< எரேமியா 3 >
1 ௧ ஒருமனிதன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நிய மனிதனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனிதர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசருடன் வேசித்தனம்செய்தாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று யெகோவா சொல்லுகிறார்.
“ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்தபின்பு, அவள் அவனைவிட்டு, போய் வேறொரு மனிதனைத் திருமணம் செய்தால், முந்திய கணவன் அவளிடம் திரும்பிப் போகலாமோ? அவ்விதம் செய்தால் நாடு முழுவதும் கறைப்படுத்தப்பட்டுப் போகாதோ? நீயோ பல காதலர்களுடன் வேசியாக வாழ்ந்திருக்கிறாய். இப்பொழுது என்னிடம் திரும்புவாயா?” என்று யெகோவா அறிவிக்கிறார்.
2 ௨ நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்செய்யாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்திரத்தில் அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.
“நீ மேலே நோக்கி வறண்ட மேடுகளைப் பார். நீ வேசித்தனம் செய்யாத இடமேதும் உண்டோ? பாலைவனத்தின் நாடோடியைப்போல், காதலருக்காக தெருவோரங்களில் காத்துக்கொண்டிருந்தாய். உன்னுடைய வேசித்தனத்தினாலும், கொடுமையினாலும் நாட்டைக் கறைப்படுத்தினாய்.
3 ௩ அதினிமித்தம் மழை பெய்யாமலும், பின்மாரியில்லாமலும் போனது; உனக்கோ, சோரப்பெண்ணின் நெற்றியிருக்கிறது; நீயோ: வெட்கப்படமாட்டேன் என்கிறாய்.
இதனால் மழை வீழ்ச்சி தடைசெய்யப்பட்டு, கோடை மழையும் பெய்யவில்லை. அப்படியிருந்தும் நீ ஒரு வேசியின் நாணமற்ற தோற்றத்தை உடையவளாய் இருக்கிறாய்; நீ வெட்கங்கொண்டு நாணமடைய மறுக்கிறாய்.
4 ௪ நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
இப்பொழுதும் நீ என்னைக் கூப்பிட்டு, ‘என் பிதாவே, என் வாலிப காலத்திலிருந்து என் நண்பராயிருப்பவரே,
5 ௫ சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மீறிப்போகிறாய் என்கிறார்.
நீர் எப்போதும் கோபமாயிருப்பீரோ? உமது பெருங்கோபம் என்றைக்கும் நீடித்திருக்குமோ?’ என்று கேட்கவில்லையா? நீ பேசுவது இப்படித்தான், ஆனால் நீ உன்னால் முடிந்த தீமையையெல்லாம் செய்கிறாய்.”
6 ௬ யோசியா ராஜாவின் நாட்களில் யெகோவா என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான எல்லா மலையின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்செய்தாள்.
யோசியா அரசனின் ஆட்சிக்காலத்தில் யெகோவா என்னிடம், “பின்மாற்றமடைந்த இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும் விபசாரம் பண்ணினாள்.
7 ௭ அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
இவை எல்லாவற்றையும் செய்தபின்பாவது என்னிடம் திரும்பி வருவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ திரும்பி வரவில்லை. இதை அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகியும் கண்டாள்.
8 ௮ சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்செய்த காரணங்கள் எல்லாவற்றுக்காகவும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதல் சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்செய்தாள், இதை நான் கண்டேன்.
பின்மாற்றமடைந்த இஸ்ரயேலுக்கு அவளுடைய எல்லா விபசாரங்களின் நிமித்தமும், அவளுக்கு விவாகரத்துச் சீட்டைக் கொடுத்து, அவளை அனுப்பிவிட்டேன். இருந்தும் அவளுடைய சகோதரியான யூதா என்ற துரோகி பயப்படாததை நான் கண்டேன். அவளும் வெளியே போய் விபசாரம் பண்ணினாள்.
9 ௯ பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்பட்டுப்போனது; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்துகொண்டிருந்தாள் என்றார்.
