< யோபு 18 >
1 ௧ அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2 ௨ “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
3 ௩ நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
4 ௪ கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
5 ௫ துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
6 ௬ அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
7 ௭ அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
8 ௮ அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
9 ௯ கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
10 ௧0 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
11 ௧௧ சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
12 ௧௨ அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
13 ௧௩ அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
14 ௧௪ அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
15 ௧௫ அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.
16 ௧௬ கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
17 ௧௭ அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
18 ௧௮ அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
19 ௧௯ அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.
20 ௨0 அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.
21 ௨௧ அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.