.
31 ௩௧ அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
அவன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தானியக் காணிக்கையுடன் தகன காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். இவ்விதமாய் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக யெகோவா முன்னிலையில் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.”
32 ௩௨ தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.
தொற்றும் தோல்வியாதியை உடையவனாயிருந்து, தன் சுத்திகரிப்புக்கான வழக்கமான காணிக்கைகளைச் செலுத்தமுடியாமல் போகும் ஒருவனுக்குரிய விதிமுறைகள் இவையே என்றார்.
33 ௩௩ பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் சொன்னதாவது:
34 ௩௪ “நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால்,
“நான் உங்களுக்கு உரிமையாய்க் கொடுக்கிற கானான் நாட்டிற்குள் நீங்கள் போகும்போது, அங்கே நான், படரும் பூஞ்சணத்தை ஒரு வீட்டில் வரச்செய்தால்,
35 ௩௫ அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
அந்த வீட்டிற்குச் சொந்தக்காரன் ஆசாரியனிடம் சென்று, ‘என் வீட்டிலே பூஞ்சணம்போல் காணப்படுகிற ஒன்றைக் கண்டேன்’ என்று அறிவிக்கவேண்டும்.
36 ௩௬ அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
ஆசாரியன் பூஞ்சணத்தை பரிசோதிக்க உள்ளேபோகும் முன் அந்த வீடு வெறுமையாக்கப்பட உத்தரவிடவேண்டும். அப்பொழுது அவ்வீட்டிலுள்ள பொருட்கள் அசுத்தம் என அறிவிக்கப்படமாட்டாது. அதன்பின் ஆசாரியன் உள்ளே போய், அந்த வீட்டைப் பரிசோதனையிட வேண்டும்.
37 ௩௭ அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
அவன் சுவர்களிலுள்ள பூஞ்சணத்தைப் பரிசோதிக்க வேண்டும். அங்கு சுவரின் மேற்பரப்பைவிட ஆழமான பச்சைநிற அல்லது சிவப்புநிற குழிகள் காணப்பட்டால்,
38 ௩௮ ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
உடனே ஆசாரியன் வீட்டின் வாசலைவிட்டு வெளியே போய், அந்த வீட்டை ஏழுநாட்களுக்குப் பூட்டிவைக்கவேண்டும்.
39 ௩௯ ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
ஏழாம்நாளில் அந்த வீட்டைச் சோதனையிடும்படி ஆசாரியன் திரும்பிப் போகவேண்டும். அந்த பூஞ்சணம் சுவர்களில் படர்ந்திருந்தால்,
40 ௪0 பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
கறைப்படிந்த கற்களைப் பெயர்த்தெடுத்து, பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே எறியும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும்.
41 ௪௧ வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
வீட்டின் உட்புறச் சுவர்கள் முழுவதையும் சுரண்டி எடுத்து, சுரண்டி எடுத்ததை பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொட்டிவிடவேண்டும்.
42 ௪௨ வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
அதன்பின் அவர்கள் பெயர்த்தெடுத்த கற்களுக்குப் பதிலாக வேறே கற்களை வைத்து, வீட்டைப் புதிய சாந்தைக்கொண்டு பூசவேண்டும்.
43 ௪௩ “கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால்,
“கற்கள் பெயர்க்கப்பட்டு, வீடு சுரண்டப்பட்டு, பூசப்பட்ட பின்பும் வீட்டில் பூஞ்சணங்கள் திரும்பவும் தோன்றுமானால்,
44 ௪௪ ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.
ஆசாரியன் அங்குபோய் அவ்வீட்டைப் பரிசோதனையிட வேண்டும். அந்த பூஞ்சணம் வீட்டிலே படர்ந்திருந்தால், அது அழிவு ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அந்த வீடு அசுத்தமானது.
45 ௪௫ ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
எனவே அது இடிக்கப்பட்டு, அதன் கற்கள், மரங்கள், சாந்துப் பூச்சுகள் யாவும் அகற்றப்பட்டு பட்டணத்திற்கு வெளியே ஒரு அசுத்தமான இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும்.
46 ௪௬ வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
“அந்த வீடு பூட்டிவைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அதற்குள் செல்லும் எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
47 ௪௭ அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்.
அதேபோல் அவ்வீட்டினுள் நித்திரை செய்கிற அல்லது சாப்பிடுகிற எவனும், தன் உடைகளைக் கழுவவேண்டும்.
48 ௪௮ “ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.
“வீடு பூசப்பட்டபின், ஆசாரியன் திரும்பவும் அதைப் பரிசோதிக்க வருகிறபோது, அங்கே பூஞ்சணங்கள் படராதிருந்தால், அந்த வீட்டைச் சுத்தமானது என்று அவன் அறிவிக்கவேண்டும். ஏனெனில், பூஞ்சணம் போய்விட்டது.
49 ௪௯ அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
அதன்பின் வீட்டைச் சுத்திகரிப்பதற்கு ஆசாரியன் இரண்டு பறவைகளையும், ஒருசில கேதுரு விறகுகளையும், சிவப்புநூல் கற்றையையும், ஈசோப்புக் குழையையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
50 ௫0 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
அந்த பறவைகளில் ஒன்றை மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின் மேலாகக் கொல்லவேண்டும்.
51 ௫௧ கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,
பின்பு கேதுரு விறகையும், ஈசோப்புக் குழையையும், சிவப்புநூல் கற்றையையும், உயிரோடிருக்கும் பறவையையும் எடுத்து, கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்திலும், சுத்தமான தண்ணீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
52 ௫௨ குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,
இவ்விதமாய், கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தினாலும், சுத்தமான தண்ணீரினாலும், உயிரோடிருக்கும் பறவையினாலும், கேதுரு விறகினாலும், ஈசோப்புக் குழையினாலும், சிவப்புநூல் கற்றையாலும் அவ்வீட்டைச் சுத்திகரிக்கவேண்டும்.
53 ௫௩ உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.
பின்பு அவன் உயிரோடிருக்கும் பறவையை பட்டணத்திற்கு வெளியேயுள்ள பரந்த வெளியில் பறக்கவிடவேண்டும். இவ்விதமாய் அவன் அந்த வீட்டிற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அது சுத்தமாகும்.”
54 ௫௪ இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
எந்த விதமான தொற்றும் தோல்வியாதிக்கும் உரிய விதிமுறைகள் இவையே: சொறி,
55 ௫௫ உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
உடையிலுள்ள அல்லது வீட்டிலுள்ள பூஞ்சணம்,
56 ௫௬ தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
வீக்கம், கொப்பளம், வெண்புள்ளி
57 ௫௭ தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
ஆகியவை சுத்தமானதோ, அசுத்தமானதோ என தீர்மானிப்பதற்கான விதிமுறைகளும் இவையே. தோல்வியாதி, பூஞ்சணம் ஆகியவற்றிற்குரிய ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.

< லேவியராகமம் 14 >