< யோவான் 1 >

1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.
2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான்.
7 அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான்.
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
9 உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம்.
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை.
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.”
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம்.
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது.
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே:
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
“நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான்.
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான்.
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான்.
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன்.
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன்.
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார்.
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார்.
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார்.
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

< யோவான் 1 >