< யாத்திராகமம் 20 >
1 ௧ தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன.
2 ௨ “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே.
3 ௩ என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4 ௪ மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5 ௫ நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன்.
6 ௬ என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.
7 ௭ உன்னுடைய தேவனாகிய யெகோவாடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
8 ௮ ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை;
9 ௯ ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து;
10 ௧0 ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம்.
11 ௧௧ யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12 ௧௨ உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.
13 ௧௩ கொலை செய்யாதே.
14 ௧௪ விபசாரம் செய்யாதே.
15 ௧௫ களவு செய்யாதே.
16 ௧௬ பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
17 ௧௭ பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.
18 ௧௮ மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் எல்லோரும் நடு நடுங்கி, தூரத்திலே நின்று,
19 ௧௯ மோசேயை நோக்கி: “நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம்” என்றார்கள்.
20 ௨0 மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான்.
21 ௨௧ மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான்.
22 ௨௨ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேலர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்று கண்டீர்கள்.
23 ௨௩ நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்.
24 ௨௪ மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன்னுடைய ஆடுகளையும் உன்னுடைய மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்து; நான் என்னுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் எந்த இடத்திலும் உன்னிடம் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
25 ௨௫ எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமானால், அதை வெட்டின கற்களால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளி பதித்தவுடன், அதை அசுத்தப்படுத்துவாய்.
26 ௨௬ என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்”.