< உபாகமம் 6 >
1 ௧ “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், நீயும் உன் மகனும், மகளும், நான் உனக்கு கொடுக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு,
யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளும், விதிமுறைகளும், சட்டங்களும் இவையே. இவற்றை உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை நியமித்திருக்கிறார்.
2 ௨ நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே.
நான் உங்களுக்குக், கொடுக்கிற அவருடைய இந்த விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கைக்கொண்டால், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளும் வாழும் காலமெல்லாம் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பீர்கள். நீங்கள் நீடித்த வாழ்வையும் அனுபவிப்பீர்கள்.
3 ௩ இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் பெருகுவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யக் கவனமாயிரு.
இஸ்ரயேலே, கேளுங்கள், கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். கீழ்ப்படிந்தால் நீங்கள் நலமாயிருப்பீர்கள்; பாலும் தேனும் வழிந்தோடுகிற நாட்டில், உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே மிகுதியாய்ப் பெருகுவீர்கள்.
4 ௪ “இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.
இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா.
5 ௫ நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக.
உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து.
6 ௬ இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக.
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும்.
7 ௭ நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,
அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள்.
8 ௮ அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக.
அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள்.
9 ௯ அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள்.
10 ௧0 “உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன.
11 ௧௧ நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,
நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.
12 ௧௨ நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு.
அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.
13 ௧௩ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக.
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவர் ஒருவரையே பணிந்துகொள். அவருடைய பெயரைக்கொண்டு மட்டுமே சத்தியம் செய்யுங்கள்.
14 ௧௪ உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.
உங்களைச் சுற்றியிருக்கிற மக்களின் தெய்வங்களாகிய வேறு தெய்வங்களைப் பின்பற்றவேண்டாம்.
15 ௧௫ உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.
ஏனெனில் உங்கள் மத்தியிலே இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயிருக்கிறார். அவருடைய கோபம் உங்களுக்கு விரோதமாக எரியும்போது, பூமியிலே இராமல் அவர் உங்களை அழித்துப்போடுவார்.
16 ௧௬ “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள்.
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவாவைச் சோதிக்க வேண்டாம்.
17 ௧௭ உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக.
உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், அவர் உங்களுக்குக் கொடுத்த ஒழுங்குவிதிகளையும், விதுமுறைகளையும் கைக்கொள்ளக் கவனமாய் இருங்கள்.
18 ௧௮ நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும்,
யெகோவாவினுடைய பார்வையில் சரியானதையும் நலமானதையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நலமாய் இருப்பீர்கள். நீங்கள் யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு, வாக்குப்பண்ணிய அந்த நல்ல நாட்டிற்குள்போய், அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
19 ௧௯ யெகோவா தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக.
அப்பொழுது யெகோவா சொன்னதுபோலவே உங்களுக்கு முன்பாக உங்கள் பகைவர்களைத் துரத்திவிடுவார்.
20 ௨0 நாளைக்கு உன் மகன்: “நம்முடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
வருங்காலத்திலே உன்னுடைய மகன் உன்னிடம், “நம்முடைய இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற இந்த ஒழுங்குவிதிகள், விதிமுறைகள், சட்டங்கள், இவைகளின் கருத்து என்ன?” என்று கேட்டால்,
21 ௨௧ நீ உன் மகனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம்; யெகோவா பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
நீ அவனிடம் சொல்லவேண்டியதாவது: “நாங்கள் எகிப்திலே பார்வோனுடைய அடிமைகளாயிருந்தோம். ஆனால் யெகோவா எங்களைத் தமது வலிய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
22 ௨௨ யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து,
மேலும், பெரிதும் பயங்கரமுமான, அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் எகிப்தின்மேலும், பார்வோனின்மேலும், அவன் குடும்பத்திலுள்ள யாவர்மேலும் யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாகவே அனுப்பினார்.
23 ௨௩ தாம் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுப்பதற்காக எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச்செய்தார்.
ஆனால், இறைவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக, எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
24 ௨௪ இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் யெகோவா நமக்குக் கட்டளையிட்டார்.
இந்த விதிமுறைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நமது இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அப்பொழுது நாம் இன்று இருப்பதுபோலவே என்றும் செழிப்புற்று, உயிருடன் காக்கப்படுவோம்.
25 ௨௫ நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
எங்கள் இறைவனாகிய யெகோவா, நமக்குக் கட்டளையிட்டபடியே அவருக்கு முன்பாக இந்த சட்டம் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிய கவனமாயிருந்தால் அதுவே நமக்கு நீதியாய் இருக்கும்.”