< யோசுவா 1 >

1 யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே இறந்தபின்பு, யெகோவா மோசேயின் ஊழியக்காரனான நூனின் மகனாகிய யோசுவாவைப் பார்த்து:
யெகோவாவின் ஊழியன் மோசே இறந்தபின், மோசேயின் உதவியாளனான நூனின் மகனாகிய யோசுவாவிடம் யெகோவா கூறியதாவது:
2 என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துபோனான்; “இப்பொழுது நீயும் இந்த மக்கள் எல்லோரும் எழுந்து, இந்த யோர்தான் நதியைக் கடந்து, இஸ்ரவேல் மக்களுக்கு நான் கொடுக்கும் தேசத்திற்குப் போங்கள்.
“என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துவிட்டான். நீயும் இந்த மக்களும் எழுந்து, நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்க இருக்கும் நாட்டிற்குள் போகும்படி, இப்பொழுதே யோர்தான் நதியைக் கடக்க ஆயத்தமாகுங்கள்.
3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்களுடைய கால்கள் மிதிக்கும் எல்லா இடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
மோசேக்கு நான் வாக்களித்தபடியே நீங்கள் காலடிவைக்கும் இடத்தையெல்லாம், நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
4 வனாந்திரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐப்பிராத்து நதியான பெரிய நதிவரைக்கும் உள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் மறைகிற திசையான மத்திய தரைக்கடல் வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும்.
பாலைவனத்திலிருந்து, லெபனோன் வரைக்கும், யூப்ரட்டீஸ் நதியிலிருந்து, பெரிய நதிவரைக்கும் உள்ள ஏத்தியருடைய நாடு முழுவதும் மேற்கேயுள்ள மத்தியத் தரைக்கடல் வரைக்கும் உங்களுக்குரிய பிரதேசத்தின் நிலப்பகுதி பரந்திருக்கும்.
5 நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
உன் வாழ்நாளெல்லாம் உன்னை எதிர்த்து வெற்றிபெற எவனாலும் முடியாதிருக்கும். நான் மோசேயுடன் இருந்ததுபோல, உன்னுடனும் இருப்பேன்; நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலகவுமாட்டேன்; உன்னைக் கைவிடவுமாட்டேன்.
6 பெலன்கொண்டு திடமனதாக இரு; இந்த மக்களின் முற்பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.
நீ பலங்கொண்டு தைரியமாய் இரு; ஏனெனில் நான் இந்த மக்களின் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்ட நாட்டை அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி, நீ அவர்களை வழிநடத்துவாய்.
7 என் ஊழியக்காரனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்ய கவனமாக இருப்பதற்கு மிகவும் பெலன்கொண்டு திடமனதாக இரு; நீ போகும் இடங்களெல்லாம் புத்திமானாக நடந்துகொள்ளும்படி, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாமல் இருப்பாயாக.
“பலங்கொண்டு மிகத்தைரியமாயிரு. என் ஊழியன் மோசே உனக்கு அளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியக் கவனமாயிரு; அவற்றைவிட்டு வலதுபுறமோ இடதுபுறமோ நீ விலகாதே; அப்பொழுது நீ செல்லுமிடமெல்லாம் வெற்றிபெறுவாய்.
8 இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாக இருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கச்செய்வாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
இந்த சட்டத்தின் புத்தகத்தை உன் வாயிலிருந்து விலக்காமல் தொடர்ந்துபடி; அதில் எழுதியிருக்கிற யாவற்றையும் செய்யக் கவனமாயிருக்கும்படி, அதில் இரவும் பகலும் தியானமாய் இரு. அப்பொழுது நீ செய்யும் எல்லாவற்றிலும் செழித்து வெற்றிபெறுவாய்.
9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பெலன்கொண்டு திடமனதாக இரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடங்களெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னோடு இருக்கிறார்” என்றார்.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு தைரியமாயிரு. திகிலடையாதே; மனச்சோர்வடையாதே. ஏனெனில், நீ எங்கே சென்றாலும் உன் இறைவனாகிய யெகோவா உன்னுடனே இருப்பார்.”
