< யூதா 1 >

1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா, பிதாவாகிய இறைவனின் அன்புக்குரியவர்களும், இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பில் இருக்கிறவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் நிறைவாய் பெருகுவதாக.
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுமென நான் ஆவலாய் இருந்தேன். ஆனால் இந்த விசுவாசத்தின் சத்தியத்தைக் காத்துக்கொள்ளப் போராடும்படி உங்களுக்கு எழுதி உங்களை ஊக்குவிக்க வேண்டியதே இப்பொழுது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த விசுவாசத்தை இறைவன் என்றென்றைக்குமென ஒரே முறையாய் பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தார்.
4 ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்து இருக்கிறபடியினாலேயே நான் இப்படி எழுதுகிறேன். அவர்களுடைய அழிவு முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இறை பக்தியற்றவர்கள். அவர்கள் நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஒரே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்.
5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார் என்பதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
6 தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios g126)
இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios g126)
7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios g166)
8 அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
அதேவிதமாகவே இந்தக் கனவுக்காரர் தங்கள் உடல்களைக் கனவீனப்படுத்துகிறார்கள்; அதிகாரத்தை உதாசீனம் செய்கிறார்கள்; மாட்சிமையான இறைத்தூதரைத் தூஷிக்கிறார்கள்.
9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
ஆனால் தலைமை இறைத்தூதனான மிகாயேல்கூட, மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, அவனுக்கு எதிராக அவதூறான ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரத் துணியவில்லை. அவன் பிசாசிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மட்டுமே சொன்னான்.
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத எல்லாவற்றிற்கும் எதிராக அவதூறாய்ப் பேசுகிறார்கள். பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல, தங்களுடைய இயல்பினால் அறிந்துகொள்வதையே செய்கிறார்கள், அவற்றினாலேயே அழிந்தும் போகிறார்கள்.
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனின் வழியில் நடக்கிறார்கள்; ஆதாயத்திற்காக பிலேயாமின் தவறைத் தாங்களும் செய்ய விரைகிறார்கள். கோராகைப்போல கலகம்பண்ணி, அழிந்துபோகப் போகிறார்கள்.
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
இவர்கள் உங்களுடன் அன்பின் விருந்துகளில் எந்தப் பயமுமின்றி கலந்துகொண்டு, அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் சுயநலனை மட்டுமே தேடுகிற மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் காற்றில் அடிபட்டுப்போகும் மழையற்ற மேகங்கள்; இவர்கள் பருவகாலத்திலும் கனிகொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டுமுறை செத்த மரங்கள்.
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கு இவர்களைக்குறித்து இறைவாக்குரைத்தான்: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகிறார்.
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
அவர் உலக மக்கள் எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்க வருகிறார். இறை பக்தியற்றவர்கள் தீய வழிகளில் செய்த அநேக செயல்களுக்காகவும், இறை பக்தியற்றவர்கள் இறைவனுக்கெதிராகப் பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும், அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்காகவும் அவர் வருகிறார்.”
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களுமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய தீய ஆசைகளின்படியே நடக்கிறார்கள். அவர்கள் தங்களைக்குறித்து பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுடைய சுயநலன் கருதி, மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கிறார்கள்.
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
ஆனால் அன்பான நண்பரே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் முன்னறிவித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
கடைசிக் காலங்களில், “ஏளனம் செய்கிறவர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் இறை பக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படியே நடப்பார்கள் என்றும்” அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே.
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
இந்த ஏளனக்காரர் உங்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார்கள். இவர்கள் மனித இயல்பின் உணர்ச்சிகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதில்லை.
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
ஆனால் அன்பானவர்களே, நீங்களோ உங்களது மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் பண்ணுங்கள்.
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios g166)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios g166)
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள்.
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
மற்றவர்களை தண்டனைத் தீர்ப்பின் நெருப்பிலிருந்து இழுத்து எடுத்துக் காப்பாற்றுங்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்; ஆனால், அப்போது எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடைய உடைகளும்கூட மாம்சத்தால் கறைபட்டிருக்கின்றன. எனவே, அவற்றையும் வெறுத்துத் தள்ளிவிடுங்கள்.
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn g165)

< யூதா 1 >