< யோபு 25 >
1 ௧ அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2 ௨ “அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
3 ௩ அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது?
4 ௪ இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
5 ௫ சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
6 ௬ புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”