< எசேக்கியேல் 42 >

1 பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிமுற்றத்திலே புறப்படச்செய்து, பிரத்தியேகமான இடத்திற்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.
பின்பு அந்த மனிதன் என்னை வடப்பக்கமாக வெளிமுற்றத்துக்கு அழைத்து வந்தான். அங்கே ஆலய முற்றத்துக்கு எதிரிலும், வடபுறத்திலிருந்த வெளிமதிலுக்கு எதிரிலும் அறைகள் இருந்தன.
2 நூறு முழ நீளத்திற்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அந்த இடத்தின் அகலம் ஐம்பது முழம்.
வடக்கு முகமாய்க் கதவுகளைக் கொண்டிருந்த கட்டடம் நூறுமுழ நீளமும் ஐம்பதுமுழ அகலமுமாயிருந்தது.
3 உள்முற்றத்தில் இருந்த இருபது முழத்திற்கு எதிராகவும் வெளிமுற்றத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள மரநடை மேடைகள் இருந்தது.
உள்முற்றத்தின் எதிரே ஒருநிரை மாடங்கள் இருந்தன. வெளிமுற்றத்தின் எதிரே இன்னுமொரு நிரை மாடங்கள் இருந்தன. ஒவ்வொரு அறையும் இருபதுமுழ நீளமாயிருந்தது. இவ்வாறு இரு பகுதிகளிலும் இருந்த மூன்று தளங்களிலும், ஒன்றையொன்று நோக்கிய வண்ணமாக மாடங்கள் இருந்தன.
4 உள்பக்கத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
அறைகளுக்கு முன்னால் பத்துமுழ அகலமும் நூறுமுழ நீளமும் கொண்ட உட்புற வழியொன்று இருந்தது. அந்த அறைகளின் கதவுகள் வடக்குப்புறமாக இருந்தன.
5 உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது.
மேலறைகள் ஒடுக்கமானவைகளாயிருந்தன. ஏனெனில், நடைபாதைகள் கட்டடத்தின் கீழ் மாடியிலும், மத்திய மாடியிலும், எடுத்திருந்த இடத்தைப் பார்க்கிலும், மேல்மாடியில் அதிக இடத்தை எடுத்திருந்தன.
6 அவைகள் மூன்று அடுக்குகளாக இருந்தது; முற்றங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைவிட அகலம் குறைவாக இருந்தது.
மூன்றாம் மாடியிலிருந்த அறைகள் முற்றங்களைப்போல் தூண்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவை கீழ் மாடியையும் மத்திய மாடியையும்விட, குறைந்த நிலப்பரப்பை உடையனவாயிருந்தன.
7 வெளியே அறைவீடுகளுக்கு எதிரே வெளிமுற்றத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
அறைகளுக்கும் வெளிமுற்றத்துக்கும் சமாந்தரமாக அங்கே வெளிச்சுவரொன்று இருந்தது. அது அறைகளுக்கு முன் ஐம்பது முழம் நீட்டப்பட்டிருந்தது.
8 வெளிமுற்றத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்திற்கு முன்னே நூறு முழமாக இருந்தது.
வெளிமுற்றத்தை அடுத்து வரிசையாக அமைந்திருந்த அறைகள் ஐம்பதுமுழ நீளமாய் இருந்தன. ஆலயத்திற்குச் சமீபமாய் இருந்த அறைகளின் வரிசை நூறுமுழ நீளமாயிருந்தது.
9 கிழக்கே வெளிமுற்றத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் நுழைகிற நடை அவைகளின் கீழே இருந்தது.
வெளிமுற்றத்திலிருந்து கீழ் மாடியறைகளுக்குப் போகத்தக்கதாக, கிழக்குப் பக்கமாக ஒரு புகுமுக வாசல் இருந்தது.
10 ௧0 கீழ்த்திசையான முற்றத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
தெற்குப் பக்கத்தில் இருந்த வெளிமுற்றச்சுவர் ஓரமாக, ஆலய முற்றத்தை அடுத்தும், வெளிமதிலுக்கு எதிராக இருந்த கட்டடத்தில் இரண்டுநிரை அறைகள் இருந்தன.
11 ௧௧ அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாக இருந்தது.
