< யாத்திராகமம் 15 >
1 ௧ அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது: “நான் யெகோவாவைப் பாடுவேன், அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். குதிரையையும், அதை ஓட்டியவனையும் அவர் கடலுக்குள் வீசியெறிந்தார்.
2 ௨ யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
“யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார், அவரே என் இரட்சிப்புமானார். அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன். அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
3 ௩ யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம்.
யெகோவா யுத்தத்தில் வீரர்; யெகோவா என்பதே அவரது பெயர்.
4 ௪ பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.
அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும் கடலுக்குள் தள்ளிவிட்டார். பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள் செங்கடலில் அழிந்தார்கள்.
5 ௫ ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது; ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள்.
6 ௬ யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.
யெகோவாவே, உமது வலதுகரம் வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது. யெகோவாவே, உமது வலதுகரமே எதிரியை நொறுக்கியது.
7 ௭ உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.
“உமது மாட்சிமையின் மகத்துவத்தினால் உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர். உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்; அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது.
8 ௮ உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.
உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்தது. பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன; ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று.
9 ௯ தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.
பகைவன் பெருமையாக, ‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன். நான் கொள்ளையைப் பங்கிடுவேன்; அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன். என் வாளை உருவுவேன், என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான்.
10 ௧0 உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர், கடல் அவர்களை மூடியது. அவர்கள் ஈயத்தைப் போல் பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.
11 ௧௧ யெகோவாவே, தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
யெகோவாவே, தெய்வங்களுக்குள் உம்மைப்போல் யார் உண்டு? பரிசுத்தத்தில் மாட்சிமையும், மகிமையில் வியக்கத்தக்கவரும், அதிசயங்களையும் செய்கிற உம்மைப்போல் யார் உண்டு?
12 ௧௨ நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
“உமது வலது கரத்தை நீட்டினீர், பூமி அவர்களை விழுங்கிற்று.
13 ௧௩ நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.
நீர் மீட்டுக்கொண்ட மக்களை உமது நேர்மையான அன்பினால் வழிநடத்துவீர். நீர் வசிக்கும் பரிசுத்த இடத்திற்கு, உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டுவீர்.
14 ௧௪ மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.
மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்; பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
15 ௧௫ ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.
ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள், மோவாபின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும், கானானின் மக்களும் கரைந்து போவார்கள்;
16 ௧௬ பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.
பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரை, நீர் கொண்டுவந்த மக்கள் கடந்துபோகும்வரை, உமது கரத்தின் வல்லமையால் அவர்கள் கல்லைப்போல் அசைவில்லாமல் கிடப்பார்கள்.
17 ௧௭ நீர் அவர்களைக் கொண்டுபோய், யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
யெகோவாவே, உமது உரிமைச்சொத்தான மலையில் நீர் அவர்களைக் கொண்டுவந்து நிலைநாட்டுவீர்; அந்த இடத்தையே நீர் உமது தங்குமிடமாக்கினீர், யெகோவாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தியது.
18 ௧௮ யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
“யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”
19 ௧௯ பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரைவீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்பொழுது யெகோவா கடல் தண்ணீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.
20 ௨0 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
அப்பொழுது இறைவாக்கினளான ஆரோனின் சகோதரி மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்ற எல்லா பெண்களும் தம்புராவோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள்.
21 ௨௧ மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: யெகோவாவைப் பாடுங்கள், அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
அப்பொழுது மிரியாம் அவர்களுக்குப் பதிலளித்துப் பாடியது: “யெகோவாவைப் பாடுங்கள், ஏனெனில் அவர் உன்னதத்தில் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். குதிரையையும் அதை ஓட்டியவனையும் கடலிலே வீசியெறிந்தார்.”
22 ௨௨ பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.
அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை.
23 ௨௩ அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா என அழைக்கப்பட்டது.
24 ௨௪ அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
25 ௨௫ மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது. பின்பு யெகோவா ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அங்கே அவர்களைச் சோதித்தார்.
26 ௨௬ நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.
அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார்.
27 ௨௭ பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.
அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.