< எசேக்கியேல் 31 >
1 ௧ பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், மூன்றாம் மாதம், முதலாம் நாள் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2 ௨ மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?
“மனுபுத்திரனே, எகிப்திய அரசனாகிய பார்வோனுக்கும் அவனுடைய மக்கள்கூட்டங்களுக்கும் நீ சொல்லவேண்டியதாவது, “‘மாட்சிமையில் உன்னுடன் ஒப்பிடக்கூடியவன் யார்?
3 ௩ இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கிளைகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்து உயர்ந்த கேதுரு மரமாக இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
அசீரியாவைப் பற்றிச் சிந்தித்துப்பார், அது ஒருகாலத்தில் லெபனோனின் கேதுரு மரத்தைப்போல் அழகிய கிளைகளுடன் காட்டுக்கு மேலாக உயர்ந்து வளர்ந்தது. செறிந்த தழைகளுக்கு மேலாய் அதன் நுனி இருந்தது.
4 ௪ தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது.
தண்ணீர்கள் அதை செழிக்கச் செய்தன, ஆழமான நீரூற்றுக்கள் அதை உயரமாக வளரச் செய்தன; அதன் அடிமரங்களைச் சுற்றி நீரோடைகள் பாய்ந்தன; தண்ணீர்கள் தம் வாய்க்கால்களை வெளிமரங்கள் யாவற்றிற்கும் பரவவிட்டன.
5 ௫ ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது.
அதனால் அது, வெளியின் மரங்கள் எல்லாவற்றையும்விட, உயர்ந்து நின்றது: தண்ணீர் நிறைவாக இருந்தபடியால், அதன் கொப்புகள் அதிகரித்தன: அதன் கிளைகள் நீண்டு, படர்ந்து, வளர்ந்தன.
6 ௬ அதின் கிளைகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கிளைகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டது; பெரிதான எல்லா தேசகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
ஆகாயத்துப் பறவைகள் அனைத்தும் அதின் கிளைகளில் கூடுகட்டின; வெளியின் மிருகங்களெல்லாம் அதன் கிளைகளின்கீழ் குட்டிகளை ஈன்றன. பெரிதான பல நாடுகளும் அதன் நிழலில் குடியிருந்தன.
7 ௭ அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது.
படர்ந்திருந்த அதன் கொப்புகளினால் அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது. ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான தண்ணீருக்குள் சென்றிருந்தன.
8 ௮ தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கமுடியாமல் இருந்தது; தேவதாரு மரங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு மரமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
இறைவனின் தோட்டத்தின் கேதுருக்கள்கூட அதற்கு இணையாய் இருக்கமுடியவில்லை. தேவதாரு மரங்களும் அதின் கிளைகளுக்குச் சமானமாயிருக்க முடியவில்லை. அர்மோன் மரங்களையும் அதன் கொப்புகளுக்கு இணைகூற இயலாது. இறைவனின் தோட்டத்து எந்த மரமும் அழகில் அதற்கு நிகராகாது.
9 ௯ அதின் அடர்ந்த கிளைகளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் மரங்களெல்லாம் அதின்மேல் பொறாமைகொண்டன.
இறைவனின் தோட்டமான ஏதேனிலுள்ள எல்லா மரங்களும் அதன்மேல் பொறாமை கொள்ளத்தக்கதாக நிறைவான கொப்புகளால் அதை நான் அழகு செய்தேன்.
10 ௧0 ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன்னுடைய வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன்னுடைய நுனிக்கிளையை உயர வளரச்செய்ததாலும், அதின் இருதயம் தன்னுடைய மேட்டிமையினால் உயர்ந்துபோனதினாலும்,
“‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது உயரமாய் வளர்ந்து, தன் நுனியை செறிந்த தழைகளுக்கு மேலாய் உயர்த்தி, தன் உயர்வினிமித்தம் பெருமைகொண்டது.
11 ௧௧ நான் அதைத் தேசங்களில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு விருப்பமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்திற்காக அதைத் தள்ளிப்போட்டேன்.
அதனால் அதன் கொடுமைகளுக்குத் தக்கபடி அதற்குச் செய்வதற்காக, பல நாடுகளை ஆள்பவனிடத்தில் நான் அதை ஒப்புக்கொடுத்தேன். அதை நான் அப்புறப்படுத்திவிட்டேன்.
