< யாத்திராகமம் 29 >

1 “அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்.
“அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்வதற்கு நீ செய்யவேண்டியது இதுவே: குறைபாடற்ற ஒரு இளங்காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
2 புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால் செய்து,
சிறந்த கோதுமை மாவினால் புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துப் பிசைந்த அடை அப்பங்களையும், எண்ணெய் கலந்த அதிரசங்களையும் செய்யவேண்டும்.
3 அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
அவற்றை ஒரு கூடையில் வைத்து, அந்தக் காளையுடனும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களுடனும் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும்.
4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி,
பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவவேண்டும்.
5 அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான இடுப்புக்கச்சையும் அவனுக்குக் கட்டி,
உடைகளை எடுத்து, உள் அங்கி, ஏபோத்துடன் அணியும் அங்கி, ஏபோத், மார்பு அணி ஆகியவற்றை ஆரோனுக்கு உடுத்தவேண்டும். அத்துடன் திறமையாய் நெய்யப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டவேண்டும்.
6 அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து,
அவனுடைய தலையில் தலைப்பாகையையும் அணிவித்து, அதன்மேல் பரிசுத்த தங்கக்கீரிடத்தையும் வைக்கவேண்டும்.
7 அபிஷேக தைலத்தை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.
பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.
8 பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து.
அதன்பின், அவனுடைய மகன்களை வரவழைத்து, அவர்களுக்கும் உள் அங்கிகளை அணிவிக்கவேண்டும்.
9 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும்.
அவர்களுக்கும் குல்லாக்களை அணியவேண்டும். பின் இடைப்பட்டிகளை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கட்டவேண்டும். ஆசாரியத்துவம் ஒரு நிரந்தர நியமத்தினால் அவர்களுக்கு உரியதாயிருக்கிறது. “இவ்விதமாக ஆரோனையும், அவன் மகன்களையும் நீ அர்ப்பணிக்கவேண்டும்.
10 ௧0 “காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.
“அதன்பின் சபைக் கூடாரத்தின் முன்பாக காளையைக் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைக்கவேண்டும்.
11 ௧௧ பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் யெகோவாவுடைய சந்நிதானத்தில் கொன்று,
பின் சபைக் கூடாரத்தின் வாசலில் யெகோவா முன்னிலையில் அக்காளையை கொல்லவேண்டும்.
12 ௧௨ அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, உன் கை விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மிஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும்.
13 ௧௩ குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,
பின்பு அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்புகள் அனைத்தையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதன் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
14 ௧௪ காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி.
ஆனால் காளையின் இறைச்சியும், தோலும், குடலும் முகாமுக்கு வெளியே எரிக்கப்படவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
15 ௧௫ “பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.
“அதன்பின் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அதன் தலைமேல் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.
16 ௧௬ அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து,
பின்பு அதைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
17 ௧௭ ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து,
அந்த செம்மறியாட்டுக் கடாவை துண்டங்களாக வெட்டி, அதன் உட்பாகங்களையும், கால்களையும் கழுவி, அவற்றை மற்ற இறைச்சித் துண்டுகளுடனும், அதன் தலையுடனும் வைக்கவேண்டும்.
18 ௧௮ ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது யெகோவாவுக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும்.
அதன்பின் செம்மறியாடுகள் முழுவதையும் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகும்.
19 ௧௯ “பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும்.
“பின்பு மற்ற செம்மறியாட்டுக் கடாவையும் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவன் மகன்களும் அதன்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.
20 ௨0 அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
21 ௨௧ பலிபீடத்தின்மேல் இருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவனுடைய ஆடைகளும் அவனுடைய மகன்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவனுடைய ஆடைகள்மேலும் அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய ஆடைகள்மேலும் தெளிக்கவேண்டும்.
பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மேலும் அவன் உடைகளின்மேலும், அவன் மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளிக்கவேண்டும். அதன்பின் அவனும், அவன் மகன்களும் அர்ப்பணிக்கப்படுவார்கள். அவர்களுடைய உடைகளும் அர்ப்பணிக்கப்படும்.
22 ௨௨ அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுத்த வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலது தொடையையும் எடுக்கவேண்டும். இதுவே ஆரோனுடைய அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடா.
23 ௨௩ யெகோவாவுடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,
அவற்றுடன் யெகோவா முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
24 ௨௪ அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவனுடைய மகன்களின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,
அவற்றையெல்லாம் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய கைகளில் கொடுத்து, அவற்றை யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
25 ௨௫ பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, யெகோவாவுடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலி.
பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும்.
26 ௨௬ “ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும்.
ஆரோனின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவின் நெஞ்சுப்பகுதியை எடுத்து, பின்பு அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். இது உன் பங்காயிருக்கும்.
27 ௨௭ மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்புப்பகுதியையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
“ஆரோனுடைய, அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்குரிய செம்மறியாட்டுக் கடாவின் பாகங்களாகிய அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் மிகவும் பரிசுத்தமான பங்காக வேறுபிரித்து வைக்கவேண்டும்.
