< ஓசியா 7 >

1 நான் என் மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே கொள்ளைக்காரர்களின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள்.
நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது, எப்பிராயீமின் பாவங்களும், சமாரியாவின் குற்றங்களும் வெளிப்படும். அவர்கள் வஞ்சனையைக் கைக்கொள்கிறார்கள்; திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே போகிறார்கள், கொள்ளையர்கள் வீதிகளில் சூறையாடுகிறார்கள்.
2 அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய செயல்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக இருக்கிறது.
அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன; அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன.
3 ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
“தங்கள் கொடுமையினால் அரசனையும், பொய்யினால் இளவரசர்களையும் மகிழ்விக்கின்றார்கள்.
4 அவர்கள் எல்லோரும் விபசாரக்கள்ளர்; அப்பம் சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது புளித்துப்போகும்வரை, நெருப்பை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.
அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர். அவர்கள் அப்பம் சுடும் அடுப்பைப்போல் எரிந்துகொண்டே இருக்கிறார்கள். மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம்வரைக்கும், அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை.
5 நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சைரச தோல்பைகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; பரிகாசம் செய்கிறவர்களுடன்கூட அவன் தன் கையை நீட்டுகிறான்.
எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில், இளவரசர்கள் திராட்சை மதுவினால் வெறிகொண்டார்கள்; அரசன் ஏளனக்காரர்களுடன் கைகோத்திருக்கிறான்.
6 அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இரவுமுழுவதும் தூங்கினாலும், காலையிலோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாக எரியும்.
அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால் அடுப்பைப்போல் எரிகின்றன; இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப்போல் எரிகிறது; காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருக்கிறது.
7 அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.
அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள். அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்; ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை.
8 எப்பிராயீம் அந்நியமக்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம்.
“எப்பிராயீம் பிற நாடுகளுடன் கலந்துகொள்கிறான்; எப்பிராயீம் புரட்டிப் போடாததினால் ஒரு பக்கம் வேகாத அப்பம் போலிருக்கிறான்.
9 அந்நியர்கள் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமுடியும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாமல் இருக்கிறான்.
அந்நியர் அவன் பெலத்தை உறிஞ்சுகிறார்கள்; ஆனால் அவன் அதை உணர்கிறதில்லை. அவன் தலையில் நரைமயிர் தோன்றிவிட்டது, ஆயினும் அதையும் அவன் கவனிக்கவில்லை.
10 ௧0 இஸ்ரவேலின் பெருமை அவர்கள் முகத்திற்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது. இவையெல்லாம் நடந்துங்கூட, அவர்கள் தனது இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவுமில்லை, அவரைத் தேடவுமில்லை.
11 ௧௧ எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள்.
“எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன், அவன் புத்தியில்லாதவனாயும் இருக்கிறான். முதலில் அவன் எகிப்தை உதவிக்குக் கூப்பிடுகிறான்; பின் அசீரியாவினிடத்திற்கும் திரும்புகிறான்.
12 ௧௨ அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழச்செய்வேன்; அவர்களுடைய சபையில் கேள்விப்பட்டபடியே அவர்களைத் தண்டிப்பேன்.
எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது, நான் எனது வலையை அவர்கள்மேல் வீசுவேன்; ஆகாயத்துப் பறவைகள்போல், அவர்களை நான் இழுத்து வீழ்த்துவேன்; அவர்கள் ஒன்றாய்கூடும் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் அவர்களை எச்சரித்ததுபோல் தண்டிப்பேன்.
13 ௧௩ அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறதினால் அவர்களுக்கு ஐயோ, அவர்களுக்குக் அழிவுவரும்; எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.
அவர்களுக்கு ஐயோ கேடு வருகிறது, ஏனெனில், அவர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களுக்கு அழிவு வருகிறது. ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் பண்ணியிருக்கிறார்கள். நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகிறேன், ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.
14 ௧௪ அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர, தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி அழுவதில்லை. தானியத்திற்காகவும், புதுத் திராட்சை இரசத்திற்காகவும் மட்டுமே அவர்கள் பாகால் தெய்வத்திற்குமுன் ஒன்றுகூடுகிறார்கள். எனவே அவர்கள் என்னைவிட்டு வழிவிலகிப் போகிறார்கள்.
15 ௧௫ நான் அவர்களைத் தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்செய்தேன்; ஆனாலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள்.
நான் அவர்களைப் பயிற்றுவித்து பெலப்படுத்தினேன்; ஆயினும், அவர்கள் எனக்கெதிராகத் தீமையான சூழ்ச்சி செய்கிறார்கள்.
16 ௧௬ திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம்.
நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை. அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம், வாளினால் விழுவார்கள். இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.

< ஓசியா 7 >