< ஏசாயா 33 >
1 ௧ கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ, நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள்.
2 ௨ யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.
3 ௩ அமளியின் சத்தத்தினாலே மக்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது தேசங்கள் சிதறடிக்கப்படும்.
4 ௪ வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனிதர்கள் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.
5 ௫ யெகோவா உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.
6 ௬ பூரண இரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; யெகோவாவுக்குப் பயப்படுதலே உன்னுடைய பொக்கிஷம்.
7 ௭ இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து பிரதிநிதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
8 ௮ பாதைகள் பாழாயின; வழிப்போக்கர்கள் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழுகிறான்; மனிதனை மதிக்காமல் போகிறான்.
9 ௯ தேசம் துக்கித்து சோர்வடைந்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்திரத்திற்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
10 ௧0 இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று யெகோவா சொல்கிறார்.
11 ௧௧ பதரைக் கர்ப்பந்தரித்து வைக்கோலைப் பெறுவீர்கள்; நெருப்பைப்போல் உங்கள் சுவாசமே உங்களை சுட்டெரிக்கும்.
12 ௧௨ மக்கள் சுண்ணாம்பைப்போல நீர்த்துப்போவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.
13 ௧௩ தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.
14 ௧௪ சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரர்களை நடுக்கம்பிடிக்கிறது; சுட்டெரிக்கும் நெருப்பிற்கு முன்பாக நம்மில் தங்கியிருப்பவன் யார்? நிலையான நெருப்புத்தழலுக்கு முன்பாக நம்மில் குடியிருப்பவன் யார் என்கிறார்கள்.
15 ௧௫ நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ,
16 ௧௬ அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
17 ௧௭ உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.
18 ௧௮ உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்காளன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?
19 ௧௯ உனக்குப் புரியாத மொழியையும், புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் கொடூர மக்களை இனி நீ பார்க்கமாட்டாய்.
20 ௨0 நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.
21 ௨௧ மகிமையுள்ள யெகோவா அங்கே நமக்கு மிக அகலமான நதிகளும் ஆறுகளுமுள்ள இடம் போலிருப்பார்; தண்டுவலிக்கிற படகு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
22 ௨௨ யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர் நம்மை காப்பாற்றுவார்.
23 ௨௩ உன் கயிறுகள் தளர்ந்துபோகும்; பாய்மரத்தைப் பலப்படுத்தவும், பாயை விரிக்கவும் முடியாமற்போகும்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையிடுவார்கள்.
24 ௨௪ வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் குடியிருக்கிற மக்களின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.