< யோசுவா 24 >
1 ௧ பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரச்செய்து, இஸ்ரவேலின் மூப்பர்களையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், அதிகாரிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.
பின்பு யோசுவா இஸ்ரயேல் கோத்திரத்தார் எல்லாரையும் சீகேமில் கூடிவரச் செய்தான். அவர்களில் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோரை அவன் முன்னே வரும்படி அழைத்தான். அவர்கள் இறைவனுக்கு முன்பாக நின்றார்கள்.
2 ௨ அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், ஐபிராத் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்;
அப்பொழுது யோசுவா மக்கள் அனைவருக்கும் கூறியதாவது, “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: முற்காலத்தில் உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாமுக்கும், நாகோருக்கும் தகப்பனாகிய தேராகு என்பவன் யூப்ரட்டீஸ் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் பிற தெய்வங்களை வணங்கினார்கள்.
3 ௩ நான் ஐபிரத் நதிக்கு அப்பால் இருந்த உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசத்திலே வாழச்செய்து, அவனுடைய சந்ததியை மிகுதியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
ஆனால் நான் உங்கள் பிதாவாகிய ஆபிரகாமை யூப்ரட்டீஸ் நதியின் அப்பாலுள்ள நாட்டிலிருந்து தெரிந்தெடுத்து, கானான்நாடெங்கும் வழிநடத்தி, அவனுக்குப் பல வழித்தோன்றல்களைக் கொடுத்தேன். அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்,
4 ௪ ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கொடுத்து, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்திற்குப் போனார்கள்;
ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கொடுத்தேன். சேயீர் என்னும் மலைநாட்டை நான் ஏசாவுக்குக் கொடுத்தேன். ஆனால் யாக்கோபும் அவன் மகன்களும் எகிப்திற்குப் போனார்கள்.
5 ௫ நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியர்களை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படச்செய்தேன்.
“‘அதன்பின் நான் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி, அங்கே நான் செய்த செயல்களினால் எகிப்தியரைத் துன்புறுத்தி உங்களை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தேன்.
6 ௬ நான் உங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தபோது, சிவந்த சமுத்திரத்தின் கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர்கள் இரதங்களோடும், குதிரைவீரர்களோடும் உங்களுடைய பிதாக்களைச் சிவந்த சமுத்திரம்வரைப் பின்தொடர்ந்தார்கள்.
அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர்கள் கடலண்டைக்கு வந்தார்கள். எகிப்தியர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து இரதங்களோடும், குதிரைகளோடும் செங்கடல்வரை துரத்தி வந்தார்கள்.
7 ௭ அவர்கள் யெகோவா நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேகநாட்கள் வாழ்ந்தீர்கள்.
அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.
8 ௮ அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு மறுபுறத்திலே குடியிருந்த எமோரியர்களின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்செய்கிறபோது, அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்களுடைய தேசத்தை சுதந்தரித்துக்கொண்டீர்கள்; அவர்களை உங்களுக்கு முன்பாக அழித்துவிட்டேன்.
“‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள்.
9 ௯ அப்பொழுது சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபியர்களின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்செய்து, உங்களைச் சபிப்பதற்காக, பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான்.
அடுத்து சிப்போரின் மகனும் மோவாப் தேசத்தின் அரசனுமாகிய பாலாக், இஸ்ரயேலருக்கு விரோதமாகப் போரிட ஆயத்தமானபோது, அவன் உங்களைச் சபிக்கும்படி பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான்.
10 ௧0 பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன்.
ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன்.
11 ௧௧ பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன்.
“‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
12 ௧௨ எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது.
நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை.
13 ௧௩ அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார்.
இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’
14 ௧௪ ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள்.
“இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள்.
15 ௧௫ யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.
யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான்.
16 ௧௬ அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, யெகோவாவை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக.
அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
17 ௧௭ நம்மையும் நம்முடைய முற்பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய யெகோவா தானே.
எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார்.
18 ௧௮ தேசத்திலே குடியிருந்த எமோரியர்கள் முதலான எல்லா மக்களையும் யெகோவா நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகவே நாங்களும் யெகோவாவைத் தொழுதுகொள்ளுவோம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.
அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள்.
19 ௧௯ யோசுவா மக்களை நோக்கி: நீங்கள் யெகோவாவைத் தொழுதுகொள்ளமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னிக்கமாட்டார்.
அதற்கு யோசுவா மக்களிடம், “நீங்கள் உங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்ய இயலாதிருக்கிறீர்கள். அவர் பரிசுத்தமான இறைவன். அவர் வைராக்கியமுள்ள இறைவன். நீங்கள் அவருக்கு எதிராக செய்யும் கலகத்தையும், பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.
20 ௨0 யெகோவா உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் யெகோவாவை விட்டு, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை அழிப்பார் என்றான்.
அவர் உங்களுக்கு நல்லவராயிருந்த பின்பும், நீங்கள் யெகோவாவைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தால், அவரும் உங்களைவிட்டு விலகிச்சென்று, உங்கள்மேல் பெருந்துன்பத்தை வரப்பண்ணி உங்களை முடிவுறப் பண்ணுவார்” என்றான்.
