< யோசுவா 6 >
1 ௧ எரிகோ இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
2 ௨ யெகோவா யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
3 ௩ யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும்.
4 ௪ ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்.
5 ௫ அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார்.
6 ௬ அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
7 ௭ மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் யெகோவாவின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான்.
8 ௮ யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது.
9 ௯ எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள்.
10 ௧0 யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
11 ௧௧ அப்படியே யெகோவாவின் பெட்டியைப் பட்டணத்தைச் சுற்றி ஒருமுறை சுற்றிவரச் செய்தான்; அவர்கள் திரும்பப் முகாமிற்கு வந்து, அங்கே இரவுதங்கினார்கள்.
12 ௧௨ யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
13 ௧௩ தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்த வீரர்கள் அவர்களுக்கு முன்னே நடந்தார்கள்; பின்புறம் இருந்த படை, எக்காளங்கள் ஊதப்படும்போது, யெகோவாவின் பெட்டிக்குப் பின்னே சென்றது.
14 ௧௪ இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருமுறை சுற்றிவந்து, முகாமிற்குத் திரும்பினார்கள்; இவ்விதமாக ஆறுநாட்களும் செய்தார்கள்.
15 ௧௫ ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்.
16 ௧௬ ஏழாவதுமுறை ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதும்போது, யோசுவா மக்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
17 ௧௭ ஆனாலும் இந்தப் பட்டணமும், இதில் உள்ள அனைத்தும் யெகோவாவுக்கு சபிக்கப்பட்டதாக இருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியால், அவளும் அவளுடைய வீட்டில் இருக்கிற அனைவரும் உயிரோடிருக்கட்டும்.
18 ௧௮ சபிக்கப்பட்டதிலிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதினாலே, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகாதபடிக்கும், இஸ்ரவேல் முகாமை சபிக்கப்பட்டதாக்கி அதைக் கலங்கச்செய்யாதபடிக்கும், நீங்கள் சபிக்கப்பட்டதற்குமட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.
19 ௧௯ அனைத்து வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் யெகோவாவின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
20 ௨0 எக்காளங்களை ஊதும்போது, மக்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை மக்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடு சத்தமிடும்போது, மதில் இடிந்து விழுந்தது; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,
21 ௨௧ பட்டணத்திலிருந்த ஆண்களையும் பெண்களையும் வாலிபர்களையும் வயதானவர்களையும் ஆடுமாடுகளையும் கழுதைகள் அனைத்தையும் கூரான பட்டயத்தினால் அழித்துப்போட்டார்கள்.
22 ௨௨ யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு மனிதர்களை நோக்கி: நீங்கள் அந்த விலைமாதுவின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு வாக்குச்செய்தபடி அந்தப் பெண்ணையும் அவளுக்கு உண்டான எல்லாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
23 ௨௩ அப்பொழுது வேவுகாரர்களான அந்த வாலிபர்கள் உள்ளே சென்று, ராகாபையும் அவளுடைய தகப்பனையும், தாயையும், சகோதரர்களையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் முகாமுக்கு வெளியே இருக்கும்படி செய்தார்கள்.
24 ௨௪ பட்டணத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மட்டும் யெகோவாவின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
25 ௨௫ எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள்.
26 ௨௬ அந்தக் காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டுவதற்காக எழும்பும் மனிதன் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருப்பான்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான் என்று சாபம் கூறினான்.
27 ௨௭ இந்தவிதமாகக் யெகோவா யோசுவாவோடு இருந்தார்; அவனுடைய புகழ் தேசமெல்லாம் பரவியது.