அவைகளுக்கு இடையில் ஒரு பாதை இருந்தது. அந்த அறைகள் வடக்கேயிருந்த அறைகளைப் போன்றவை. அவைகளும் அதே நீள அகலம் கொண்டவை. வெளியேறும் வாசல்களும் அவற்றின் அளவுகளும் ஒரே மாதிரியானவை. வடக்கிலிருந்த வாசல்களைப்போலவே,
12 ௧௨ தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கிழக்கு திசையில் அவைகளுக்குப் நுழையும் இடத்திலே ஒழுங்கான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசல் இருந்தது.
தெற்கிலிருந்த அறை வாசல்களும் அமைந்திருந்தன. உட்பக்கத்தின் நடைபாதையின் கிழக்குப்பக்கத்தின் முடிவில் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியாகவே மக்கள் தெற்கு அறைகளுக்குப் போனார்கள். தெற்கு சுவர், வெளியிலிருந்து அறைகளுக்குக் கிழக்குப்பக்கமாய்ப் போனது.
13 ௧௩ அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்திற்கு முன்பாக இருக்கிற வடக்குப் பக்கமான அறைவீடுகளும், தெற்குப் பக்கமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாக இருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர்கள் அங்கே மகா பரிசுத்தமானதையும் உணவுபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த இடம் பரிசுத்தமாக இருக்கிறது.
பின்பு அவன் என்னிடம், “ஆலய முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு தெற்கு அறைகள் ஆசாரியருக்கான அறைகள். அங்கே யெகோவாவைச் சந்திக்கும் ஆசாரியர்கள் மகா பரிசுத்த காணிக்கைப் பொருட்களைச் சாப்பிடுவார்கள். மகா பரிசுத்த காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும், குற்றநிவாரண காணிக்கைகளையும் அங்கே வைப்பார்கள். அந்த இடம் பரிசுத்தமானது.
14 ௧௪ ஆசாரியர்கள் உள்ளே நுழையும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிமுற்றத்திற்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவைப்பார்கள்; அந்த ஆடைகள் பரிசுத்தமானவைகள்; வேறே ஆடைகளை அணிந்துகொண்டு, மக்களின் முற்றத்திலே போவார்கள் என்றார்.
ஆசாரியர்கள் பரிசுத்த பகுதிக்குள்போனதும், ஆராதனைக்கான உடைகளைக் கழட்டும்வரை அவர்கள் வெளிமுற்றத்துக்குப் போகக்கூடாது. ஏனெனில் அவை பரிசுத்தமானவை. மக்களுக்காக இருக்கும் இடங்களுக்கருகே போகுமுன் அவர்கள் வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும் என்றான்.”
15 ௧௫ அவர் உள்வீட்டை அளந்து முடிந்தபின்பு, கிழக்கு திசைக்கு எதிரான வாசல்வழியாக என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார்.
அவன் ஆலய உட்பகுதியில் இருந்த அனைத்தையும் அளந்து முடித்தான். பின்பு அவன், என்னைக் கிழக்குவாசல் பக்கமாக அழைத்துப்போய் அப்பகுதிகளைச் சுற்றி அளந்தான்.
16 ௧௬ கிழக்குதிசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாக இருந்தது.
அவன் அளவுகோலினால் கிழக்குப்பக்கத்தை அளந்தான். அது ஐந்நூறு முழங்களாயிருந்தது.
17 ௧௭ வடக்கு திசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாக அளந்தார்.
அவன் வடக்குப் பக்கத்தை அளந்தான். அது அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
18 ௧௮ தெற்கு திசைப்பக்கத்தை அளவு கோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
அவன் தெற்குப்பக்கத்தை அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
19 ௧௯ மேற்கு திசைப் பக்கத்திற்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாக அளந்தார்.
பின்பு அவன் மேற்குப்பக்கம் திரும்பி அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது.
20 ௨0 நான்கு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசப்படுத்தும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.
இவ்வாறாக அவன் நான்கு பக்கங்களிலுமுள்ள எல்லா பகுதிகளையும் அளந்தான். அதைச் சுற்றிலும் ஒரு மதில் இருந்தது. அது ஐந்நூறு முழ நீளம், ஐந்நூறு முழ அகலமாய் இருந்தது. அது பொது இடத்தைப் பரிசுத்த இடத்திலிருந்து வேறுபடுத்துவதாக அமைந்திருந்தது.

< எசேக்கியேல் 42 >