< எசேக்கியேல் 26 >
1 ௧ பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம் மாதத்தின் முதலாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
2 ௨ மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
“மனுபுத்திரனே, எருசலேமைக்குறித்து, ‘ஆகா, நாடுகளுக்குரிய வாசல் உடைந்திருக்கிறது. அதன் கதவுகள் திறந்து ஊசலாடுகின்றன. இப்பொழுது அவள் பாழானாள்: நான் செழிப்பேன்’ என்று தீரு சொல்லியிருக்கிறாள்.”
3 ௩ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன்.
ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. தீருவே நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன். கடல் தன் அலைகளை எழும்பப்பண்ணுவதுபோல், நான் அநேக நாடுகளை உனக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன்.
4 ௪ அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் மதில்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இல்லாமல் விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அவர்களுடைய கோபுரங்களை வீழ்த்தி விடுவார்கள். நான் அவளது இடிபாடுகளை வழித்தெடுத்து, அவளை ஒரு வெறும் பாறையாக்கிவிடுவேன்.
5 ௫ அது வலைகளை விரிக்கிற இடமாக கடலின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அது தேசங்களுக்குக் கொள்ளையாகும்.
கடலின் நடுவே ஒரு தீவாய் இருக்கும் குடியேற்றமில்லாத அவள், மீன் வலைகளை உலர்த்தும் இடமாவாள். நானே இதைச் சொன்னேன், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவள் நாடுகளின் கொள்ளைப் பொருளாவாள்.
6 ௬ வெளியில் இருக்கிற அதின் மகள்களோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
நாட்டின் உட்பகுதியிலுள்ள அவளது குடியிருப்புகள் வாளினால் கொள்ளையிடப்படும். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
7 ௭ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன்.
“ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் அரசருக்கெல்லாம் அரசனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், பெரும் இராணுவப்படை ஆகியவற்றோடு வடக்கேயிருந்து தீருவுக்கு விரோதமாய்க் கொண்டுவரப் போகிறேன்.”
8 ௮ அவன் வெளியில் இருக்கிற உன்னுடைய மகள்களை வாளினால் கொன்று, உனக்கு விரோதமாக மதில்களைக் கட்டி அணைபோட்டு, கேடயங்களை எடுத்து,
அவன் நாட்டின் உட்பகுதியிலுள்ள உங்கள் குடியிருப்புகளை வாளினால் சூறையாடுவான். அவன் உனக்கு விரோதமாய் முற்றுகையிட்டு, உன் மதில்களுக்கு எதிராக முற்றுகை அரணைக் கட்டி, உனக்கு விரோதமாய் தனது கேடயங்களை உயர்த்துவான்.
9 ௯ உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான்.
அவன் உன் மதில்களுக்கு எதிராக இடிக்கும் இயந்திரங்களின் முனைகளை வைத்து, தனது போராயுதங்களினால் உன் கோபுரங்களைத் தகர்ப்பான்.
10 ௧0 அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும்.
அவனுடைய குதிரைகள் அநேகமாயிருப்பதனால், அவை எழுப்பும் தூசி உன் நகரத்தையும் மூடத்தக்க அளவு இருக்கும். மதில்கள் உடைக்கப்பட்ட பட்டணத்திற்குள் மனிதர் நுழைவதுபோல், அவன் உன் வாசலில் நுழைவான். அப்பொழுது போர்க்குதிரைகளும், வண்டிகளும், தேர்களும் இரைகிற சத்தத்தினால் உன் மதில்கள் அதிரும்.
11 ௧௧ தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
அவனுடைய குதிரைகளின் குளம்புகள் உன் வீதிகளையெல்லாம் மிதிக்கும். அவன் உன் மக்களை வாளினால் கொல்வான். உன் பலத்த தூண்களும் நிலத்தில் சாயும்.
12 ௧௨ அவர்கள் உன்னுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடி, மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன்னுடைய கல்லுகளையும், மரங்களையும், மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.
அவர்கள் உன் செல்வங்களைச் சூறையாடி, உன் வியாபாரப் பொருட்களைக் கொள்ளையிடுவார்கள். அவர்கள் உன் மதில்களை இடித்து, உன் அருமையான வீடுகளை நொறுக்கி, அவைகளிலுள்ள கற்களையும், மரங்களையும் அவைகளின் இடிபாடுகளையும் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள்.