10 ௧0 அப்பொழுது யோசுவா மக்களின் தலைவர்களை நோக்கி:
எனவே யோசுவா மக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,
11 ௧௧ நீங்கள் முகாமிற்குள்ளே நடந்துபோய், மக்களைப் பார்த்து: “உங்களுக்கு உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சுதந்தரித்துக்கொள்வதற்காகக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாட்களுக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள்” என்று சொல்லச்சொன்னான்.
“நீங்கள் முகாமின் நடுவே சென்று மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவெனில், ‘உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஆயத்தம் செய்யுங்கள்; ஏனெனில் இன்றிலிருந்து மூன்றுநாட்களுக்குள்ளே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்போகிற நாட்டிற்குப்போய், அதை உங்கள் உரிமையாக்கிக்கொள்ள யோர்தான் நதியைக் கடப்பீர்கள்’” என்றான்.
12 ௧௨ பின்பு யோசுவா; ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களையும் நோக்கி:
மேலும் யோசுவா ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கூறியதாவது:
13 ௧௩ யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; “உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களை இளைப்பாறச்செய்து, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.
“யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுகூருங்கள். ‘யெகோவாவாகிய உங்கள் இறைவன் இந்த நாட்டை உங்களுக்கு வழங்கி, உங்களுக்கு இளைப்பாறுதல் கொடுத்தாரே.’
14 ௧௪ உங்களுடைய மனைவிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர்கள் எல்லோரும் உங்களுடைய சகோதரர்களுக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,
மோசே உங்களுக்குக் கொடுத்த யோர்தானின் கிழக்கேயுள்ள நிலப்பகுதியில் உங்கள் மனைவிகளும், பிள்ளைகளும், ஆடுமாடுகளும் தங்கியிருக்கலாம். ஆனால் உங்களிலுள்ள யுத்தம் செய்யும் மனிதர் முழு ஆயுதங்களையும் தரித்தவர்களாய் உங்கள் சகோதரர்களுக்கு முன்னே யோர்தானைக் கடந்து செல்லவேண்டும். இவ்வாறு நீங்கள் உங்கள் சகோதரருக்கு உதவிசெய்ய வேண்டும்.
15 ௧௫ யெகோவா உங்களைப்போல உங்களுடைய சகோதரர்களையும் இளைப்பாறச்செய்து, அவர்களும் உங்களுடைய தேவனாகிய யெகோவா தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, அவர்களுக்கு உதவிசெய்வீர்களாக; பின்பு நீங்கள் யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இந்தப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்களுடைய சொந்தமான தேசத்திற்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக” என்றான்.
யெகோவா உங்களுக்கு இளைப்பாறுதல் அளித்ததுபோல, அவர்களுக்கும் இளைப்பாறுதல் அளிக்கும்வரையும் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நிலப்பகுதியை அவர்களும் தங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்வரையும் நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். அதன்பின் நீங்கள் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்குக் கிழக்கே சூரியன் உதிக்கும் திசையில் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் அங்கே குடியிருக்கலாம்” என்றான்.
16 ௧௬ அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம்.
அதற்கு அவர்கள் யோசுவாவிடம் கூறியதாவது, “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம். நீர் அனுப்பும் இடங்களுக்கெல்லாம் நாங்கள் செல்வோம்.
17 ௧௭ நாங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்ததுபோல உமக்கும் கீழ்ப்படிவோம்; உம்முடைய தேவனாகிய யெகோவா மட்டும் மோசேயோடு இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.
மோசேக்கு நாங்கள் முழுவதும் கீழ்ப்படிந்ததுபோல, உமக்கும் கீழ்ப்படிவோம். உமது இறைவனாகிய யெகோவா மோசேயுடன் இருந்ததுபோலவே, உம்மோடும் இருப்பாராக.
18 ௧௮ நீர் எங்களுக்குக் கட்டளையிடும் எல்லா காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேட்காமல், உம்முடைய கட்டளைக்கு எதிராக முரட்டாட்டம் செய்கிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பெலன்கொண்டு திடமனதாக மட்டும் இரும் என்றார்கள்.
உமது வார்த்தைக்கு எதிராகக் கலகம்செய்து, நீர் கட்டளையிட்டுச் சொல்கிற எந்த வார்த்தைக்காவது கீழ்ப்படியாதிருப்பவன் எவனும் கொல்லப்படுவான். நீர் பலங்கொண்டு தைரியமாய் மட்டும் இரும்!” என்றார்கள்.

< யோசுவா 1 >