< ஆதியாகமம் 32 >

1 யாக்கோபு பயணம் செய்யும்போது, தேவதூதர்கள் அவனை சந்தித்தார்கள்.
யாக்கோபும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அப்பொழுது இறைவனின் தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது: “இது தேவனுடைய படை” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மகனாயீம் என்று பெயரிட்டான்.
யாக்கோபு அவர்களைக் கண்டபோது, “இது இறைவனின் சேனை!” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பெயரிட்டான்.
3 பின்பு, யாக்கோபு ஏதோமின் எல்லையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடம் போவதற்காக ஆட்களை வரவழைத்து:
பின்பு யாக்கோபு, ஏதோம் நாட்டிலுள்ள சேயீர் என்னும் இடத்தில் வசிக்கும் தன் சகோதரன் ஏசாவிடம், தனக்கு முன்பாகத் தூதுவரை அனுப்பினான்.
4 “நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடம் போய், நான் இதுவரை லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,
அவன் அவர்களுக்கு அறிவுறுத்தி, “நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவிடம் போய், ‘உமது பணியாளன் யாக்கோபு சொல்வது இதுவே: நான் லாபானுடன் இருந்தேன், இதுவரையும் அங்கேயே தங்கியிருந்தேன்.
5 எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான்” என்று சொல்லுவதற்குக் கட்டளைகொடுத்துத் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினான்.
என்னிடம் மாடுகளும், கழுதைகளும், செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் உண்டு. வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருக்கிறார்கள். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கும்படியாக, இந்த செய்தியை என் எஜமானாகிய உமக்கு அனுப்புகிறேன்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
6 அந்த ஆட்கள் யாக்கோபினிடத்திற்குத் திரும்பிவந்து: “நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்திற்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடு உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.
தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பிவந்து, “நாங்கள் உமது சகோதரன் ஏசாவிடம் போனோம், அவர் உம்மைச் சந்திக்க வருகிறார்; அவருடன் நானூறு மனிதரும் வருகிறார்கள்” என்றார்கள்.
7 அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, கலக்கமடைந்து, தன்னிடத்திலிருந்த மக்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து:
அதைக்கேட்ட யாக்கோபு பயமும் மனக்கலக்கமும் அடைந்து, தன்னுடன் இருந்த மனிதரை இரண்டு குழுக்களாகப் பிரித்தான்; ஆட்டு மந்தையையும், மாட்டு மந்தையையும், ஒட்டகங்களையும் இரண்டு குழுக்களாகப் பிரித்தான்.
8 ஏசா ஒரு பகுதியைத் தாக்கி அதை அழித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள முடியும் என்றான்.
“ஏசா வந்து ஒரு குழுவைத் தாக்கினால் மற்றக் குழுவாவது தப்பும்” என அவன் நினைத்தான்.
9 பின்பு யாக்கோபு: “என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாக இருக்கிறவரே: உன் தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடன் சொல்லியிருக்கிற யெகோவாவே,
பின்பு யாக்கோபு, “என் தகப்பனான ஆபிரகாமின் இறைவனே, என் தகப்பனான ஈசாக்கின் இறைவனே, ‘நீ உன் நாட்டிற்கும், உன் உறவினரிடத்திற்கும் போ; நான் உன் வாழ்வை வளம்பெறச் செய்வேன்’ என்று சொன்ன யெகோவாவே,
10 ௧0 அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா உண்மைக்கும் நான் எவ்வளவேனும் தகுதியுள்ளவன் அல்ல, நான் கோலும் கையுமாக இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
உமது பணியாளனாகிய எனக்கு நீர் காட்டிய எல்லாவித இரக்கத்திற்கும், சத்தியத்திற்கும் நான் தகுதியற்றவன். நான் யோர்தான் நதியைக் கடக்கும்போது, ஒரு கோல் மட்டுமே என்னிடம் இருந்தது; ஆனால் இப்பொழுதோ இரு பெரும் மக்கள் கூட்டமாகிவிட்டேன்.