28 ௨௮ அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதால், இஸ்ரவேலர்கள் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேர்வதாக; இஸ்ரவேலர்கள் யெகோவாவுடைய சந்நிதானத்தில் உயர்த்திப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே உயர்த்திப் படைக்கும் படைப்பாக இருக்கவேண்டும்.
இஸ்ரயேலர்கள் சமாதான காணிக்கைகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவுக்குச் செலுத்தும் போதெல்லாம் இந்தப் பாகங்கள் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய பங்கு ஆகும்.
29 ௨௯ “ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
“ஆரோனின் பரிசுத்த உடைகள் அவனுடைய சந்ததிக்கு, அவர்கள் அவற்றை உடுத்தி அபிஷேகம் பண்ணப்பட்டு, அர்ப்பணிக்கப்படும்படி அவர்களுக்கே சொந்தமாகும்.
30 ௩0 அவனுடைய மகன்களில் அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துகொள்ளவேண்டும்.
அவனுக்குப்பின் அவனுக்குரிய இடத்தில் ஆசாரியராக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்கு சபைக் கூடாரத்திற்குள் வரும், அவனுடைய மகன் அந்த உடைகளை ஏழு நாட்கள் உடுத்தவேண்டும்.
31 ௩௧ “பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும்.
“ஆசாரியரின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவை எடுத்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கவேண்டும்.
32 ௩௨ அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும்.
ஆரோனும் அவன் மகன்களும், அந்த இறைச்சியையும், கூடையிலுள்ள அப்பங்களையும் சபைக்கூடார வாசலில் சாப்பிடவேண்டும்.
33 ௩௩ அவர்களைப் பிரதிஷ்டைச்செய்து பரிசுத்தப்படுத்தும்படி, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் சாப்பிடவேண்டும்; அந்நியனோ அவைகளை சாப்பிடக்கூடாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.
பரிசுத்தப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புக்கும் பாவநிவிர்த்தியாக செலுத்தப்பட்ட அக்காணிக்கைகளை அவர்களே சாப்பிடவேண்டும். அவைகளை வேறு யாரும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவைகள் பரிசுத்தமானவை.
34 ௩௪ பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது.
அர்ப்பணிப்பிற்கான அந்த செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியிலோ அல்லது அப்பங்களிலோ காலைவரை ஏதாவது மீதமிருந்தால், அவற்றை எரித்துவிடவேண்டும். ஏனெனில் அவை பரிசுத்தமானது, அவற்றைச் சாப்பிடக்கூடாது.
35 ௩௫ “இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து,
“ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்யவேண்டும். அதைச் செய்வதற்கு ஏழு நாட்கள் எடுத்துக்கொள்.
36 ௩௬ பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் பாவநிவிர்த்தி செய்யும்படி, பாவநிவாரண காணிக்கையாக ஒரு காளையைப் பலியிடவேண்டும். பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து அதைப் பரிசுத்தப்படுத்து. அதை அர்ப்பணம் செய்வதற்காக எண்ணெயால் அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து.
37 ௩௭ ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
பலிபீடத்திற்காக ஏழுநாட்களுக்கு பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும். அதைத் தொடுவது எதுவானாலும் அது பரிசுத்தமாகும்.
38 ௩௮ “பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
“ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளை பலிபீடத்தில் பலியாகச் செலுத்தவேண்டும்.
39 ௩௯ ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும்.
காலையில் ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும், பொழுது மறையும்போது மற்ற செம்மறியாட்டுக் குட்டியையும் செலுத்தவேண்டும்.
40 ௪0 ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும்.
முதல் செம்மறியாட்டுக் குட்டியுடன் பத்தில் ஒரு எப்பா அளவான சிறந்த மாவை, நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயிலே பிசைந்து, அதையும் நான்கில் ஒரு ஹின் அளவான திராட்சை இரசத்தையும் பானகாணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
41 ௪௧ மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின ஆகாரபலிக்கும் பானபலிக்கும் ஒரேமாதிரியாக அதைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
சூரியன் மறையும் வேளையிலும் காலையில் எடுத்த அதே தானியக் காணிக்கையுடனும், அதற்குரிய பானகாணிக்கையுடனும், மற்ற செம்மறியாட்டுக் குட்டியை, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக பலியிடவேண்டும்.
42 ௪௨ உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
“நீங்கள் இந்த தகன காணிக்கையை தலைமுறைதோறும் சபைக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்கு முன்பாக என்றென்றும் தொடர்ச்சியாகச் செலுத்தவேண்டும். அங்கே நான் உன்னைச் சந்தித்து உன்னோடு பேசுவேன்.
43 ௪௩ அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
நான் இஸ்ரயேல் மக்களையும் அங்கேயே சந்திப்பேன். அந்த இடம் எனது மகிமையால் அர்ப்பணிக்கப்படும்.
44 ௪௪ ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி,
“இவ்வாறு சபைக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் நான் அர்ப்பணம் செய்வேன். ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்வேன்.
45 ௪௫ இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.
இப்படிச் செய்து இஸ்ரயேலர் மத்தியில் நான் குடியிருந்து அவர்களின் இறைவனாயிருப்பேன்.
46 ௪௬ தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய யெகோவா.
அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த, அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே.

< யாத்திராகமம் 29 >