21 ௨௧ மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள்.
அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “இல்லை! நாங்கள் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்றார்கள்.
22 ௨௨ அப்பொழுது யோசுவா மக்களை நோக்கி: யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள்.
அதற்கு யோசுவா, “நீங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்வதைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள்” என்றான். அதற்கு மக்களும், “ஆம், நாங்களே சாட்சிகள்,” என்றார்கள்.
23 ௨௩ அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்களுடைய நடுவே இருக்கிற அந்நிய தெய்வங்களை அகற்றிவிட்டு, உங்களுடைய இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
“அப்படியானால், இப்பொழுதே உங்கள் மத்தியிலுள்ள அந்நிய தெய்வங்களை எறிந்துவிட்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் உள்ளங்களை ஒப்புக்கொடுங்கள்” என்று யோசுவா சொன்னான்.
24 ௨௪ அப்பொழுது மக்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவாவையே தொழுதுகொண்டு, அவருடைய சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள்.
அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்து அவருக்குக் கீழ்படிவோம்” என்றார்கள்.
25 ௨௫ அந்தப்படி யோசுவா அந்த நாளில் சீகேமிலே மக்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களுக்கு அதைப் பிரமாணமாகவும் கட்டளையாகவும் ஏற்படுத்தினான்.
அந்நாளில் யோசுவா சீகேமிலே மக்களுக்காக ஒரு உடன்படிக்கையைச் செய்து அவர்களுக்குச் சட்டங்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்தினான்.
26 ௨௬ இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே யெகோவாவுடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு,
இவற்றை யோசுவா இறைவனின் சட்ட புத்தகத்தில் எழுதிவைத்தான். பின்பு யெகோவாவின் பரிசுத்த இடத்திற்கு அருகேயுள்ள கருவாலி மரத்தின்கீழ் ஒரு பெரிய கல்லை நிறுத்தினான்.
27 ௨௭ எல்லா மக்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாக இருப்பதாக; யெகோவா நம்மோடு சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்களுடைய தேவனுக்கு எதிராகப் பொய்சொல்லாதபடி, இது உங்களுக்குச் சாட்சியாக இருப்பதாக என்று சொல்லி.
அப்பொழுது அவன் எல்லா மக்களிடமும் கூறியதாவது: “இதோ பாருங்கள்; இந்தக் கல் நமக்கெதிரான சாட்சியாயிருக்கும். யெகோவா நமக்கு கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் இறைவனுக்கு உண்மையாயிராவிட்டால், இக்கல்லே உங்களுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும்” என்றான்.
28 ௨௮ யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.
அதன்பின் யோசுவா இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் சொத்துரிமை இடங்களுக்குப் போவதற்கு அனுப்பிவைத்தான்.
29 ௨௯ இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான்.
இவைகளுக்குப்பின் யெகோவாவின் பணியாளன், நூனின் மகனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதில் இறந்தான்.
30 ௩0 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய பங்கின் எல்லைக்குள்ளே அடக்கம் செய்தார்கள்.
அவர்கள் காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் யோசுவாவுக்கு உரிமைச்சொத்தாகக் கிடைத்த, திம்னாத் சேராக் என்னும் இடத்தில் அவனை அடக்கம் செய்தார்கள்.
31 ௩௧ யோசுவா உயிரோடு இருந்த எல்லா நாட்களிலும், யெகோவா இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் அனைத்தையும் அறிந்து யோசுவாவிற்குப்பின்பு அநேகநாட்கள் உயிரோடு இருந்த மூப்பர்களுடைய எல்லா நாட்களிலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவைச் சேவித்தார்கள்.
யோசுவாவின் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலர்கள் யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். அவனுக்குப்பின் யெகோவா இஸ்ரயேலருக்குச் செய்த அனைத்தையும் அனுபவத்தில் கண்ட சபைத்தலைவர்களுடைய வாழ்நாள் முழுவதிலும்கூட இஸ்ரயேலர் யெகோவாவுக்கே பணிசெய்தார்கள்.
32 ௩௨ இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியர்களுடைய மகன்களின் கையில் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கின நிலத்தின் பங்கிலே அடக்கம்செய்தார்கள்; அந்த நிலம் யோசேப்பின் சந்ததியினர்களுக்குச் சொந்தமானது.
எகிப்தில் இருந்து இஸ்ரயேலர் கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகள் சீகேமில் அடக்கம் செய்யப்பட்டன. அந்த நிலத்துண்டை ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுகளுக்கு யாக்கோபு வாங்கியிருந்தான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன். இந்த நிலத்துண்டு யோசேப்பின் சந்ததிகளின் உரிமைச் சொத்தாகும்.
33 ௩௩ ஆரோனின் மகனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவனுடைய மகனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்செய்தார்கள்.
ஆரோனின் மகனாகிய எலெயாசார் இறந்தபோது, கிபியா என்னும் இடத்தில் அவன் அடக்கம் செய்யப்பட்டான். எப்பிராயீமின் மலைநாட்டில் இருக்கும் இந்த நிலம் பினெகாசின் மகனுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.