11 ௧௧ என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் தாக்குவான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.
என் சகோதரன் ஏசாவின் கையிலிருந்தும் என்னைக் காப்பாற்றும் என்று மன்றாடுகிறேன். ஏனெனில், அவன் வந்து என்னையும் என் பிள்ளைகளையும், அவர்கள் தாய்மாரையும் தாக்குவான் என்று பயப்படுகிறேன்.
12 ௧௨ தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகச் செய்வேன் என்று சொன்னீரே” என்றான்.
ஆனாலும் நீர், ‘நிச்சயமாகவே நான் உன்னை வளம்பெறச் செய்வேன், உன் சந்ததிகளை எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போல பெருகப்பண்ணுவேன்’ என்று சொல்லியிருக்கிறீரே” என்றான்.
13 ௧௩ அன்று இரவு அவன் அங்கே தங்கி, தன்னிடம் உள்ளவைகளில் தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமதியாக,
அன்றிரவு அவன் அங்கேயே தங்கினான்; பின் தன்னிடம் உள்ளவற்றிலிருந்து தன் சகோதரன் ஏசாவுக்கு அன்பளிப்பாக,
14 ௧௪ இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
இருநூறு வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறியாட்டுக் கடாக்கள்,
15 ௧௫ பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து,
முப்பது பெண் ஒட்டகங்களுடன் அதன் குட்டிகள், நாற்பது பசுக்கள், பத்து காளைகள், இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்தான்.
16 ௧௬ வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்படைத்து, நீங்கள் ஒவ்வொரு மந்தைக்கும் முன்னும் பின்னுமாக இடம்விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுசெல்லுங்கள்” என்று தன் வேலைக்காரர்களுக்குச் சொல்லி,
அவன் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியே தன் வேலைக்காரரிடம் ஒப்படைத்து, “மந்தைகளுக்கு இடையில் சிறிது இடம்விட்டு, எனக்கு முன்னே போங்கள்” என்றான்.
17 ௧௭ முதலில் போகிறவனை நோக்கி: “என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,
அவன் முன்னே செல்பவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “என் சகோதரன் ஏசா உன்னைச் சந்தித்து, ‘நீ யாருக்குச் சொந்தமானவன்? எங்கே போகிறாய்? உனக்கு முன்னே போகும் இந்த மிருகங்களுக்குச் சொந்தக்காரன் யார்?’ என்று கேட்டால்,
18 ௧௮ நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்களுக்குப் பின்னே வருகிறான் என்று சொல்” என்றான்.
‘இவை உமது பணியாளன் யாக்கோபுக்குச் சொந்தமானவை; இவற்றைத் தன் ஆண்டவன் ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார், அவரும் எங்கள் பின்னே வருகிறார்’ என்று சொல்” என்றான்.
19 ௧௯ இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தவிதமாகவே அவனிடம் சொல்லி,
“ஏசாவைச் சந்திக்கும்போது இதேவிதமாகவே சொல்லவேண்டும்” என்று இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மந்தைகளைப் பின்தொடர்ந்து சென்ற மற்றவர்களுக்கும் அவன் அறிவுறுத்தினான்.
20 ௨0 “இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்களுக்குப் பின்னே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திவிட்டு, பின்பு அவனுடைய முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்மீது தயவாயிருப்பான்” என்றான்.
“‘உமது பணியாளனாகிய யாக்கோபும் எங்கள் பின்னால் வருகிறான்’ என்பதைத் தவறாமல் சொல்லுங்கள்” என்றான். பின்பு, “எனக்கு முன்னால் நான் அனுப்பும் இந்த அன்பளிப்புகளால் நான் அவனைச் சமாதானப்படுத்துவேன்; பிறகு, நான் அவனைக் காணும்போது ஒருவேளை அவன் என்னை ஏற்றுக்கொள்வான்” என நினைத்தான்.
21 ௨௧ அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி,
அப்படியே யாக்கோபின் அன்பளிப்புகள் அவனுக்கு முன்னே கொண்டுபோகப்பட்டன; அவனோ அன்றிரவு கூடாரத்திலேயே தங்கினான்.
