< ஏசாயா 27 >

1 அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
அந்த நாளிலே, யெகோவா விரைந்தோடும் பாம்பை, லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள வாளினால் தண்டிப்பார். அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார்.
2 அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.
அந்த நாளிலே, “பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்:
3 யெகோவாவாகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாமலிருக்க அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்; இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி, நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன்.
4 கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்;
நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை. அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால், நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்; அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன்.
5 இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னுடன் ஒப்புரவாகட்டும்; அவன் என்னுடன் ஒப்புரவாவான்.
அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்; என்னுடன் சமாதானம் செய்யட்டும், ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.”
6 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து, முழு உலகத்தையும் பலனால் நிரப்பும்.
7 அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ?
இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல, இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ? இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல், இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே!
8 தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்; கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல், அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார்.
9 ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும். அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே: அவர் பலிபீடக் கற்களை எல்லாம் சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது, அசேரா தேவதைத் தூண்களோ, தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது.
10 ௧0 பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
அரணாக்கப்பட்ட பட்டணம், குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது; அங்கே கன்றுகள் மேயும், அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்; அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும்.
11 ௧௧ அதின் கிளைகள் உலரும்போது ஒடிந்துபோகும்; பெண்கள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள மக்களல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபை செய்யாமலும் இருப்பார்.
அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன; பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்; எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை, அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை.
12 ௧௨ அக்காலத்திலே, யெகோவா ஆற்றங்கரையின் விளைவு துவங்கி எகிப்தின் நதிவரை போரடிப்பார்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள்.
அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள்.
13 ௧௩ அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த மலையிலே யெகோவாவைப் பணிந்துகொள்ளுவார்கள்.
அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள்.

< ஏசாயா 27 >