< எபிரேயர் 9 >

1 அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.
முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன.
2 எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும்.
அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன.
3 இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது.
அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது.
4 அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
5 அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.
6 இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள்.
இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள்.
7 இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான்.
ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான்.
8 அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார்.
9 அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள்.
இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன.
10 ௧0 உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது.
இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.
11 ௧௧ கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும்,
நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார்.
12 ௧௨ வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios g166)
அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios g166)
13 ௧௩ அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால்,
வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது.
14 ௧௪ நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios g166)
அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios g166)
15 ௧௫ ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios g166)
ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios g166)
16 ௧௬ ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
ஒரு மரணசாசனத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும்.
17 ௧௭ எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.
அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும்.
18 ௧௮ அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.
இதனாலேயே இரத்தத்தின் மூலம் அல்லாமல், முதல் உடன்படிக்கையும் செயல்படவில்லை.
19 ௧௯ எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:
சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான்.
20 ௨0 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
தெளிக்கையில் அவன், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்று சொன்னான்.
21 ௨௧ இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
அவ்விதமாகவே, மோசே அந்த இரத்தத்தை இறைசமுகக் கூடாரத்தின்மேலும், அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் தெளித்தான்.
22 ௨௨ நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
உண்மையாகவே, மோசேயின் சட்டத்தின்படி எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை.
23 ௨௩ ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள்.
இவ்விதமாய் பரலோகக் காரியங்களின் சாயல்கள், இப்படிப்பட்ட பலிகளினால் சுத்திகரிக்கப்படுவது அவசியமாயிருந்தது. அப்படியானால் பரலோகத்தின் நிஜமான காரியங்களோ, அவற்றைப் பார்க்கிலும் மேன்மையான பலிகளினாலேயே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா?
24 ௨௪ அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார்.
கிறிஸ்து மனித கையினால் உண்டாக்கப்பட்ட உண்மையான பரிசுத்த இடத்தின் அடையாளமான இடத்துக்குள் செல்லவில்லை; பரலோகத்திற்கு உள்ளேயே சென்று, அங்கே இறைவனின் முன்னிலையில் நமக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறார்.
25 ௨௫ பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை.
பிரதான ஆசாரியன், ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்கிறதுபோல கிறிஸ்துவுக்கோ திரும்பத்திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் செல்லவேண்டிய அவசியமில்லை.
26 ௨௬ அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn g165)
அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn g165)
27 ௨௭ அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
ஒருமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும், மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
28 ௨௮ கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.
அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்படி, கிறிஸ்துவும் ஒருமுறை பலியாகச் செலுத்தப்பட்டார்; ஆனால் பாவத்தைச் சுமக்கும்படியாக அல்ல, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் இரண்டாம் முறையாக வருவார்.

< எபிரேயர் 9 >