22 ௨௨ இரவில் எழுந்திருந்து, தன்னுடைய இரண்டு மனைவிகளையும், இரண்டு மறுமனையாட்டிகளையும், பதினொரு மகன்களையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்ற ஆற்றை அதன் ஆழமில்லாத பகுதியில் கடந்தான்.
அன்றிரவு யாக்கோபு எழுந்து தன் இரண்டு மனைவிகளையும், இரண்டு பணிப்பெண்களையும், தன் பதினொன்று மகன்களையும் கூட்டிக்கொண்டு யாப்போக்கு ஆற்றின் துறையைக் கடந்தான்.
23 ௨௩ அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான்.
அவன் அவர்களை ஆற்றுக்கு அப்பால் அனுப்பியபின் தனது உடைமைகள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான்.
24 ௨௪ யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி,
அதன்பின் யாக்கோபு தனிமையில் இருந்தான், அப்பொழுது ஒரு மனிதர் வந்து பொழுது விடியும்வரை அவனுடன் போராடினார்.
25 ௨௫ அவனை மேற்கொள்ள முடியாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதனால் அவருடன் போராடும்போது யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
யாக்கோபை மேற்கொள்ள முடியாதென்பதைக் கண்ட அவர் தொடர்ந்து போராடுகையில், யாக்கோபின் தொடைச்சந்தைத் தொட்டவுடனே தொடைச்சந்து இடம் விலகியது.
26 ௨௬ அவர்: “என்னைப் போகவிடு, பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான்.
அப்பொழுது அந்த மனிதர், “என்னைப் போகவிடு; பொழுது விடிகிறது” என்றார். அதற்கு யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி உம்மைப் போகவிடமாட்டேன்” என்றான்.
27 ௨௭ அவர்: “உன் பெயர் என்ன” என்று கேட்டார்; “யாக்கோபு” என்றான்.
அவர், “உன் பெயர் என்ன?” என்று யாக்கோபிடம் கேட்டார். அவன், “யாக்கோபு” என்றான்.
28 ௨௮ அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.
அப்பொழுது அவர், “உன் பெயர் இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரயேல் எனப்படும். ஏனெனில், நீ இறைவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.
29 ௨௯ அப்பொழுது யாக்கோபு: “உம்முடைய நாமத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: “நீ என் நாமத்தைக் கேட்பதென்ன” என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்.
அப்பொழுது யாக்கோபு அவரிடம், “தயவுசெய்து உம்முடையப் பெயரை எனக்குச் சொல்லும்” என்றான். அதற்கு அவர், “நீ ஏன் என் பெயரைக் கேட்கிறாய்?” என்று கேட்டு, அவனை ஆசீர்வதித்தார்.
30 ௩0 அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான்.
உடனே யாக்கோபு, “நான் இறைவனை முகமுகமாய்க் கண்டும் இன்னும் என் உயிர் தப்பியிருக்கிறது” என்று சொல்லி, அவ்விடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான்.
31 ௩௧ அவன் பெனியேலைக் கடந்துபோகும்போது, சூரியன் உதயமானது; அவனுடைய தொடை சுளுக்கியதாலே நொண்டி நொண்டி நடந்தான்.
அவன் பெனியேலைக் கடந்து போகையில், அவனுக்கு மேலாகச் சூரியன் உதித்தது. அவனுடைய தொடைச்சந்து இடம்விலகி இருந்ததால், அவன் நொண்டிக்கொண்டு நடந்தான்.
32 ௩௨ அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டதால், இஸ்ரவேல் வம்சத்தார் இந்த நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைச் சாப்பிடுகிறதில்லை.
யாக்கோபின் தொடைச்சந்து அருகேயிருந்த தசைநார் தொடப்பட்டபடியால், இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துடன் இணைந்திருக்கும் தசைநாரைச் சாப்பிடுவதில்லை.

< ஆதியாகமம் 32 >