இஸ்ரயேலின் ஒழுக்கக்கேடு யூதாவுக்கு மிகவும் அற்பமாய் இருந்தபடியால், அவளும் தன் நாட்டைக் கறைப்படுத்தி, கற்களோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணினாள்.
10 ௧0 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.
இப்படியெல்லாம் இருக்கையில் இஸ்ரயேலுடைய சகோதரியான யூதா என்ற துரோகி, வஞ்சகமாய் என்னிடம் திரும்பி வந்தாளேயல்லாமல், முழுமனதுடன் திரும்பி வரவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
11 ௧௧ பின்னும் யெகோவா என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.
யெகோவா என்னிடம் சொன்னதாவது: “துரோகியாகிய யூதாவைப் பார்க்கிலும் உண்மையற்ற இஸ்ரயேல் நீதியுள்ளவளாய் இருக்கிறாள்.
12 ௧௨ நீ போய் வடதிசையை நோக்கி சொல்லவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கச்செய்வதில்லை; நான் கிருபையுள்ளவரென்று யெகோவா சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
ஆகவே நீ போய் வடக்கு நோக்கி இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து: “பின்மாற்றமடைந்த இஸ்ரயேலே, திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார். “இனி ஒருபோதும் உங்கள்மேல் கோபத்தைக் காண்பிப்பதில்லை, ஏனெனில் நான் இரக்கமுள்ளவர்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என்றைக்கும் கோபமாயிருக்கமாட்டேன்.
13 ௧௩ நீயோ, உன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்த் துரோகம்செய்து, பச்சையான எல்லா மரத்தின்கீழும் அந்நியருடன் சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்தைக் கேட்காமல்போனதையும் ஒத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்.
உன் குற்றத்தை மாத்திரம் ஏற்றுக்கொள். நீ உன் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாய். ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும், அந்நிய தெய்வங்களுடன் சேர்ந்து கேடாக நடந்து எனக்குக் கீழ்ப்படியாமல் போனாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
14 ௧௪ சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,
“பின்மாற்றமடைந்த மக்களே! திரும்பிவாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் நானே உங்கள் கணவன். நான் உங்களை ஒரு பட்டணத்திலிருந்து ஒருவனாகவும், ஒரு வம்சத்திலிருந்து இருவராகவும் தெரிந்தெடுத்து, உங்களைச் சீயோனுக்குக் கொண்டுவருவேன்.
15 ௧௫ உங்களுக்கு என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியுடனும் மேய்ப்பார்கள்.
என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குத் தருவேன். அவர்கள் அறிவோடும், விவேகத்தோடும் உங்களை வழிநடத்துவார்கள்.
16 ௧௬ நீங்கள் தேசத்தில் பெருகிப் பலுகுகிற அந்நாட்களில், அவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி யென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனி சரிசெய்யப்படுவதும் இல்லை என்று யெகோவா சொல்லுகிறார்.
அந்நாட்களில் நாட்டில் உங்கள் எண்ணிக்கை மிகுதியாய் பெருகியிருக்கும்” என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது மனிதர்கள், யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டார்கள். அதைப்பற்றி ஒருபோதும் அவர்கள் எண்ணுவதோ நினைப்பதோ இல்லை; அதைக் குறித்த மனவருத்தமும் அவர்களுக்கு ஏற்படாது. அதுபோல வேறொன்று செய்யப்படுவதும் இல்லை.
17 ௧௭ அக்காலத்தில் எருசலேமை யெகோவாவுடைய சிங்காசனம் என்பார்கள்; எல்லா தேசத்தாரும் எருசலேமில் விளங்கிய யெகோவாவுடைய பெயருக்காக அதனுடன் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் விருப்பத்தின்படி நடக்கமாட்டார்கள்.
அக்காலத்தில் எல்லா மக்களும் எருசலேமை யெகோவாவினுடைய சிங்காசனம் என்று கூறுவார்கள். யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்காக எருசலேமில் ஒன்று கூடுவார்கள். தொடர்ந்து அவர்கள் தங்களுடைய தீமையான இருதயங்களின் பிடிவாதத்துடன் நடக்கமாட்டார்கள்.
