< ஓசியா 13 >

1 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான்.
முன்பு எப்பிராயீம் பேசியபோது மனிதர் நடுங்கினார்கள்; அவன் இஸ்ரயேலில் மேன்மை அடைந்திருந்தான். ஆனால் பாகாலை வணங்கிய குற்றத்தினால் அழிந்துபோனான்.
2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.
இப்பொழுதோ அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்கிறார்கள், அவர்கள் தங்கள் வெள்ளியினாலேயே தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள். திறமையாய் வடிவமைக்கப்பட்ட அந்த உருவச்சிலைகள் யாவும் கைவினைஞனின் வேலைப்பாடாய் இருக்கின்றன. இந்த மக்களைக் குறித்து, “அவர்கள் மனித பலிகளைச் செலுத்துகிறார்கள். கன்றுக்குட்டி விக்கிரகத்தை முத்தமிடுகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.”
3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
ஆகவே, அவர்கள் காலை நேர மூடுபனிபோலவும், அதிகாலைப் பனிபோலவும் மறைந்துபோவார்கள், சூடடிக்கும் களத்திலிருந்து பறக்கும் பதரைப்போலவும் புகைபோக்கியினூடாகப் போகும் புகையைப்போலவும் இருப்பார்கள்.
4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; என்னைத்தவிர வேறு இறைவனையும், என்னைத்தவிர வேறு இரட்சகரையும் நீங்கள் அறியவேண்டாம்.
5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன்.
மிகவும் வெப்பம் நிறைந்த தேசமான பாலைவனத்தில் நான் அவர்களைப் பாதுகாத்தேன்.
6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.
நான் அவர்களுக்கு உணவு கொடுத்தபோது, அவர்கள் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் திருப்தியடைந்ததும் பெருமை கொண்டார்கள். அதன்பின் அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
7 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன்.
ஆகவே நான் அவர்களுக்கு சிங்கத்தைப்போல் இருப்பேன்; அவர்களுடைய வழியின் அருகே சிறுத்தையைப்போல் பதுங்கியிருப்பேன்.
8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
தன் குட்டியை இழந்த கரடியைப்போல் நான் அவர்களைத் தாக்கிக் கிழிப்பேன்; சிங்கத்தைப்போல் நான் அவர்களை விழுங்குவேன், காட்டுமிருகம் அவர்களைக் கிழித்துப்போடும்.
9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்?
“இஸ்ரயேலே, உனது உதவியாளரான எனக்கு நீ விரோதமாயிருக்கிறபடியால், நீ அழிவை உண்டாக்கிக்கொண்டாய்.
10 ௧0 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
ஆனால் உன்னைக் காப்பாற்றுவதற்கு உன் அரசன் எங்கே? ‘எனக்கு அரசர்களையும் இளவரசர்களையும் கொடும்’ என்று கேட்டாயே. உன் பட்டணத்திலுள்ள உன்னுடைய அந்த ஆளுநர்கள் எங்கே?
11 ௧௧ நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
எனது கோபத்தில் நான் உனக்கு அரசனைக் கொடுத்தேன்; பின்பு நான் எனது கோபத்தில் அவனை எடுத்துக்கொண்டேன்.
12 ௧௨ எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
எப்பிராயீமின் குற்றங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன; அவனது பாவங்கள் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
13 ௧௩ பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை.
பிள்ளை பெறுகிற பெண்ணின் வேதனைக்கொத்த வேதனை அவனுக்கு வருகிறது; அவன் ஞானமில்லாத பிள்ளை; பிறக்கும் நேரம் வந்தும் அவன் கருப்பையைவிட்டு வெளியே வராதிருக்கிறான்.
14 ௧௪ அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol h7585)
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். (Sheol h7585)
15 ௧௫ இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.
இவன் சகோதரரின் மத்தியில் செழித்தோங்கி இருப்பினும், யெகோவாவிடமிருந்து ஒரு கீழ்க்காற்று பாலைவனத்திலிருந்து பலமாக வீசும். அப்பொழுது உனது நீரூற்று வறண்டு, கிணறுகள் காய்ந்து போகும். உனது களஞ்சியத்திலிருந்து உனது திரவியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படும்.
16 ௧௬ சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும்.
சமாரியர் தமது இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தபடியினால், அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் நிலத்தில் மோதியடிக்கப்படுவார்கள்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.”

< ஓசியா 13 >