< யோவேல் 2 >

1 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த மலையிலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் தத்தளிப்பார்களாக; ஏனெனில் யெகோவாவுடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த குன்றிலே எச்சரிப்பின் ஒலியை எழுப்புங்கள். நாட்டில் வாழும் அனைவரும் நடுங்குவார்களாக; ஏனெனில், யெகோவாவின் நாள் வருகிறது. அது நெருங்கி வந்திருக்கிறது.
2 அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை.
அது இருளும் காரிருளும் கலந்த நாள், மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள். விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல் வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது! இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை, வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை.
3 அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும், அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும். அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும், அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது; அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை.
4 அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலைப்போல இருக்கும்; அவைகள் குதிரை வீரர்களைப்போல ஓடும்.
அவை குதிரைகளின் தோற்றமுடையவை; அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன.
5 அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், வைக்கோலை எரிக்கிற நெருப்பு ஜூவாலையின் சத்தத்தைப்போலவும், போருக்கு ஆயத்தப்பட்ட பெரும் மக்கள்கூட்டத்தின் இரைச்சலைப்போலவும், மலைகளுடைய உச்சியின்மேல் குதிக்கும்.
தேர்களின் இரைச்சலைப் போன்ற சத்தத்துடனும், காய்ந்த சருகுகளை எரிக்கும்போது எழும்பும் சத்தத்துடனும், யுத்தத்திற்கு அணிவகுக்கும் வலிமைமிக்க படையைப்போல் அவை மலைமேல் பாய்ந்து வருகின்றன.
6 அவைகளுக்கு முன்பாக மக்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
அவைகளைக் கண்டதும் நாடுகள் நடுங்கும்; பயத்தால் எல்லாருடைய முகங்களும் வெளிறிப்போகும்.
7 அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
வெட்டுக்கிளிகள் இராணுவவீரரைப்போல் தாவி ஓடுகின்றன; அவை போர் வீரரைப்போல் மதில்களில் ஏறுகின்றன. அவை தங்கள் பாதையிலிருந்து விலகாமல் நேராய் அணிவகுத்துச் செல்கின்றன.
8 ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம் ஏற்படாமற்போகும்.
அவை ஒன்றையொன்று இடித்துக்கொள்ளாமல் ஒவ்வொன்றும் தன் வழிதவறாமல் செல்கின்றன. அணிவகுப்பைக் குலைக்காமல் போராயுதங்களை இடித்து முன்னேறுகின்றன.
9 அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; ஜன்னல் வழியாகத் திருடனைப்போல உள்ளே நுழையும்.
அவை நகரத்தை நோக்கி விரைகின்றன; மதில்கள்மேல் ஓடுகின்றன. வீடுகளுக்குள் ஏறுகின்றன; அவை திருடர்களைப்போல் ஜன்னல் வழியே நுழைகின்றன.
10 ௧0 அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும்.
அவற்றின் முன்பாக பூமி அதிருகிறது, வானம் அசைகிறது. சூரியனும் சந்திரனும் இருளடைகின்றன, நட்சத்திரங்கள் ஒளிகொடாதிருக்கின்றன.
11 ௧௧ யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?
யெகோவா தமது படையின் முன்னின்று முழக்கமிடுகிறார்; அவருடைய பாளையம் மிகப்பெரியது, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறதற்கு வலிமைமிக்கது. யெகோவாவின் நாள் பெரிதும் பயங்கரமுமானது. அதை யாரால் சகிக்கமுடியும்?
12 ௧௨ ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
13 ௧௩ நீங்கள் உங்கள் உடைகளையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாக இருக்கிறார்.
உங்கள் உடைகளையல்ல, உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர்.
14 ௧௪ ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.
யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம்.
15 ௧௫ சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்.
ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள்.
16 ௧௬ மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக.
மக்களை ஒன்றுசேர்த்து, சபையை பரிசுத்தம் செய்யுங்கள். முதியோரை ஒன்றுகூட்டுங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மணமகன் தன் அறையையும், மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும்.
17 ௧௭ யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக.
18 ௧௮ அப்பொழுது யெகோவா தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார்.
அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு, தமது மக்களில் அனுதாபங்கொள்வார்.
19 ௧௯ யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது: “இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்; நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை நிந்தையாக வைக்கமாட்டேன்.
20 ௨0 வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
“வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்; பாழடைந்த வறண்ட நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடுவேன். அதன் முன்னணிப் படைகளை கிழக்கே சாக்கடலிலும், அதன் பின்னணிப் படைகளை மேற்கே மத்திய தரைக்கடலிலும் தள்ளுவேன். அங்கே அவற்றின் நாற்றமும் தீய வாடையும் நாட்டின் மேலெழும்பும்.” நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
21 ௨௧ தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; யெகோவா பெரிய செயல்களைச் செய்வார்.
நாடே நீ பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.
22 ௨௨ வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும்.
காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்திரத்தின் மேய்ச்சலிடங்கள் பசுமையாகின்றன. மரங்கள் கனி கொடுக்கின்றன; அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாய்ப் பலனளிக்கின்றன.
23 ௨௩ சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார்.
சீயோன் மக்களே, மகிழுங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள். ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார். முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார்.
24 ௨௪ களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்; ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும்.
25 ௨௫ நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.
நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும், இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும், வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குப் பதிலாக, உங்களுக்கு ஈடுசெய்வேன்.
26 ௨௬ நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாக நடத்திவந்த உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
நீங்கள் திருப்தியாகும்வரை சாப்பிடுவதற்கு உங்களுக்கு உணவு நிறைவாய் இருக்கும். அப்பொழுது உங்களுக்காக அதிசயங்கள் செய்த உங்கள் யெகோவாவாகிய இறைவனின் பெயரைத் துதிப்பீர்கள்; என்னுடைய மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.
27 ௨௭ நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய யெகோவா, வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
அப்பொழுது நான் இஸ்ரயேலில் உங்களுடன் இருக்கிறேன் என்றும், உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்றும், வேறொருவரும் இல்லை என்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் இனி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்.
28 ௨௮ அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள்.
“அதன்பின்பு, நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்; உங்கள் முதியவர்கள் கனவுகளையும் உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29 ௨௯ ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.
மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியைப் பொழிவேன்.
30 ௩0 வானத்திலும் பூமியிலும் இரத்தம் நெருப்புப் புகைத்தூண்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
வானத்திலும் பூமியிலும் இரத்தமும் நெருப்பும் புகை மண்டலமுமாகிய அதிசயங்களை நான் காண்பிப்பேன்.
31 ௩௧ யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
பெரிதும் பயங்கரமுமான யெகோவாவின் அந்த நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும், சந்திரன் இரத்தமாக மாறும்.
32 ௩௨ அப்பொழுது யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; யெகோவா சொன்னபடி, சீயோன் மலையிலும் எருசலேமிலும், யெகோவா வரவழைக்கும் மீதியாக இருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.
அப்போது யெகோவாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற, யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்; யெகோவா சொன்னதுபோலவே, மீந்திருப்பவர்கள் மத்தியிலிருந்து யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்களுக்கு, சீயோன் மலையிலும் எருசலேமிலும் மீட்பு உண்டு.

< யோவேல் 2 >