< ஆதியாகமம் 21 >
1 ௧ யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
2 ௨ ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
3 ௩ அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.
4 ௪ தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான்.
5 ௫ தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் 100 வயதாயிருந்தான்.
6 ௬ அப்பொழுது சாராள்: “தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.”
7 ௭ “சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள்.
8 ௮ குழந்தை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்தான்.
9 ௯ பின்பு எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் கேலி செய்கிறதை சாராள் கண்டு,
10 ௧0 ஆபிரகாமை நோக்கி: “இந்த அடிமைப்பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகனாகிய ஈசாக்கோடு வாரிசாக இருப்பதில்லை” என்றாள்.
11 ௧௧ தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது.
12 ௧௨ அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: “அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
13 ௧௩ அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன்” என்றார்.
14 ௧௪ ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள்.
15 ௧௫ தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு,
16 ௧௬ “சிறுவன் தாகத்தினால் சாகிறதை நான் பார்க்கமாட்டேன்” என்று, அவனைவிட்டு அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
17 ௧௭ தேவன் சிறுவனின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, சிறுவன் இருக்கும் இடத்தில் தேவன் அவனுடைய சத்தத்தைக் கேட்டார்.
18 ௧௮ நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார்.
19 ௧௯ தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
20 ௨0 தேவன் சிறுவனுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்திரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
21 ௨௧ அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.
22 ௨௨ அந்தகாலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
23 ௨௩ ஆகையால், நீ எனக்காவது, என் மகனுக்காவது, பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்.
24 ௨௪ அதற்கு ஆபிரகாம்: “நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன்” என்றான்.
25 ௨௫ ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
26 ௨௬ அதற்கு அபிமெலேக்கு: “இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்குத் தெரிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதைத்தவிர, இதற்குமுன் அதை நான் கேள்விப்படவே இல்லை” என்றான்.
27 ௨௭ அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
28 ௨௮ ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.
29 ௨௯ அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு?” என்று கேட்டான்.
30 ௩0 அதற்கு அவன்: “நான் இந்தக் கிணறு தோண்டியதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
31 ௩௧ அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா எனப்பட்டது.
32 ௩௨ அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்துகொண்டபின்பு அபிமெலேக்கும், அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
33 ௩௩ ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
34 ௩௪ ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.