< எபிரேயர் 10 >
1 ௧ இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது.
மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது.
2 ௨ பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா?
அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே!
3 ௩ அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன.
4 ௪ அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே.
ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது.
5 ௫ ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;
6 ௬ சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர்.
தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.
7 ௭ அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’”
8 ௮ நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு:
முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன.
9 ௯ தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார்.
10 ௧0 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம்.
இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
11 ௧௧ அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான்.
ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான்.
12 ௧௨ இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து,
ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார்.
13 ௧௩ இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
14 ௧௪ ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
15 ௧௫ இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்:
பரிசுத்த ஆவியானவரும் இதைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார். அவர் முதலில் சொல்கிறதாவது:
16 ௧௬ அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு,
“அந்த நாட்களுக்குப்பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார்.”
17 ௧௭ அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
பின்னும் அவர் சொல்லுகிறதாவது: “நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும் ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”
18 ௧௮ இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை.
எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.
19 ௧௯ ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால்,
ஆகையால் பிரியமானவர்களே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்கு தைரியம் நமக்கு உண்டு.
20 ௨0 அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும்,
அவர் திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதாக வாழும் வழியை நமக்குத் திறந்திருக்கிறார். அதுவே அவருடைய மாம்சம்.
21 ௨௧ தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும்,
இப்பொழுது இறைவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாக நமது பிரதான ஆசாரியர் இருக்கிறபடியால்,
22 ௨௨ தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
நாம் குற்றமனசாட்சி நீக்கப்பட்ட, சுத்த இருதயத்துடனும், சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலுடனும், பரிபூரண விசுவாசமுள்ள உண்மையான உள்ளத்துடனும், இறைவனை அணுகி சேருவோமாக.
23 ௨௩ அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே.
நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.
24 ௨௪ மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து;
அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும் நற்செயல்களைச் செய்வதிலும் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம் என்பதைப்பற்றி சிந்திப்போம்.
25 ௨௫ சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும்.
சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகிறதுபோல, நாமும் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கிறதினால் நாம் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம்.
26 ௨௬ சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல்,
நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும், வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது.
27 ௨௭ நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.
ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும்.
28 ௨௮ மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்த எவரும், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தினாலே இரக்கம் காட்டப்படாமல் மரித்தார்கள்.
29 ௨௯ தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
அப்படியானால் இறைவனின் மகனை காலின்கீழ் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணியவன், கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன் இன்னும் எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று யோசித்துப் பாருங்கள்.
30 ௩0 பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.
ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும்.
31 ௩௧ ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.
ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.
32 ௩௨ முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே.
வெளிச்சத்தை நீங்கள் பெற்ற ஆரம்ப நாட்களில் நீங்கள் பல வேதனைகளின் மத்தியில், பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்ற உங்கள் நிலையை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
33 ௩௩ நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.
சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறுசில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள்கொடுத்து நின்றீர்கள்.
34 ௩௪ நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.
சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவற்றைவிடச் மேன்மையானதும், என்றும் நிலைத்திருக்கிறதுமான உரிமைச்சொத்து உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்ததினால் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள்.
35 ௩௫ ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள்.
ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும்.
36 ௩௬ நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.
நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள்.
37 ௩௭ வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார்.
ஏனெனில், “வருகிறவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்கமாட்டார்.
38 ௩௮ விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார்.
ஆனால், “எனது நீதிமான்கள் விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால், நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்” என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம்.
39 ௩௯ நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.
நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.