18 ௧௮ அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக பாபிலோன் தேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
அந்நாட்களில் யூதா வம்சத்தார், இஸ்ரயேல் வம்சத்தாருடன் ஒன்றுசேருவார்கள். அவர்கள் வடதிசையிலுள்ள நாட்டிலிருந்து நான் உங்கள் முற்பிதாக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வருவார்கள்.
19 ௧௯ நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையில் வைத்து, தேசங்களுக்குள்ளே நல்ல சொந்தமான தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன்.
“நான், “‘உங்களை எவ்வளவு சந்தோஷமாக என் சொந்தப் பிள்ளைகளைப்போல் நடத்துவேன்; எந்த நாட்டினுடைய உரிமைச்சொத்தைப் பார்க்கிலும், மிக நலமான விரும்பத்தக்க ஒரு நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று நான், நானே சொன்னேன். நீங்கள் என்னை, ‘பிதாவே’ என்று அழைப்பீர்கள் என்றும், என்னைப் பின்பற்றுவதை விட்டுத் திரும்பமாட்டீர்கள் என்றும் நான் நினைத்திருந்தேன்.
20 ௨0 ஒரு மனைவி தன் கணவனுக்குத் துரோகம்செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது உண்மை என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆனாலும் இஸ்ரயேல் வீட்டாரே, தன் கணவனுக்கு உண்மையற்று இருக்கும் ஒரு பெண்ணைப்போல, நீங்கள் எனக்கு உண்மையற்று இருந்தீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
21 ௨௧ இஸ்ரவேல் மக்கள் தங்கள் வழியை மாற்றி, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்ததினால் அழுதுகொண்டு விண்ணப்பம் செய்யும் சத்தம் உயர்ந்த இடங்களில் கேட்கப்படும்.
வறண்ட மேடுகளில் அழுகை கேட்கிறது; இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டுதலுமே அது. ஏனெனில் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்கேடாக்கி தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்துவிட்டார்கள்.
22 ௨௨ ஒழுக்கம்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் ஒழுக்ககேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய யெகோவா.
“உண்மையற்ற மக்களே திரும்பிவாருங்கள்; நான் உங்கள் பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்” என்று யெகோவா சொல்கிறார். அதற்கு மக்கள், “ஆம், நீரே எங்கள் இறைவனாகிய கர்த்தராயிருப்பதால் நாங்கள் உம்மிடம் வருவோம்.
23 ௨௩ குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது வீண் என்பது மெய்; இஸ்ரவேலின் பாதுகாப்பு எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் இருப்பது என்பது உண்மையே.
குன்றுகளிலும் மலைகளிலும் செய்துவந்த விக்கிரக வழிபாட்டின் ஆரவாரம், உண்மையில் ஒரு ஏமாற்றுச் செயலே; இஸ்ரயேலின் இரட்சிப்பு நிச்சயமாக எங்கள் இறைவனாகிய யெகோவாவிலேயே இருக்கிறது.
24 ௨௪ இந்த வெட்கமானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் மகன்களையும் மகள்களையும் அழித்துப்போட்டது.
எங்கள் வாலிப காலத்திலிருந்து, எங்கள் முற்பிதாக்களின் உழைப்பின் பலனான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்களின் மகன்களையும், மகள்களையும் வெட்கக்கேடான தெய்வங்கள் விழுங்கிவிட்டன.
25 ௨௫ எங்கள் வெட்கத்தில் கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சொல்லைக் கேட்காமலும்போனோம்.
நாங்கள் எங்கள் வெட்கத்திலேயே கிடப்போம், எங்கள் அவமானம் எங்களை மூடிக்கொள்ளட்டும். நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறோம், நாங்கள் எங்கள் இளமைப் பருவத்திலிருந்து இன்றுவரை எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கவில்லை” என்றார்கள்.