< எபிரேயர் 11 >

1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது.
2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. (aiōn g165)
4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக்குறித்து நன்றாகப் பேசியபோது, விசுவாசத்தினாலேயே அவன், நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் இறந்து போனபோதும், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான்.
5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அவன் காணாமல் போய்விட்டான். அவன் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு, அவன் இறைவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான்.
6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.
7 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக்குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி, இறைபயத்துடனே ஒரு பேழையைச் செய்தான். அவன் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை நியாயந்தீர்த்து, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு உரிமையாளன் ஆனான்.
8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச்சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகிறேன் என்றுகூட அவன் அறியாதிருந்ததும் கீழ்ப்படிந்து புறப்பட்டான்.
9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப்போல் வாக்குக்கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தான். அவன் கூடாரங்களிலேயே குடியிருந்தான். அதே வாக்குத்தத்தத்திற்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள்.
10 ௧0 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
ஏனெனில், இறைவனே சிற்பியாக கட்டுபவராக அஸ்திபாரமிட்ட நகரத்தை ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
11 ௧௧ விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
சாராள் வயது சென்றவளும், மலடியுமாயிருந்தபோதும் பிள்ளைபெறும் ஆற்றலைப் பெற்றாள். ஏனெனில் தனக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்த இறைவன் வாக்குமாறாதவர் என்று அவள் நம்பினாள்.
12 ௧௨ எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
ஆபிரகாமின் உடல் வல்லமையிழந்து, உயிரற்றதுபோல் இருந்தபோதும், வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள மணலைப்போலவும் எண்ணற்ற மக்கள் அவனுக்கு பிறந்தனர்.
13 ௧௩ இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.
14 ௧௪ இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
இப்படி அறிக்கையிடுகின்ற மக்கள், தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
15 ௧௫ தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
தாங்கள் தேடுகிற நாடு தாங்கள் விட்டுப் புறப்பட்டு வந்த நாடே என அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் அங்கு திரும்பிப் போகக்கூடிய தருணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.
16 ௧௬ அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
ஆனால் அவர்களோ அதிலும் மேன்மையான நாட்டை, ஒரு பரலோக நாட்டையேத் தேடினார்கள். அதை அடையவே ஆசைப்பட்டார்கள். ஆகவே இறைவன், “அவர்களுடைய இறைவன்” என்று தான் அழைக்கப்படுவதை வெட்கமாக எண்ணவில்லை. ஏனெனில் இறைவன், அவர்களுக்கென்று ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.
17 ௧௭ மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் இறைவன் அவனைச் சோதித்தபோது, ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினான். வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டவன் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தான்.
18 ௧௮ ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
“ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று இறைவன் அவனுக்குச் சொல்லியிருந்தும்கூட, அவன் இப்படிச் செய்தான்.
19 ௧௯ தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
இறந்தவர்களையும் உயிரோடு எழுப்ப இறைவனால் முடியும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தான். ஒரு வகையில் அவன் ஈசாக்கை மரணத்திலிருந்தே மீண்டும் பெற்றுக்கொண்டான் என்று சொல்லலாம்.
20 ௨0 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபு மற்றும் ஏசாவின் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தான்.
21 ௨௧ விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
யாக்கோபு தான் சாகும் வேளையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். பின்பு தனது கோலின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டு வழிபட்டான்.
22 ௨௨ விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
விசுவாசத்தினாலேயே யோசேப்பு தனது முடிவுகாலம் நெருங்கியபோது, இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப்பேசி, தனது எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான்.
23 ௨௩ மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை.
24 ௨௪ விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.
25 ௨௫ நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.
26 ௨௬ இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
27 ௨௭ விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான்.
28 ௨௮ விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான்.
29 ௨௯ விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள்.
30 ௩0 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் எரிகோ பட்டணத்தைச்சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது, எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன.
31 ௩௧ விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமகள், இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனேகூட கொல்லப்படாமல் தப்பினாள்.
32 ௩௨ பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுயேல் ஆகியோரைக்குறித்தும், மற்ற இறைவாக்கினரைக்குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை.
33 ௩௩ விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள். நீதியை நடைமுறைப்படுத்தினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள்.
34 ௩௪ அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலையும் அணைத்தார்கள். வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள்.
35 ௩௫ பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிரோடப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறுசிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
36 ௩௬ வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
37 ௩௭ கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், வாளினால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள்.
38 ௩௮ உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து, குகைகளிலும், நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள்.
39 ௩௯ இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை.
40 ௪0 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும், நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவுபெறமுடியும்.

< எபிரேயர் 11 >