12 ௧௨ தேசங்களில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள்.
அந்நிய தேசத்தார்களுள் மிகக் கொடிய தேசத்தார் அதை வெட்டி வீழ்த்தினார்கள். அதன் கொப்புகள் மலைகளிலும், எல்லா பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன. அதன் கிளைகள் முறிந்து, நாட்டின் எல்லா கணவாய்களிலும் விழுந்து கிடந்தன. பூமியின் எல்லா தேசத்தாரும் அதன் நிழலைவிட்டு வெளியேறி அதைவிட்டு அகன்றார்கள்.
13 ௧௩ விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கினது; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.
விழுந்துகிடக்கிற மரத்தின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தங்கின. வெளியின் எல்லா மிருகங்களும் அதன் கொம்புகளின்மேல் இருந்தன.
14 ௧௪ தண்ணீரின் ஓரமாக வளருகிற எந்த மரங்களும் தங்களுடைய உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்களுடைய கொப்புகளின் தழைக்குள்ளே தங்களுடைய நுனிக்கிளையை உயர வளரவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்களுடைய உயரத்தினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்படி இப்படிச் செய்வேன்; மனிதகுமாரர்களின் நடுவே அவர்கள் எல்லோரும் குழியில் இறங்குகிறவர்களுடன் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.
எனவே, இனிமேல் தண்ணீர் அருகே இருக்கும் வேறு எந்த மரமாவது, மேட்டிமையுடன் எழும்பாதிருக்கட்டும், செறிந்த தழைகளுக்கு மேலாகத் தங்கள் நுனிகளை உயர்த்தாதிருக்கட்டும். ஏராளமாய் தண்ணீர் பாய்ச்சப்படும் எந்தவொரு மரமும் அவ்வளவு உயரமாய் வளராதிருக்கட்டும். அவைகளெல்லாம் பூமியின் தாழ்விடங்களிலே, மனுமக்கள் நடுவே குழியில் இறங்குகிறவர்களோடு போகும்படியாக, சாவுக்கென்று நியமிக்கப்பட்டன.
15 ௧௫ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது. (Sheol )
“‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின. (Sheol )
16 ௧௬ நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களுடன் பாதாளத்தில் இறங்கச்செய்யும்போது, அவன் விழுகிற சத்தத்தினால் தேசங்களை அதிரச்செய்வேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் மரங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த மரங்களும், தண்ணீர் குடிக்கும் எல்லா மரங்களும் ஆறுதல் அடைந்தன. (Sheol )
குழியில் இறங்குகிறவர்களோடு அதை நான் பாதாளத்திற்குக் கொண்டுவந்தபோது, அதனுடைய விழுகிற சத்தத்தைக் கேட்டு பல நாடுகளையும் நடுங்கும்படி செய்தேன். ஏதேனின் எல்லா மரங்களும், லெபனோனின் தரமானதும் சிறப்பானதுமான மரங்களும், நன்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டிருக்கின்ற எல்லா மரங்களும் பூமியின் கீழே ஆறுதலடைந்தன. (Sheol )
17 ௧௭ அவனுடன் இவர்களும், தேசங்களின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும், வாளால் வெட்டுப்பட்டவர்கள் அருகிலே பாதாளத்தில் இறங்கினார்கள். (Sheol )
அதன் நிழலில் வாழ்ந்தவர்களும், பல நாடுகளின் நட்பு நாடுகளும், அதனோடுகூட பாதாளத்துக்குப்போய், அங்கேயே வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களோடு ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். (Sheol )
18 ௧௮ இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
“‘எகிப்தே! சிறப்பிலும் மாட்சிமையிலும் ஏதேனிலுள்ள எந்த மரம் உனக்கு இணையாகும்? எனினும், நீயும் ஏதேனின் மரங்களுடன் பூமிக்குக் கீழே கொண்டுவரப்படுவாய். வாளினால் கொல்லப்பட்டவர்களோடு, விருத்தசேதனமற்றோர் மத்தியில் நீ கிடப்பாய். “‘இவையே பார்வோனும் அவனுடைய எல்லா மக்கள் கூட்டங்களும்’” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.