13 ௧௩ உன்னுடைய பாட்டுகளின் சத்தத்தை ஓயச்செய்வேன்; உன்னுடைய சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
உன் சத்தமான பாடல்களுக்கு நான் ஒரு முடிவு வரப்பண்ணுவேன். உன் வீணையின் இசை இனிமேல் கேட்கப்படமாட்டாது.
14 ௧௪ உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற இடமாக இருப்பாய்; இனிக் கட்டப்படமாட்டாய்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நான் உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தும் இடமாக மாறுவாய். நீ ஒருபோதும் திரும்பக் கட்டப்படமாட்டாய். ஏனெனில், யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15 ௧௫ தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
“ஆண்டவராகிய யெகோவா தீருவுக்குக் கூறுவது இதுவே. உன்னில் காயப்பட்டோர் அழுகிறபோதும், படுகொலைகள் நடக்கும்போதும், நீ விழும் சத்தத்தினால் கரையோர நாடுகள் நடுங்காதோ?
16 ௧௬ கடலரசர் எல்லோரும் தங்களுடைய சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்களுடைய சால்வைகளைக் கழற்றி, தங்களுடைய சித்திரத்தையலாடைகளை கழற்றிப்போடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து, உனக்காக வியப்படைவார்கள்.
அப்பொழுது கடற்கரை வாசிகளின் இளவரசர்கள் அனைவரும் தங்கள் அரியணைகளிலிருந்து இறங்கி, தங்கள் சித்திரத்தையலாடைகளை கழற்றி, தங்கள் வேலைப்பாடுகளமைந்த உடைகளையும் கழற்றிப்போடுவார்கள். திகிலை உடையாக உடுத்திய வண்ணம் அவர்கள் நிலத்தில் உட்காருவார்கள். ஒவ்வொரு வினாடியும், நடுக்கத்தோடு உன்னைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.
17 ௧௭ அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,
பின்பு அவர்கள் உன்னைக்குறித்து புலம்பல் வைத்து, “‘கடல் மனிதர்களால் நிறைந்து பேர்பெற்ற நகரமே, நீ எவ்வளவாய் அழிந்துபோனாய்? நீயும் உன் குடிமக்களும் கடலில் வலிமையுடையவர்களாய் இருந்தீர்கள். அங்கு வாழ்ந்தவர்களையெல்லாம் நீங்கள் திகிலடையச் செய்தீர்களே!
18 ௧௮ நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது கடலில் உள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
இப்பொழுது நீ விழுந்ததைக்கண்டு கடற்கரை நாடுகள் நடுங்குகின்றன; கடலிலுள்ள தீவுகள் உன் அழிவைக் கண்டு திகிலடைகின்றன என்று சொல்வார்கள்.’
19 ௧௯ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாக நான் உன்மேல் கடலை வரச்செய்யும்போதும்,
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் உன்னைக் குடியற்ற நகரங்களைப்போல் பாழ் நகரம் ஆக்குவேன். சமுத்திரத்தின் ஆழங்களை உன்மேல் கொண்டுவருவேன். அதன் பெருவெள்ளத்தால் உன்னை மூடுவேன்.
20 ௨0 ஆரம்பகாலத்தின் மக்களின் அருகில் குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னை இறங்கச்செய்வேன்; நீ குடியேறாமலிருக்க ஆரம்பகாலம் முதற்கொண்டு பாழாய் இருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னைத் தங்கியிருக்கச்செய்வேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.
பின்பு நான் உன்னை குழியில் இறங்குகிற மக்களோடு பூர்வீக மக்களிடம் இறங்கச்செய்வேன். நான் உன்னைப் பூமியின் அடியில் பூர்வகால இடிபாடுகள் இருக்கும் இடங்களில், குடியிருக்கப்பண்ணுவேன். குழியில் இறங்குகிறவர்களோடு நீயும் போவாய். திரும்பி வரவுமாட்டாய். வாழ்வோர் நாட்டில் உனக்குரிய இடத்தைப் பெற்றுக்கொள்ளவுமாட்டாய்.
21 ௨௧ உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
நான் உனக்குப் பயங்கர முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ இருக்கப்போவதில்லை. நீ தேடப்படுவாய். ஆனால் மறுபடியும் நீ காணப்படமாட்டாய், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”