< எஸ்தர் 4 >
1 ௧ நடந்த எல்லாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, சணலாடை அணிந்து, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள உரத்த சத்தத்துடன் அலறிக்கொண்டு,
இவைகளை எல்லாம் மொர்தெகாய் அறிந்தபோது, அவன் தனது உடைகளைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு பட்டணத்தின் நடுப்பகுதிக்குப் போனான். போகும்போது, மனங்கசந்து அழுது சத்தமாய் புலம்பிக்கொண்டு போனான்.
2 ௨ ராஜாவின் அரண்மனை வாசல்வரை வந்தான்; சணலாடை அணிந்தவனாக ராஜாவின் அரண்மனை வாசலுக்குள் நுழைய ஒருவனுக்கும் அனுமதி இல்லை.
ஆயினும் அவன், அரச வாசல் வரைக்குமே போனான். ஏனெனில் துக்கவுடை உடுத்திய எவனும் உள்ளே போக அனுமதிக்கப்படுவதில்லை.
3 ௩ ராஜாவின் உத்திரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் யூதர்களுள்ள பகுதிகளில் பெரிய துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் சணலாடை அணிந்து சாம்பலில் கிடந்தார்கள்.
கட்டளையும், அரசனின் உத்தரவும் போயிருந்த ஒவ்வொரு மாகாணத்திலும் யூதர்கள் மத்தியில் பெரிய துக்கம் ஏற்பட்டது. அவர்கள் உபவாசித்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். அநேகர் துக்கவுடை உடுத்தி சாம்பலில் கிடந்தார்கள்.
4 ௪ அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான்.
எஸ்தரின் தோழிகளும், பணிவிடைக்காரர்களும் அவளிடம் வந்து மொர்தெகாயைப் பற்றிச் சொன்னபோது, அரசி மிகவும் துக்கமடைந்தாள். அவனுடைய துக்கவுடைக்குப் பதிலாக உடுத்திக்கொள்வதற்கு உடைகளை அவள் அனுப்பியபோது அவன் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
5 ௫ அப்பொழுது எஸ்தர் தன்னுடைய பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய அதிகாரிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைத்து: காரியம் என்ன? அதின் காரணம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடம் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.
அப்பொழுது எஸ்தர், தனது ஏவலாளனாய் இருந்த அரச அதிகாரிகளில் ஒருவனான ஆத்தாகை அழைத்தாள். அவள் மொர்தெகாயின் துக்கம் என்ன என்றும், அதன் காரணம் என்ன என்றும் அறிந்துவர அவனுக்குக் கட்டளையிட்டாள்.
6 ௬ அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரண்மனை வாசலுக்கு முன்னான பட்டணத்து வீதியில் இருக்கிற மொர்தெகாயிடம் புறப்பட்டுப்போனான்.
அப்படியே ஆத்தாகு அரச வாசலுக்கு முன்பாகவுள்ள நகரத்தின் திறந்த சதுக்கத்தில் இருந்த மொர்தெகாயிடம் போனான்.
7 ௭ அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதர்களை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கருவூலத்திற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அல்லாமல்,
மொர்தெகாய் தனக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் அவனிடம் சொன்னான். அத்துடன் யூதர்களை அழிப்பதற்காக அரச திரவிய களஞ்சியத்திற்கு ஆமான் கொடுப்பதாகச் சொன்ன பணத்தின் சரியான தொகையையும் அறிவித்தான்.
8 ௮ யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடம் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் தைரியமாக ராஜாவிடம் போய், அவனிடம் தன்னுடைய மக்களுக்காக விண்ணப்பம்செய்யவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான்.
அத்துடன் எஸ்தருக்குக் காண்பித்து விளக்கும்படி, சூசானில் வெளியிடப்பட்டிருந்த யூதர்களை ஒழிப்பதற்கான கட்டளையின் ஒரு பிரதியையும் கொடுத்தான். அரசனின் முன்னிலையில் எஸ்தர் போய், இரக்கத்திற்காக மன்றாடி, தனது மக்களுக்காகக் கெஞ்சும்படி அவளைத் தூண்டவேண்டுமென்று மொர்தெகாய் அவனுக்குச் சொன்னான்.
9 ௯ ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.
ஆத்தாகு திரும்பிப்போய் மொர்தெகாய் சொன்னதை எஸ்தருக்கு அறிவித்தான்.
10 ௧0 அப்பொழுது எஸ்தர் ஆத்தாகிடம் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது:
அப்பொழுது எஸ்தர் ஆத்தாகுவிடம், மொர்தெகாயினிடத்தில் போய்ச் சொல்லும்படி அறிவுறுத்திச் சொன்னதாவது:
11 ௧௧ யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
“அரசனால் அழைக்கப்படாமல் அவருடைய உள் மண்டபத்துக்குள் அவரை நெருங்கி வருகிற, எந்த ஆணையோ பெண்ணையோ குறித்து, அரச சட்டம் ஒன்று உண்டு. அப்படி நெருங்கி வருகிற அந்த ஆள் கொல்லப்படவேண்டும் என்பதே அந்தச் சட்டம். அரசரின் எல்லா அதிகாரிகளும் அரசருடைய மாகாணத்திலுள்ள மக்களும் இதை அறிவார்கள். அரசன் தனது தங்கச் செங்கோலை அந்த ஆளிடம் நீட்டி, அவனுடைய உயிரைத் தப்புவித்தால் மட்டுமே அந்த ஆள் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவான். நானோ அரசனிடம் போகும்படி அழைக்கப்பட்டு முப்பது நாட்கள் ஆகிவிட்டன” என்றாள்.
12 ௧௨ எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.
எஸ்தரின் வார்த்தைகள் மொர்தெகாய்க்கு அறிவிக்கப்பட்டபோது,
13 ௧௩ மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே.
மொர்தெகாய் ஆத்தாகுவிடம் சொல்லியனுப்பிய மறுமொழியாவது: “நீ அரசரின் வீட்டில் இருப்பதால், எல்லா யூதர்களிலுமிருந்து நீ மட்டும் தப்பிக்கொள்வாய் என்று எண்ணாதே.
14 ௧௪ நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
நீ இந்தக் காலத்தில் மவுனமாய் இருந்தால், யூதருக்கு விடுதலையும், மீட்பும் இன்னொரு இடத்திலிருந்து வரும். ஆனால் நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். இப்படிப்பட்ட ஒரு காலத்திற்காகத்தான், நீ அரச பதவிக்கு வந்திருக்கிறாயோ என்று யாருக்குத் தெரியும்.”
15 ௧௫ அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது:
அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும்,
16 ௧௬ நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
“நீர் போய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுகூட்டி எனக்காக உபவாசம் பண்ணும். இரவும் பகலுமாக மூன்று நாட்களுக்கு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம். உங்களோடு நானும் எனது தோழிகளும் உபவாசம் பண்ணுவோம். இதைச் செய்து முடித்தபின் சட்டத்திற்கு எதிராய் இருந்தாலும் நான் அரசனிடம் போவேன். நான் அழிவதானால் அழிவேன்” என்று சொன்னாள்.
17 ௧௭ அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தான்.
அப்படியே மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தரின் அறிவுறுத்தலின்படியெல்லாம் செய்துமுடித்தான்.